பெரியார் பிறந்த தின சிறப்பு விழா மற்றும் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் நூல் வெளியிட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெரியார் குறித்தும், அவரின் செயல்பாடுகள் குறித்துப் பேசினார். அவர் பேசியதாவது, " பெரியார் பிறந்த தினம் இன்றைக்குச் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியாரைப் பெரியார் என்று அழைத்தால் அவரின் புகழ் அதிகரித்துவிடுமோ என்று அஞ்சி, சிறியோர் சிலர் அவரை ஈவேரா என்கிறார்கள். பெரியாருக்கு ஏன் அத்தனை உயரமான சிலை என்று சில குள்ளமான நபர்கள் கேட்கிறார்கள். இப்போதும் சிலர் பெரியார் சிலைகளை உடைக்கிறார்கள். காவிச்சாயம் பூசி அவரை அவமானப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். காவி என்றால் அவமானம் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. சாகும் வரையில் சாதியை எதிர்த்துப் போராடிய ஐயா பெரியாரை நாயக்கர் என்று சிலர் நக்கல் அடிக்கிறார்கள். இறந்து 50 ஆண்டுகளை நெருக்கும் இந்த வேலையிலும் பெரியார் அவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்றால் அதற்கு என்ன காரணம் இருக்கிறது.
நம்முடைய ஆசிரியர் மிக அழகாகக் கூறுவார், " பெரியாருக்கு அசையும் சொத்தும் உண்டு, அசையா சொத்து உண்டு, நாமெல்லாம் அசையும் சொத்து, அவர் கொடுத்துவிட்டுப் போயிருக்கின்ற சமூகநீதி அசையா சொத்து" என்பார். இது அத்தனையும் உணர்ந்ததால் தான் கடந்த 6ம் தேதி நம்முடைய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெரியார் பிறந்த தினம் சமூக நீதி நாள் என அறிவித்தார். இந்த அறிவிப்பு இன்னமும் பலருக்குப் பிடிக்கவில்லை. இன்றைக்கு ஒரு நாளிதழில் நடுப்பக்க கட்டுரை வெளிவந்துள்ளது. அதை எழுதியவர், ஈவேராவின் பிறந்த நாளை எதற்குச் சமூகநீதி நாள் என்று அழைக்கிறார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளார். ஜப்பானில் உள்ளவர்களுக்கே பெரியாரைப் பற்றித் தெரிந்திருக்கின்ற போது, இந்த சனாதனவாதிகளுக்குத் தெரியாமல் போய் உள்ளது. ஜப்பான் காரர்களை இந்த விழாவுக்கு அழைத்திருக்கலாம் போல, அவர்களுக்குப் பெரியாரின் அருமை புரிந்திருக்கிறது. இவர்களுக்குப் புரிய வைக்க வேண்டிய வேலை நம்முடையதும் அல்ல. அதற்கான அவசியம் இல்லை. அவர்கள் திருந்தவும் மாட்டார்கள். ஆசிரியர் அவர்கள் 'கற்போம் பெரியாரியம்' என்ற புத்தகத்தை எழுதி முடித்திருக்கிறார். அந்த புத்தகத்தை முழுவதும் படித்து முடித்துவிட்டேன். அந்த புத்தகம் ஆய்வு நூல் அல்ல, அறிமுக நூல். நம் எல்லோருக்கே அது பாடநூல். பெரியாரை ஏற்கனவே படித்திருந்தாலும் நாம் அனைவரும் மீண்டும் அந்த புத்தகத்தைப் படிக்க வேண்டும்.
அதை நாம் படித்தால் தான் அவர் நிஜமாகவே ஆசிரியர் என்று நமக்குத் தெரியவரும். அவர் விடுதலையின் ஆசிரியர் மட்டும் அல்ல, நமக்கு பெரியாரியத்தைச் சொல்லிக்கொடுக்கின்ற நிஜமான ஆசிரியராக அந்த புத்தகத்தைப் படித்து முடித்தால் நமக்கு அவர் தெரிவார். அந்த புத்தகத்தில் அவர் மொழிக்காகக் கட்சி தோன்றியுள்ளது, வர்க்கத்துக்காகக் கட்சி தோன்றி இருக்கிறது, நிலத்திற்காகக் கட்சி தோன்றி இருக்கிறது, ஆனால் சுயமரியாதைக்காக ஒரு கட்சி உலகத்தில் எங்கேயாவது தோன்றி இருக்கிறதா என்று கேட்கிறார். அதில் ஒரு தகவலை ஆசிரியர் கூறியுள்ளார். பெரியார் அவர்கள் பத்து வயதாக இருக்கும் போது அவர்கள் வீட்டிலிருந்தவர்கள் பள்ளிக்குச் செல்லும் போது தாகம் எடுத்தால் மேல் சாதியினர் வீட்டில் தண்ணீர் வாங்கி குடி என்று கூறியுள்ளனர். பெரியார் அவர்கள் ஒருமுறை தண்ணீர் தாகம் எடுக்கவே, ஒருவருடைய வீட்டிற்குச் சென்று தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீரைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு வாய்ப் படாமல் குடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நீர் அருந்திய பிறகு உள்ளிருந்த சிறிது தண்ணீர் எடுத்து வந்து அந்த பாத்திரத்தில் தெளித்துவிட்டு பிறகு அதனை எடுத்துச் சென்றுள்ளனர். இது பெரியாரைச் சுருக்கென்று தைத்துள்ளது. அதுதான் இன்று நாம் இந்த இடத்தில் நிற்பதற்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.