Skip to main content

இலங்கையை வென்ற இராஜராஜ சோழன்! ஆதாரத்தை கண்டுபிடித்த அரசுப் பள்ளி மாணவி! 

Published on 13/12/2021 | Edited on 13/12/2021

 

Rajaraja Chola wins Sri Lanka! Government school student finds evidence!

 

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அரசுப் பள்ளி மாணவி கு. முனீஸ்வரி, முதலாம் இராஜராஜ சோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளைக் கண்டெடுத்துள்ளார்.

 

திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்களுக்குப் பழமையான காசுகள், பானை ஓடுகளை அடையாளம் காணவும், கல்வெட்டுகளைப் படிக்கவும், படியெடுக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், விடுமுறை நாட்களில் தங்கள் பகுதிகளில் உள்ள பழங்காலப் பொருட்கள், காசுகளை ஆர்வத்தோடு தேடி கண்டுபிடித்துவருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பள்ளி வளாகத்தில் சீனப்பானை ஓடுகளை மாணவர்கள் கண்டெடுத்தனர். இந்நிலையில், இப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்துவரும் திருப்புல்லாணியைச் சேர்ந்த கு. முனீஸ்வரி என்ற மாணவி, முதலாம் இராஜராஜ சோழன் பெயர் பொறித்த 3 ஈழக்காசுகளைக் கோரைக்குட்டம் என்ற ஊரில் கண்டெடுத்துள்ளார். 

 

இதுபற்றி இப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றச் செயலரும், தொல்லியல் ஆய்வாளருமான வே. ராஜகுரு கூறியதாவது, “வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் காசுகள் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டு வந்துள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் இராஜராஜ சோழன் வெற்றிகொண்டதன் பின்னணியில் ஈழக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை முதலாம் இராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்துங்க சோழன் காலம்வரை பயன்பாட்டில் இருந்துள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இக்காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. செம்பால் ஆன ஈழக்காசு, ஈழக்கருங்காசு எனப்படுகிறது. இங்கு கண்டெடுக்கப்பட்ட மூன்றும் செம்பால் ஆன ஈழக்கருங்காசுகள் ஆகும்.

 

Rajaraja Chola wins Sri Lanka! Government school student finds evidence!

 

இக்காசுகளின் ஒருபக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் நான்கு வட்டங்கள் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரின் இடதுகை அருகே தேவநாகரி எழுத்துகளில் ‘ஸ்ரீராஜராஜ’ என மூன்று வரிகளில் எழுதப்பட்டுள்ளது. இக்காசில் உள்ள மனிதன் இலங்கை காசுகளில் உள்ள உருவத்தை ஒத்திருக்கிறான். 

 

ஈழக்காசுகள் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரியபட்டினம், தொண்டி, களிமன்குண்டு, அழகன்குளம் உள்ளிட்ட பல கடற்கரை ஊர்களில் கிடைத்துள்ளன. இலங்கையின் பயன்பாட்டுக்காக அச்சடிக்கப்பட்ட இவை, சோழர்களின் ஆளுகையின் கீழ் இருந்த பாண்டிய நாட்டுப் பகுதிகளிலும் புழக்கத்தில் இருந்துள்ளன. ஏற்கனவே இப்பள்ளி மாணவர்கள் பஞ்சந்தாங்கி, தாதனேந்தலில் சோழர்களின் ஈழக்காசுகள், பால்கரையில் டச்சுக்காரர்களின் துட்டு, திருப்புல்லாணியில் கச்சி வழங்கும் பெருமாள் எனும் பாண்டியர் காசு, ஆங்கிலேயர் காலத்தில் இலங்கை, மலேயா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புழக்கத்தில் இருந்த காசுகளையும் கண்டெடுத்துள்ளனர்.” இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்