சமீபத்தில் வெளியான 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் 'விவசாயம் என்பது முற்றிலும் ஓய்ந்துவிட்ட தொழில் அல்ல, விவசாயிகள் அனைவருமே வறுமையில் இருக்கும் ஏழைகள் அல்ல, விவசாயம் செய்தாலும் நல்ல வருமானத்தை பெறலாம்' என்பதை காட்டியுள்ளது. படத்தின் பல காட்சிகளில் விவசாயத்தின் பெருமையை வசனங்கள் ,மூலமாகவும் வெளிப்படுத்தியிருந்தார் இயக்குனர் பாண்டிராஜ். இந்தப் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இது குறித்து இயக்குனர் பாண்டிராஜிடம் பேசியபோது அவர் பகிர்ந்தது...
"பொள்ளாச்சியில் இருந்து ஒரு விவசாயி எனக்கு தொலைபேசி மூலம் பேசினார்,"விவசாயி என்றாலே கஷ்டப்படுபவர்கள், கோமணம் கட்டிக்கொண்டு இருப்பவர்கள், எலிக்கறி சாப்பிடுபவர்கள் என்ற மாயை இருந்தது. ஆனால், நான் நன்றாகத்தான் சம்பாதிக்கின்றேன். விவசாயிகளை கெத்தாக காட்டியுள்ளீர்கள். எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் என்னுடைய வண்டிகள் அனைத்திலும் விவசாயி என்று எழுதிக்கொள்ள போகிறேன்" என்று அந்த விவசாயி என்னை வாழ்த்தினார்.
திரையரங்குகளில் விவசாயி பற்றிய வசனங்களின்போது மக்கள் அனைவரும் கைதட்டிக் கொண்டாடுகின்றனர். எந்த ஒரு துறையிலும் கஷ்டம் என்பது இருக்கத்தான் செய்கிறது. கஷ்டம் இல்லாத தொழில் எதுவும் இல்லை, ஆனால் விவசாயத்தில் அதிக கஷ்டங்களும் இருக்கு. அதை அரசாங்கம்தான் சரி செய்து விவசாயத்தைத் தூக்கி நிறுத்த வேண்டும். நானும் விவசாயிகளை கஷ்டப்படுகிறார்கள், எலிக்கறி சாப்பிடுகிறார்கள், வாழ்வதற்கே போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னால் வெளியில் இருந்து பார்ப்பவர்கள் விவசாயத்துக்குள் வரவே பயப்படுவார்கள்.
எனக்குத் தெரிந்த விவசாயிகள் பலர் என்னை தொடர்புகொண்டு, பாராட்டுகின்றனர். அவர்களுக்குள் ஒரு உறுத்தல் இருந்தது. கிட்டத்தட்ட இந்த சமூகத்தில் தலித்துகளையும் விவசாயிகளையும் ஒரே மாதிரிதான் பார்க்கின்றனர். இருவரையும் 'நீங்கள் அப்படித்தான், நீங்கள் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறீர்கள்' என்று சித்தரித்து வைத்திருந்தனர். நீங்கள் யார் அவர்களை அப்படி பார்ப்பதற்கு? இப்போது தலித் சமூகம் வெகுண்டு, வளர்ந்து வருகிறது, நாங்கள் அப்படிப்பட்டவர்கள் கிடையாது என்று. அதேபோலத்தான் விவசாயத்தையும் சொல்ல நினைக்கிறன். என்னுடைய நண்பர்களே விவசாயம் செய்து புல்லட், டிராக்டர் வைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த படத்தில் விவசாயி புல்லட் வைத்திருப்பதாக காட்சிப்படுத்தியதை வெளியே பலர் கிண்டல் கூட செய்கிறார்கள் . நீங்கள் என்ன விவசாயிகள் என்றால் சைக்கிளில் செல்பவர்கள் என்று நினைக்கிறீர்களா? பல விவசாயிகள் புல்லட் டிராக்டர் என்று வாகனங்களை வைத்திருப்பவர்களாகவும், லட்சக்கணக்கில் சம்பாதித்தும் மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்".