தமிழ் திரையுலகத்தினர் நடத்திய போராட்டம் ஐம்பது நாட்களுக்குபின் தற்போதுதான் முடிவுக்கு வந்து படங்கள் ரிலீசாகத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், நீண்ட நாள் கழித்து திரையரங்கு சென்றவர்களுக்கு ஒரே அதிர்ச்சி. தனியார் விளம்பரமோ அல்லது அரசு விளம்பரமோ திரையரங்கில் போடுவது வழக்கமான ஒன்றுதான். தி.மு.க வந்தாலும் அ.தி.மு.க வந்தாலும் இருவரும் அவரவர் செய்த சாதனைகளை(?) திரையரங்கில் போடுவார்கள். ஆனால் இந்த விளம்பரங்கள் மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருந்தாலும் இந்த அளவிற்கு ஆனதில்லை. அந்த அளவிற்கு விமர்சனத்திற்குள்ளாகியிருக்கிறது இந்த விளம்பரம். அதுதான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்த சாதனைகளை(?) விளக்கும் வகையில் தற்போது திரையரங்குகளில் போடப்பட்டு வரும் அரசு விளம்பரம்.
இந்த விளம்பரம் இணையவாசிகளுக்கும், மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்போல் அமைந்துவிட்டது. அந்த விளம்பரத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை கிடைத்திருக்கும். அதற்காக அவர் கோவிலுக்கு குடும்பத்துடன் அர்ச்சனை செய்ய போவார். அங்கு அவரது தோழியும் வந்திருப்பார். அப்போது அரசு வேலை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். இனி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பார்.
அப்போது வரும் அர்ச்சகர் யார் பெயருக்கு அர்ச்சனை செய்யவேண்டும் என்பார், அதற்கு அந்தப்பெண்ணின் அப்பா பெயர், நட்சத்திரம் எல்லாம் சொல்வார். ஆனால் அந்தப்பெண் சாமி பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்பார். அர்ச்சகர் எந்த சாமி பெயருக்கு என்றவுடன் எனக்கு அரசு வேலை அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஐயா பெயருக்கு என்றவுடன்.... திரையரங்கில் உள்ளவர்கள் எல்லாம் விரக்தியில் கூச்சலிடுகிறார்கள். இந்த விளம்பரம் தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. மீம்ஸ் கிரியேட்டர்கள் புத்தர், இயேசு, மகாவிஷ்ணு என்று அவர்களின் முகத்தை நீக்கிவிட்டு எடப்பாடி பழனிசாமியின் முகத்தை அதில் பொருத்தியுள்ளனர்.