நாகையில் தமிழக கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது, சசிகலா விடுதலைக்குப் பிறகு யார் அ.தி.மு.க.-வை வழிநடத்துவார்கள் எனச் செய்தியாளர்களின் கேள்விக்கு, ”சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் அ.தி.மு.க.-வை யார் வழி நடத்துவது என்பதைக் கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும். நான் சாதாரணமான மாவட்டச் செயலாளர். இதில் எந்தக் கருத்தும் கூறமுடியாது” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமாரிடம், ஓ.எஸ்.மணியன் தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது. அப்போது, ஓ.எஸ்.மணியன் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து. அ.தி.மு.க.-விலோ, ஆட்சியிலோ சசிகலாவுக்கு இடமில்லை. சசிகலா இல்லாமல் அ.தி.மு.க. ஆட்சியை நடத்துவது தான் எங்கள் முடிவு. சசிகலா விவகாரத்தில் ஏற்கனவே கட்சி என்ன முடிவு எடுத்ததோ அதுதான் தொடரும். ஒரு குடும்பத்தைத் தவிர மற்றவர்கள் அ.தி.மு.க.-வுக்கு வரலாம் என்றார்.
அமைச்சர்கள் மாறுபட்ட கருத்துகளை கூறினாலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, சசிகலா ஆகஸ்ட் 14- இல் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாக பா.ஜ.க. பிரமுகர் ஆசிர்வாதம் ஆச்சாரி ட்விட் போட்டதும் முதலில் பரபரப்பானது எடப்பாடிதான்.
இதுபற்றி அவர் விசாரிக்க, உளவுத்துறையோ, சசிகலா ரிலீஸ் இன்னும் உறுதி செய்யப்படவில்லை எனத் தகவல் சொல்லியிருக்கிறது. அதன் பிறகு அவர் அது பற்றி பெரிதாக ரீயாக்ட் பண்ணவில்லை. இப்ப சசிகலா விசயத்தில் எடப்பாடி பட்டும் படாமலும் நடந்துகொண்டாலும், அவர் ரிலீஸானால் எடப்பாடிதான் அவரை முதல் ஆளாக நின்னு வரவேற்பார் என அ.தி.மு.க. சீனியர்களே இப்போது கிண்டலடிக்கிறார்கள்.
சசிகலா ரீலீஸ் ஆவது இன்னும் உறுதியாகவில்லை என சிறைத்துறை தரப்பு சொல்லும்போது, எந்த அடிப்படையில் ஆச்சாரி இப்படிச் சொல்லியிருக்கார்? சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் நன்னடத்தை அடிப்படையில் சிறைக் கைதிகளை விடுதலைச் செய்வது வழக்கமான நடைமுறைதான். ஆனால் கர்நாடக சிறைத் துறையின் சுதந்திரதின ரிலீஸ் பட்டியலில் இந்த நிமிடம் வரை சசிகலாவின் பெயர் இல்லை. பிறகு எப்படி ஆசிர்வாத ஆச்சாரி இப்படி ஒரு ட்விட்டை போட்டார் என அவர் நண்பர்கள் தரப்பில் விசாரித்தபோது, அண்மையில் பா.ஜ.க. மூத்த தலைவர் ஒருவரை அவர் சந்திக்கப் போயிருந்தார் எனவும், அப்போது யாரிடமோ ஆகஸ்ட் 14- இல் சசிகலா ரிலீஸ் ஆவார் எனவும் அந்தத் தலைவர் சொல்லிக் கொண்டிருந்ததைக் காதில் வாங்கிய ஆச்சாரி, இப்படியொரு ட்விட்டைப் போட்டுள்ளார் என்றும் கூறுகிறார்கள்.