ஊரடங்கின்போது கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்ட போலீசாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பலர் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி மீண்டும் பணிக்குச் சேர்ந்துள்ளனர். தமிழக காவல் துறையில் முதல் முறையாக கரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சை பெற்று வந்த சென்னை மாம்பலம் சட்டம்-ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பாலமுரளி கடந்த புதன்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்ஸ்பெக்டர் பாலமுரளி மறைந்த தகவலைக் கேட்ட போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட சென்னை காவல்துறையே சோகத்தில் மூழ்கியது.
இந்த சம்பவம் கரோனா பணியில் ஈடுபட்டுள்ள போலீசாரிடையே பெரும் அச்சத்தை எற்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முழுவதும் போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் சிறுநீரகப் பாதிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 55 வயதுக்கு மேல் உள்ள போலீசார் ஓய்வு எடுத்து வருகின்றனர். அதேபோல் சென்னை மாநகர காவல் துறையில் 55 வயதுக்கு மேல் உள்ள போலீசாருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வேகமாகப் பரவி வரும் கரோனாவைக் கட்டுப்படுத்த இந்த 4 மாவட்டங்களிலும் ஜூன் 19-ஆம் தேதி (இன்று) முதல் வருகிற 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. 4 மாவட்டங்களில் தளர்வுகள் விலக்கிக் கொள்ளப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோரிடம் விசாரிக்கும்போது கரோனா தொற்று பரவாமல் போலீசார் எச்சரிக்கையுடன் இருக்க புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளனர். விதிகளை மீறுவோரை மடங்கி அவர்களிடம் விசாரிக்கும்போது சமூக இடைவெளியுடன் நிற்க வைத்து, அவர்கள் எதற்காக வெளியே வந்தோம், உரிய காரணம் இருக்கிறதா உள்ளிட்ட போலீசாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல ஒரு மைக் ஸ்டாண்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது. அதில் அவர்கள் பதில் சொல்ல வேண்டும். போலீசாரும் தங்களிடம் ஒரு மைக் வைத்துள்ளனர். இப்படி விசாரிக்கும் நிலையில் போலீசாருக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்பதற்காக இந்த ஏற்பாட்டினை செய்துள்ளனர்.