அண்மையில் நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில், பா.ஜ.க. பெரும் வெற்றி பெற்றுவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சி மண்ணை கவ்வியது என்றும் சில ஊடகங்கள் எழுதுகின்றன. மக்களில் ஒரு பகுதியினரும் அதனை நம்புகின்றனர். ஐந்து மாநிலங்களில், மூன்றில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்பதை வைத்து இப்படி விமர்சனங்கள் வெளிப்படுகின்றன. அந்த வெற்றிக்குப் பின்னால் இருக்கும் சில உண்மைகளை வேறு சில கோணங்களில் பார்த்தால்தான், உண்மை நமக்கு புரியும் என்கிறார் திராவிடர் கழக மூத்த தலைவர் சுப.வீரபாண்டியன்.
மேலும் அவர், இந்தத் தேர்தல் முடிவுகளை விமர்சனம் செய்யும் வலதுசாரிகள், இது பா.ஜ.க.வின் வெற்றி என்றும், காங்கிரஸின் தோல்வி என்றும் சொல்வதோடு நிறுத்திவிடாமல், சனாதனம் பற்றி உதயநிதி பேசியதால்தான் காங்கிரஸ் இப்படி ஒரு தோல்வியைச் சந்தித்தது என்றும் சேர்த்துச் சொல்கிறார்கள். அங்குதான் இருக்கிறது ஒரு நுட்பமான பஞ்சகம். இந்தக் கூற்றுகளில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதைப் பார்ப்பதற்கு முன்பு, தேர்தல்களில் கட்சிகள் பெற்ற இடங்களை மட்டும் பார்க்காமல், அவை பெற்ற வாக்குகளையும் நாம் கொஞ்சம் பார்க்கலாம்!
இதோ அந்தப் புள்ளி விவரம், வாக்குகளின் எண்ணிக்கையைச் சற்று கூர்ந்து கவனித்தால், சில உண்மைகள் நமக்குப் புரியும்!
தெலங்கானா, மிசோரம் இரண்டு மாநிலங்களையும் விட்டுவிட்டு பா.ஜ.க. வெற்றி பெற்ற மூன்று மாநிலங்களில் மட்டும் இரண்டு கட்சிகளும் (பா.ஜ.க., காங்கிரஸ்) பெற்றிருக்கும் வாக்குகள் 4.48 கோடியும், 3.98 கோடியும் ஆகும். அதாவது பா.ஜ.க. மூன்று மாநிலங்களிலுமாகச் சேர்த்து 50 லட்சம் வாக்குகள் மிகுதியாக பெற்றிருக்கிறது. இது பெரிய வெற்றிதான், நாம் மறுக்கவில்லை. ஆனால் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் பெற்றுள்ள வாக்குகளையும் சேர்த்துத்தானே பார்க்க வேண்டும். மிசோரமிலாவது இரண்டு மாநிலக் கட்சிகளுக்கு இடையில்தான் கடும் போட்டி நிலவியது. ஆனால் தெலங்கானாவில் அப்படி இல்லை. எனவே தெலங்கானாவில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளை மட்டுமாவது நாம் சேர்த்துப் பார்க்க வேண்டும். அதுதான் சரியாக இருக்கும்.
அப்படிப் பார்க்கும்போது, தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 92 லட்சம் வாக்குகளையும், பா.ஜ.க. வெறும் 32 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ளன. இரண்டுக்கும் இடையில் 60 லட்சம் வாக்குகள் வித்தியாசம். இப்போது நான்கு மாநிலத் தேர்தல்களிலும், இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி ஏறத்தாழ 10 லட்சம் வாக்குகள் பா.ஜ.க.வைவிட கூடுதலாகப் பெற்றிருப்பது புலப்படும். மிசோரமில் இரண்டு கட்சிகளும் பெற்றுள்ள வாக்குகளைக் கூட்டினால், காங்கிரஸ் கட்சியின் வாக்குகள் மேலும் கூடுதலாக ஆகின்றன. உண்மை இவ்வாறிருக்க, பா.ஜ.க. வெற்றி பெற்றுவிட்டது, காங்கிரஸ் தோற்றுவிட்டது என்று சொல்வது எப்படி முழு உண்மை ஆகும்?
இவற்றைத் தாண்டி, இந்தத் தேர்தல் முடிவுகளுக்குள் எந்தத் தொடர்பும் இல்லாத உதயநிதியை உள்ளே இழுத்துக்கொண்டு வருவதன் நோக்கம் என்ன என்று நாம் பார்க்க வேண்டும். சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி பேசிய காரணத்தால்தான், காங்கிரஸ் கட்சி தோற்றுவிட்டது என்று, வெட்கமே இல்லாமல் ஒரு பொய்யைச் சொல்கின்றனர். அதாவது, சனாதனத்தின் மீது ஒரு சிறு விமர்சனத்தை முன்வைத்தால் கூட, மக்கள் எதிராகத் தீர்ப்பளித்துவிடுவார்கள் என்பது போன்ற ஓர் அச்சுறுத்தலை உருவாக்குவதுதான் அதன் உள்நோக்கம்.
சனாதனத்தை விமர்சித்ததால் தான் இப்படித் தேர்தல் முடிவுகள் வந்துள்ளன என்னும் முழுப் பொய்யை, உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட, சனாதனத்தை எதிர்த்த உதயநிதி ஆதரித்த காங்கிரஸ் கட்சி தானே 10 லட்சம் வாக்குகளைக் கூடுதலாகப் பெற்றிருக்கிறது. அப்படியானால், சனாதனத்தை எதிர்ப்பதைத்தான் பெரும்பான்மையான மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று நாம் முடிவுக்கு வந்துவிடலாமா?
சனாதன ஆதரவோ, எதிர்ப்போ இந்தத் தேர்தல் முடிவுகளைக் கொண்டு வரவில்லை என்பதுதான் உண்மை. பிறகு ஏன் அவர்கள் இப்படி ஒரு காரணத்தைக் கற்பிக்கின்றனர்? அங்குதான் அவர்களின் உள்நோக்கமும், மத அடிப்படையிலான பாசிசமும் தொக்கி நிற்கின்றன. கடவுள், மதம், வழிபாட்டு முறைகள் ஆகியனவெல்லாம் அவரவருடைய தனிப்பட்ட நம்பிக்கை, வாழ்க்கைச் சூழல், அனுபவத்தைப் பொறுத்தவை. ஆனால் பா.ஜ.க., திட்டமிட்டு மத அடிப்படையிலான அரசியலை இங்கு கட்டமைக்க விரும்புகிறது. இந்தியாவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்களுக்கான கட்சி தங்களின் கட்சி மட்டும் தான் என்பது போலவும், பிற கட்சிகள் எல்லாம் இந்து மதத்திற்கு எதிரானவை என்பது போலவும் ஒரு கருத்தை அவர்கள் உருவாக்க விரும்புகின்றனர். அப்படி செய்வதன் மூலம், பெரும்பான்மையினரின் வாக்குகளைத் தாங்கள் பெற்றுவிட முடியும் என்பதே அவர்களின் எண்ணம்.
இந்த மதவாத அரசியலைத் தமிழ்நாட்டிற்குள்ளும் கொண்டு செலுத்திவிட வேண்டும் என்னும் நோக்கத்தில் தான் திரும்பத் திரும்ப ஒரு கேள்வியை இங்கு அவர்கள் எழுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற மத விழாக்களுக்கு எல்லாம் வாழ்த்துகளைச் சொல்லும் தி.மு.க.வும், தமிழ்நாடு அரசின் முதல்வரும் ஏன் தீபாவளி உள்ளிட்ட இந்து மக்களின் விழாக்களுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்பதுதான் அந்த கேள்வி. நீண்ட நெடுநாட்களாக இந்தக் கேள்வியை அவர்கள் எழுப்பிக்கொண்டே இருக்கின்றனர்.
இந்த கேள்விக்கான உண்மையான விடையை, உள்நோக்கமுடைய அவர்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை என்றாலும், பொது மக்களுக்கு நாம் சொல்லியாக வேண்டிய கடமை இருக்கிறது. மற்ற மத விழாக்கள் எல்லாம், அவர்களின் இறைத்தூதர்கள் பிறந்த நாட்களைக் கொண்டாடும்போது, தீபாவளி என்பது ஒருவரைக் கொன்ற நாளைக் கொண்டாடுவதாக இருக்கிறது. அடுத்தவன் சாவைக் கொண்டாடும் அந்தப் பழக்கம் எப்போதும் தமிழர்களிடம் இல்லை. அது மட்டுமல்லாமல், இந்துக்களின் விழாக்களில் பெரும்பான்மையானவை, தேவ - அசுர யுத்தம் என்னும் கற்பனையில் உருவானவையாகவே உள்ளன.
தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் இங்கு குறிப்பிடப்படுகின்றவர்கள் யார் என்னும் வினாவிற்கு, அவர்களால் உண்மையான, தெளிவான விடையை ஒரு நாளும் சொல்ல முடியாது. பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் போரினையே அவர்கள் தேவ அசுர யுத்தம் என்கின்றனர். இதை ஆரிய திராவிடப் போர் என்பார் ஜவஹர்லால் நேரு.
இன்னொன்றையும் நாம் பார்க்கலாம். இயேசுநாதர், நபிகள் ஆகியோர் வரலாற்று மனிதர்கள். பிள்ளையார், ராமர், கிருஷ்ணர் ஆகியோர் புராணப் பாத்திரங்கள். இரண்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உண்டு. வரலாறு என்பது உண்மை, புராணம் என்பது நம்பிக்கை. ஒருவர் நம்பிக்கையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துவது, நாகரிகமும் இல்லை - ஜனநாயகமும் இல்லை.
இறுதியாக, "சூத்திரர்கள் யார்?' என்னும் நூலில், அண்ணல் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ள சில வரிகளோடு, இந்தக் கட்டுரையை நிறைவு செய்யலாம். "மேலை மதங்களின் பிரபஞ்சத் தோற்றம் குறித்த கருத்தாக்கத்தில், மனிதன் முக்கியத்துவம் பெறுகிறான். ஆனால் இங்கோ, ஒரு வருணம் அல்லது சாதி தான் அடிப்படை அலகாக இருக்கிறது'' என்கிறார் அண்ணல் அம்பேத்கர்.
ஆம்! இந்து மதம் என்பது கடவுளை விட, மதத்தை விட, வழிபாட்டு முறைகளை விட வருணத்தையும், சாதியையும்தான் தூக்கிப் பிடிக்கிறது. சாதி அடுக்குகளைக் கொண்டே, இந்து மதம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்னும் உண்மையை நாம் அனைவரும் உணர்ந்திட வேண்டும். அதை உணரும்போதுதான், பா.ஜ.க. என்பது பாசிசத்தின் மறுவடிவம் என்பதையும் நம்மால் உணர முடியும்.