மனித வாழ்க்கைல பார்ப்பதற்கு அலுத்துப்போகாத மூன்று விஷயங்கள் கடல், விமானம், ரயில் அதிலும் முக்கியமானது கடல். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் அங்கு பொழுது போக்கலாம். அதனால ரிலாக்ஸ் பண்ணனும்னா கடலுக்கு போனாலே போதும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை நீர். காலடியில் உவர் மணல், மூக்கை துளைக்கும் உவர்காற்று இதுவே நமக்கு ரிலாக்ஸ் செய்ய போதுமானதாக இருக்கும். மெரினா பீச்சே நமக்கு அவ்வளவு ரிலாக்ஸ கொடுக்கும், மெரினா பீச்சவிட வித்தியாசமான பீச் வேற என்னென்ன இருக்குனு பார்ப்போம். வாருங்கள் ஒரு பீச் டூர் (beach tour) போகலாம்.
நாம் முதலில் விமானத்தின் மூலம் ஒரு கடற்கரைக்கு செல்வோம். அதெப்படி விமானம் மூலம் கடற்கரைக்கு செல்லமுடியும் என கேட்கிறீர்களா. இந்த கடற்கரையில்தான் விமான நிலையம் உள்ளது. இந்த கடற்கரையை பொறுத்தவரை நாம் விமானத்தில் இருப்பதுதான் நல்லது. ஏனெனில் விமானம் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும் நம் தலை உயரத்தில்தான் விமானம் பறக்கும். அதுமட்டுமின்றி விமான மோட்டாரில் இருந்துவரும் காற்று மனிதனையே வீசிவிடும். அந்தளவிற்கு அருகிலுள்ளது இந்தக் கடற்கரை. இது பிரான்சின் செயின்ட் மார்ட்டின் என்ற இடத்தில் உள்ளது.
அடுத்தது ஹவாய் தீவில் உள்ளது பாப்பாகோலியா கடற்கரை, இந்த கடற்கரையில் மண் பச்சை நிறத்தில்தான் இருக்கும். அருகில் பார்க்கும்போது சின்னச்சின்ன வைரங்கள் போல இந்த மண் காட்சியளிக்கும். இந்த கடற்கரைக்கு அருகில் ஒரு எரிமலை உள்ளது. அதிலிருந்து வரும் நெருப்பு குழம்பு கடலில் கலக்கும்போது, நெருப்பு குழம்பில் உள்ள பச்சை கனிமங்கள் யாவும் கடற்கரையில் தங்கிவிடுகிறது. இதனால்தான் இந்த மண் பச்சை நிறத்தில், பாசி படிந்தது போல் இருக்கிறது.
மாலத்தீவுகளின் கடல்களில் தண்ணீர் கலங்கும்போது ஒரு வித நீல ஒளி ஏற்படும். இந்த ஒளிக்கு "உயிர் பொருள்கள் வெளியேற்றும் ஒளி" (bioluminescence) என்று பெயர். "பிளூரெஸ்ஸ்ண்ட் ப்ளங்க்டோன்" என்ற கடல் உயிரி அதிகளவில் காணப்படுவதுதான் இதற்கு காரணம். கடல் அலைகளாலும், நீரை கலக்குவதாலும் இந்த உயிரிக்கு தொந்தரவு ஏற்படுவதால் இது நீல நிறமாக மாறுகிறது. இது கடலுக்கு ஒரு கவர்ச்சிகர தோற்றத்தை அளிக்கிறது. இரவில் இது நன்றாக தெரியும்.
இரவு, கடலுக்கு சென்றாலே குளிராகதான் இருக்கும் அப்படி உங்களுக்கு குளிர ஆரம்பித்துவிட்டால் நாம் செல்லவேண்டிய அடுத்த கடல் இதுதான். நியூசிலாந்து பெனிசுலாவில் இருக்கும் ஹாட் வாட்டர் பீச் இங்கு இயற்கையாகவே தண்ணீர் சூடாக இருக்கும். இங்குள்ள கடற்கரையில் சிறிது பள்ளம் தோண்டினால் போதும். அதிலிருந்து மிதமான சூட்டுடன் நீரூற்று வெளிவரும். இதில் சந்தோஷமாக இளம் சூட்டுடன் உங்கள் பொழுதை கழிக்கலாம்.
கடற்கரைனாலே ரொம்ப வெட்டவெளியாதான் இருக்கணுமா. வாங்க ஒரு மறைவான இடத்துக்கு போவோம். நாம் அடுத்து செல்ல இருப்பது தி ஹிடன் பீச். நிலத்துக்கடியில் இருக்கும் எரிமலை வெடிப்பால் இது உருவானது என்றும், 1900களில் இருந்த மெக்ஸிகோ அரசு குண்டு வெடிப்பு சோதனை நடத்தியபோது உருவானது என்றும் இரண்டு கருத்துகள் இது உருவாக காரணமாக கூறப்படுகிறது. இது தற்போது மிக பிரபலமான கடற்கரையாக உள்ளது. இங்கு வருபவர்களால் மீன்கள் அழிந்துவருவதால் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த கடல் கொஞ்சம் வித்தியாசமானது இத்தனை கடலுக்கு போனப்ப உங்களுக்கு மூழ்கிவிடுவோம்னு ஒரு பயம் இருந்திருக்கும். ஆனால் இந்தக்கடல்ல நீங்களே வலுக்கட்டாயமா மூழ்கினாலும் மூழ்க முடியாது. இந்தக் கடலில் உப்பின் அளவு அதிகமாக உள்ளதால்தான் மிதக்க முடிகிறது. இதனால் இங்கு வாழும் உயிரிகளின் எண்ணிக்கையும் குறைவு.