தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை நம்மோடு மூத்த பத்திரிக்கையாளர் எஸ்.பி. லட்சுமணன் பகிர்ந்துகொள்கிறார்
பாஜக வெல்ல முடியாத கட்சியல்ல என்பதை வார்த்தையால் மட்டும் சொல்லாமல் அதற்கான செயல்வடிவத்தைக் கொடுக்கும் பணிகளில் எதிர்க்கட்சியினரின் கூட்டணி ஈடுபட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள பல்வேறு கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. எனவே இந்த கூட்டணி சீக்கிரம் கலைந்துவிடும் என்று பாஜக நினைத்தது. ஆனால் அது நடக்கவில்லை. காங்கிரஸ் கட்சியிடம் பெருந்தன்மை அதிகரித்துள்ளது. இந்தக் கூட்டணி வலுவடைந்து வருவதை அறிந்த பாஜக, மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்தது.
சரத்பவார் மீதும் சந்தேகப் பார்வை விழுந்தது. ஆனால் மும்பையிலேயே சிறப்பான ஒரு கூட்டத்தை நடத்திக்காட்டி விட்டனர். வரமாட்டார் என்று நினைத்த கெஜ்ரிவால் கூட இந்த அணியில் சேர்ந்துவிட்டார். உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் இந்தக் கூட்டணிக்கு வந்தது அங்கு மிகப்பெரிய அளவில் வலுசேர்க்கும். ஆனால் இந்தியா கூட்டணி செல்ல வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது. இவர்கள் பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது பாஜகவுக்கு சிறிய அளவில் பலம் தான். ஆனால் அது இந்தியா கூட்டணியை பெரிய அளவில் பாதிக்காது.
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது ஒரு காலத்தில் அமலில் இருந்தது. ஆனால் இப்போது அது சாத்தியமில்லை. அப்படியே இவர்கள் அதைக் கொண்டுவந்தாலும், தொங்கு சட்டமன்றம் அமைந்தால் கவர்னர் ஆட்சியை அமல்படுத்துவார்கள். இது ஜனநாயகமா? இவர்கள் முதலில் தேர்தல் ஆணையத்தை நடுநிலையாக செயல்பட விட வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது ஒரே நாடு ஒரே தேர்தல் என்கிற திட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். இப்போது ஆதரவு தெரிவிக்கிறார். இந்த திட்டம் சாத்தியமில்லாத ஒரு விஷயம்.
பாஜக ஊழல் செய்துள்ளதாக சிஏஜி அறிக்கை மூலம் தெரியவந்துள்ள விஷயங்களுக்கு பாஜக விளக்கமளிக்க வேண்டும். பாஜக செய்யும் ஊழல்கள் குறித்து அண்ணாமலை கவலைப்படுவதில்லை. அவரிடம் நேர்மை இல்லை என்று மக்களுக்கு தெரிந்ததால் தான் அவருடைய பாதயாத்திரை எடுபடவில்லை. ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கண்டறிய ஒரு குழுவைக் கூட பாஜக இன்று வரை அமைக்கவில்லை. 2ஜி விஷயத்தை வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஊழல் என்று மக்களிடம் பாஜக கொண்டுசேர்த்தது போல், பாஜகவின் ஊழல்களை எதிர்க்கட்சிகள் வெளிக்கொண்டுவர வேண்டும். இதற்கு மீடியாக்களும் உதவ வேண்டும்.
கீழே உள்ள லிங்கில் பேட்டியை முழுமையாகக் காணலாம்...