அமமுக கொள்கைப்பரப்புச் செயலாளரும், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தங்கத் தமிழ்ச்செல்வன் நக்கீரன் இணையதளத்திற்கு பேட்டி அளித்தார்.
ஆண்டிப்பட்டி 67வது வார்டு மற்றும் பெரியகுளம் 197வது வார்டுகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது பற்றி...
எங்களைப் பொறுத்தவரையில் மறுவாக்குப்பதிவு தேவையில்லை. ஏப்ரல் 18 வாக்குப்பதிவின்போது பிரச்சனை என்று சொன்னவுடன் எல்லா வேட்பாளர்களும் அந்த வாக்குச்சாவடிகளுக்கு போய் பார்த்தோம். அப்போது மாவட்ட ஆட்சித் தலைவர் எந்த பிரச்சனையும் இல்லை. வாக்குப்பதிவு நடக்கட்டும் என்றார். வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. திடீரென்று 50 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு வருகிறது. ஏனென்று கேட்டால் தெரியவில்லை என்கிறார்கள். அடுத்த நாள் பார்த்தால் இரண்டு பூத்தில் மறுதேர்தல் என்கிறார்கள்.
இந்த மறு தேர்தலில் மிகப்பெரிய பண நடமாட்டம் வர வாய்ப்புள்ளது. ஆளும் கட்சி ஏற்கனவே ஓட்டுக்கு ரூபாய் இரண்டாயிரம், மூவாயிரம் கொடுத்துள்ளார்கள். இப்போது இரண்டு பூத்திலும் மூவாயிரம் அல்லது இரண்டாயிரத்து ஐநூறு ஓட்டுகள்தான் பதிய வாய்ப்புள்ளது. இதுக்கு ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கூட கொடுப்பார்கள்.
ஒரு ஓட்டுக்கு ரூபாய் ஒரு லட்சம் கொடுப்பார்களா? இதனை பொதுமக்கள் நம்புவார்களா?
ரூபாய் மூவாயிரம் கொடுக்கப்போகிறார்கள் என்றோம், அவ்வளவு ரூபாய் கொடுக்க முடியுமா என்று கேட்டீர்கள். கொடுத்தார்கள். அதனை போலீசும் பார்த்தது. தேர்தல் ஆணையமும் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?.
44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு மட்டும் எண்ணப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
தேர்தல் ஆணையம் எதைக் கேட்டாலும் விநோதமாக பதில் சொல்லுகிறது. 20 நாள் கழித்துதான் இதனை நாங்கள் பார்த்தோம். அதனால்தான் 13 பூத்துகளில் மறு வாக்குப்பதிவு, 44 வாக்குச்சாவடிகளில் ஒப்புகைச் சீட்டு மட்டும் எண்ணப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். எது எப்படியோ மே 23ஆம் தேதி ரிசல்ட் பதில் சொல்லும்.
இந்த விஷயத்தில் அரசு தலையீடு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா?
அரசு தலையீடு இருக்கத்தான் செய்கிறது. தேர்தல் ஆணையம் ஒரு திட்டத்தை போட்டால் கூட, அதனை செயல்படுத்துவது மாநில அரசின் அதிகாரிகள் மற்றும் போலீசார்தான். அதனால் நிச்சயமாக அரசுக்கு சாதகமாகத்தான் அதிகாரிகள் செயல்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை நம்பகத் தன்மையுடன் நடப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
நம்பகத்தன்மையுடன்தான் நடக்கணும். குறைந்தது ஒரு கவுண்டிங் நடக்கும்போது ஆயிரம் பேரை அதிமுகவினர் உள்ளே நுழைய உள்ளதாக தெரிகிறது. நாங்கள் அவ்வளவு பேரை கூப்பிட்டு போக முடியாது. போலீஸ் எப்படி பாதுகாப்பு கொடுக்கப்போகிறது என்று தெரியவில்லை. கலாட்டா வந்தால் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிமுக தோற்கும் நிலைக்கு வருவார்கள். அப்போது கலாட்டா நடக்க வாய்ப்புகள் உள்ளது. அதனால் தேர்தல் ஆணையம் முன்னெச்சரிக்கையாக எல்லா பூத்திலும் போதிய போலீசார்களை குவிக்க வேண்டும். சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். யாராவது பிரச்சனை செய்தால் அவர்களை குண்டர் சட்டத்தில் அடைப்பது போன்ற நடவடிக்கை எடுத்தால்தான் வாக்கு எண்ணிக்கை ஒழுங்காக நடக்கும்.
தினகரன் தனது அமமுகவை திமுகவிடம் முழுமையாக அடகு வைத்துவிட்டார் என்று தமிழிசை சௌந்திரராஜன் கூறியிருக்கிறார். ஸ்டாலின், தினகரன் ஏ மற்றும் பி டீமாக செயல்படுகிறார்கள் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
தமிழிசையும், பொன்.ராதாகிருஷ்ணனும் இப்படி பேசக்கூடாது. அதிமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று அப்பட்டமாக பேசியவர்கள். இன்றைக்கு அதிமுக ஆட்சி, பாஜகவின் அடிமை ஆட்சியாக போய்விட்டது. பெயர்தான் அதிமுகவே தவிர, பாஜகவின் அங்கம்தான் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி. அதனால்தான் இந்த துரோக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று அமமுகவை தொடங்கி தனியாக நிற்கிறோம். திமுகவுடன் கூட்டணி என்பது தவறான கருத்து. 23ஆம் தேதி தேர்தல் முடிவுக்கு பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்காது.
நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கூட்டணிக் கட்சிகள் பெரிய அளவில் ஈடுபடவில்லையே?
எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வந்தாலே கூட்டம் வரவில்லை. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வந்தால் எப்படி கூட்டம் வரும். அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் ரசிக்கவில்லை. இந்த தேர்தலில் அதிமுக, பாஜக கூட்டணி கடும் தோல்வியை சந்திக்கும்.
திமுகவும் அதிமுக ஆட்சியை கலைப்போம் என்கிறது, அமமுகவும் அதிமுக ஆட்சியை கலைப்போம் என்கிறது. ஒருவேளை திமுக பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பு வந்தால் அமமுகவின் நிலைப்பாடு என்ன?
திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் எப்படி ஓட்டு போடுகிறது என்று எங்களுக்கு தெரியாது. திமுக ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க மாட்டோம். அமமுக இந்த ஊழல் அதிமுக ஆட்சியை அகற்றுவதற்குத்தான் ஓட்டுப்போடுவோம். இதுதான் எங்களது நிலைப்பாடு.