வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். செய்தியாளர்களின் கேள்விக்கு அவரின் பதில்கள் பின்வருமாறு,
மராட்டியத்தில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க முயற்சி செய்த நிலையில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இது திட்டமிட்டு எதிர்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கை. 18 நாட்களுக்கும் மேலாக பாஜக ஆட்சி அமைவதற்கு காத்திருந்த ஆளுநர், எதிர்கட்சிகளை சேர்ந்த யாருக்கும் முறையான கால அவகாசம் வழங்கவில்லை. அது அரசியல் அமைப்பு ரீதியாக தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். ஆளுநர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்க வேண்டும். அனைத்துக்கட்சிகளையும் சமமாக பார்க்க வேண்டும். இது மராட்டியத்தில் தவறாக முறையில் செயல்படுகிறது என்பது மட்டும் நூறு சதவீத உண்மை.
உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. உங்கள் கட்சி அதற்காக தயாராக உள்ளதா?
நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம். அவர்கள் முறையாக தேர்தலை நடத்தினால் நாங்கள் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெறுவோம். அதற்கான வேலைகளில் நாங்கள் தீவிரமாக இருக்கிறோம்.
பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்படும் என்று தமிழக அமைச்சர் அறிவித்துள்ளதை பற்றி?
நம்மை போன்ற பிள்ளை திருக்குறளுக்கு கொடுத்த முக்கியத்துவத்தின் வெளிப்பாடே அவரின் பேச்சு. பால் பாக்கெட்டுகளில் இதை எழுவதுதால் என்ன பயன் இருக்க போகிறது. பாலை ஊற்றிக்கொண்டு கவரை தூக்கி எறிந்துவிடுவார்கள். பாடத்திட்டத்தில் வையுங்கள். இப்போது திருக்குறளுக்கு காவிச்சாயம் அடிக்க பார்க்கிறா்கள். 2000 வருஷத்துக்கு முன்பு இந்தியா என்ற ஒரு நாடு உண்டா, சாதி மதம் இருந்ததா? அப்படி இருக்கையில் வள்ளுவனுக்கு சாதி சாயம் பூசுவதை எப்படி ஏற்றுக்கொள்வது. வரலாறு உள்ளவன் எழுதுகிறான், இல்லாதவன் திருடுகிறான்.
அமெரிக்காவில் ஓபிஎஸ்க்கு தினம் ஒரு விருது கொடுக்கிறார்கள். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கொடுக்கட்டுமே, நம்ம ஆளுக்குதானே கொடுக்கிறார்கள். இப்ப என்ன விருதெல்லாம் தகுதியின் அடிப்படையிலா கொடுக்கிறார்கள்? நம்ம ஆளுங்க வாங்கராங்க, நாமே பாராட்டவில்லை என்றால் எப்படி. டாக்டர் பட்டம் எல்லாம் இப்ப எப்படி கொடுக்கிறார்கள்? நம்ம தமிழ்நாட்டுகாரர்களை நாமே பாராட்டவில்லை என்றால் அடுத்தவர்களா பாராட்டுவார்கள். அமெரிக்காவில் கூட நம்ம பையன்கள்தான் விருது கொடுக்கிறார்கள். அமெரிக்க அரசாங்கம் ஒன்றும் கொடுக்கவில்லை, அவ்வளவு தான்.
உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவீர்களா அல்லது கூட்டணி வைத்து தேர்தல் களத்தை சந்திப்பீர்களா?
நான் யாரோடு கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க முடியும்? உங்களுக்கு தெரிந்தால் கூறுங்கள். நான் யாரோடும் இணைந்து தேர்தலை சந்திக்க முடியாது. நான் தனியாகத்தான் தேர்தலை எதிர்கொள்வேன். தனி மரம் தோப்பாகாதே? என்று கேட்கிறீர்கள். நான் தனிமரம் அல்ல. என்னை நம்பி 15 லட்சம் பேர் இருக்கிறார்கள். எனக்கு வாக்கு செலுத்தி இருக்கிறார்கள். அப்புறம் எப்படி என்னை தனிமரம் என்று கூறுவீர்கள். நான் என்னை வலிமையுள்ளவனாக என்னை நினைக்கிறேன். என்னை நம்பி மக்கள் வாக்களிக்கிறார்கள். அதனால் தேர்தலை சந்திப்பதில் எங்களுக்கு எந்த பயமும் இல்லை.