நேதாஜியின் வாழ்வில் தமிழர்களின் பங்கு மகத்தானது. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியடிகளால் நிறுத்தப்பட்ட பட்டாமி சீதாராமய்யாவை எதிர்த்து நேதாஜி போட்டியிட்ட போது தமிழ்நாடு முழுமையாக அவருக்கு ஆதரவளித்து அவர் வெற்றிக்கு வழிவகுத்தது. எஸ்.சீனிவாசய்யங்கார், எஸ்.சத்யமூர்த்தி, கு.காமராஜர், உ.முத்துராமலிங்கத்தேவர், ப.ஜீவானந்தம் போன்ற தலைவர்கள் நேதாஜிக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
ஜெர்மனியில் நேதாஜி இந்திய சுதந்திரப்படையை அமைத்தபோது அதன் வானொலி நிகழ்ச்சிக்குப் பொறுப்பாளராக இருந்தவர் ஆளவந்தார் என்னும் தமிழரே. தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த தமிழர்கள் ஒரு முகமாக நேதாஜியின் விடுதலைப்போராட்டத்திற்காக ஆதரவளித்தார்கள். அவரது படையில் அணியணியாக சேர்ந்தார்கள். அவர் நிதி கேட்டபோது அள்ளி, அள்ளி தந்தார்கள். 1946-ஆம் ஆண்டு அக்டோபர் 23-ஆம் நாள் சிங்கப்பூரில் நேதாஜி தனது சுதந்திர அரசை பிரகடனம் செய்தபோது கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலோர் தமிழர்களாக இருந்தார்கள். எனவேதான் நேதாஜி தன்னுடைய பேச்சை தமிழில் மொழி பெயர்த்தபோது பெரும் ஆரவாரம் எழுந்தது. வேறு எந்த இந்திய மொழியிலும் அவரது பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை.
நேதாஜியின் நம்பிக்கைக்குரியவர்களாக பல தமிழர்கள் விளங்கி அவரது ராணுவத்திலும், அரசாங்கத்திலும் உயர் பதவிகளை வகித்தார்கள். கேப்டன் லட்சுமி ராகவன், மகாகவி பாரதியாரின் மைத்துனர் மகனான எஸ்.ஏ. ஐயர், மேஜர்- ஜெனரல் ஏ.டி.லோகநாதன், மேஜர் ஜெனரல் அழகப்பன், கேப்டன் ஜானகி தேவர், நேதாஜியின் தனி உதவியாளர் மேஜர் பாஸ்கரன், அவரது சமையல்காரர் காளி, ஈ.தே.ரா. ஒற்றுமைப்படை பயிற்சிப் பள்ளித் தலைவராக பணியாற்றிய என்.ஜி.சுவாமி ஆகியோர் அவர்களில் சிலர் ஆவர்.
தமிழர்கள் தனக்கு உறுதுணையாக நிற்பதைக்கண்ட நேதாஜி உள்ளம் நெகிழ்ந்தார். அதை மனம் விட்டும் கூறினார்: "அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்கவேண்டும் என விரும்புகிறேன் என்றார்'' "நேதாஜி எங்கே' என்னும் நூ-ல் பழ. நெடுமாறன்.