பிரதமராவதற்கு முன்பு காங்கிரஸை தூற்றினீர்கள் சரி, பிரதமரான பிறகும் எப்போ பார்த்தாலும், எதுக்கெடுத்தாலும் காங்கிரஸையும், நேருவையும், இந்திரா காந்தியையும், சோனியாவையும், ராகுலையும் குறை சொல்வதையே வேலையாக வைத்திருக்கிறீர்கள். காங்கிரஸ் பரம்பரை ஆட்சி நடத்த பார்க்கிறது, காங்கிரஸ் ஊழல் செய்தது, காங்கிரஸ் நாட்டின் உயர் அமைப்புகளை மதிக்கவில்லை என்று குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள்.
ஆனால், உங்களுடைய ஐந்தாண்டு ஆட்சிக்காலம் முடியப் போகிற நிலையில் ஆண்டுக்கு இரண்டு கோடி வீதம் ஐந்தாண்டுகளில் 10 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றும், விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்ப்பேன் என்றும், கருப்புப்பணம் அத்தனையையும் கொண்டுவருவேன் என்றும் 2014 தேர்தலின்போது நீங்கள் அளித்த வாக்குறுதிகளின் கதி என்ன என்று கேட்டால், அதற்கும் காங்கிரஸையே குறைகூறுகிறீர்களே இது நியாயமா? காங்கிரஸையே குறைகூறும் நீங்கள் உங்கள் சாதனைகள் எதையுமே சொல்லி ஓட்டுக் கேட்க மாட்டீர்களா?
இன்னும் சில நாட்களில் ஜனநாயக திருவிழா தொடங்கவிருக்கிறது. மோடியின் செயல்பாடுகளுக்கான தீர்ப்பை மக்கள் வழங்கப்போகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் முழுக்க முழுக்க காங்கிரஸையும் அதன் தலைவர்களை தூற்றியுமே காலத்தை கழித்துவிட்ட மோடி, அவர் உருவாக்க புதிய இந்தியா, டிஜிடல் இந்தியா, மேக் இன் இந்தியா போன்ற ஏராளமான இந்தியாக்களின் நிலையை பற்றி பேச மறுக்கிறார். ஆனால், இந்தியாவை அனைத்து மக்களும் வாழ்வதற்கான ஒரு தேசமாக அருமையான இடமாக மோடி மாற்றியிருக்கிறாரா என்பதைப் பற்றி பேச வேண்டிய நேரம் இது.
மோடி பிரதமராக பொறுப்பேற்ற 100 ஆவது நாளில் அவருடைய வாக்குறுதிகளை நினைவூட்டியவர்களிடம் மோடி என்ன சொன்னார் தெரியுமா? நான் என்ன செய்தேன் என்று ஐந்து ஆண்டுகள் கழித்து கேளுங்கள், 100 நாட்களிலோ, அடிக்கடியோ கேட்காதீர்கள் என்றார். இப்போது ஐந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன. இன்றுவரை மோடி என்னவெல்லாம் செய்திருக்கிறார். அவருடைய செயல்பாடுகள் மக்களிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்றெல்லாம் சொல்ல மறுக்கிறார்.
ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு இல்லை. எழுதி வைக்காமல் அல்லது முன்கூட்டியே திட்டமிடாத பத்திரிகையாளர் சந்திப்பும் இல்லை. முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட கேள்வி பதில்களுடன் ஒரிரு பத்திரிகையாளர் சந்திப்புகள் மட்டுமே நடந்தன. அவையும்கூட கேலிக்கூத்தாகவே முடிந்தன. இதெல்லாம் என்னா கணக்கு மிஸ்டர் மோடி? உங்களுடைய பதவிக்குரிய முக்கியத்துவத்தையாவது ஜனநாயக அமைப்புகளுக்கு கொடுக்க வேண்டாமா மிஸ்டர் மோடி?
பதவியேற்ற நான்காவது ஆண்டே அவருடைய பேச்சு மாறியது. “நான் ஏன் எதையும் செய்யவில்லை என்று கேட்கிறீர்களே, நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் ஏதாவது செய்ததா? அவர்கள் அதைச் சொல்ல முடியுமா? அவர்கள் அதற்கு பதில் சொன்னால் நான் ஏன் எதையும் செய்யவில்லை என்பதற்கு காரணம் சொல்கிறேன்” என்றார். இதெல்லாம் அறிவுப்பூர்வமான ஒரு பிரதமரின் பதிலாக இருக்க முடியுமா என்பதை சிந்திக்க வேண்டும்.
2015-2016 ஆம் ஆண்டு, ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று மோடி உரக்கக் கூறினார். அதைத்தொடர்ந்து, “ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டேண்ட் அப் இந்தியா, ஸ்கில் இந்தியா, டிஜிடல் இந்தியா” என்று பல இந்தியாக்களை உருவாக்கினார். அவை வெற்று முழக்கங்களாகவே போயின. இந்நிலையில்தான், மோடி தனது பேச்சை மாற்றினார்… “ஒரு பக்கோடா ஸ்டால் போடுவதுகூட தொழில்தான்” என்றார். “நீங்களே பாருங்கள் என் கண்முன்னே ஏராளமானோர் டிரைவர்களாகி இருக்கிறார்கள்” என்றார். இப்போது “நான் ஒரு காவல்காரன்” என்கிறார். இதன்மூலம், கோடிக்கணக்கான வாட்ச்மேன்களை உருவாக்கி இருப்பதாக கூறுவாரோ என்னவோ… தெரியவில்லை.
2015-16 ஆம் ஆண்டு, “2019ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம்” என்றார். பிறகு, 2022 க்குள் ஆக்குவோம் என்று மாற்றினார். 2018 ஆம் ஆண்டு பிரதமரே ஒரு விவசாயிதான் என்றார். இவர்தான் சொன்னார்… “நான் காங்கிரஸைப் போல விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய மாட்டேன். நான் விவசாயிகளின் கண்ணியமான வாழ்க்கைக்கு உறுதி அளிப்பேன்” என்றார். ஆனால், இப்போதோ, “விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் கொடுப்பேன்” என்று வெட்கமே இல்லாமல் கூறுகிறார்.
அட, வேலைவாய்ப்பு, வருமானத்தை இரட்டிப்பாக்குவது எல்லாத்தையும் விடுங்க மோடி ஸார். 2014 தேர்தலில் உங்களுடைய முக்கியமான பிரச்சாரமே, இந்தியாவை சூப்பர் பவர் நாடாக மாற்றிக்காட்டுவேன் என்பதுதானே… ஆனால், இப்போதைய நிலையில் அதுக்கு காரணமே சொல்ல முடியாம போச்சு. வேலைவாய்ப்புகள் தொடர்பான புள்ளிவிவரங்கள், ரஃபேல் விமான பேரம் தொடர்பான சிஏஜி தணிக்கை அறிக்கை தொடர்பான விவரங்கள், பாஜகவுக்கு தேர்தல் நிதி வசூல் தொடர்பான விவரங்கள், பணமதிப்பிழப்பு இந்திய தொழில்கள் மற்றும் வேலை இழப்புகளில் ஏற்படுத்திய விளைவு, கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை உங்கள் ஐந்தாண்டு ஆட்சி நாசம் செய்திருக்கும் விவரங்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் நன்றாக தெரிந்துவிட்டது.
அடுத்த சில வாரங்கள் இந்தியா முழுவதும் தேர்தல் பிரச்சாரம் நடக்கத்தான் போகிறது. அந்தப் பிரச்சாரத்திலாவது இந்த விஷயங்களுக்கு பதில் சொல்வீர்களா மிஸ்டர் மோடி? அதாவது கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்தது என்ன? செய்யத் தவறியது என்ன என்பதை விளக்கமாக பேசத் தயாரா மோடி? காங்கிரஸ் என்ன செய்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் உங்களுடைய பதிவு ஒன்றுக்கு சாதாரண மக்களும் வாக்காளர்களும் போட்டிருக்கிற பதில்களை படித்து பார்த்தாலே தெரியும்.
தயவுசெய்து, இயந்திரத்தனமாக எதுக்கெடுத்தாலும் காங்கிரஸ் பெயரையே உச்சரித்து, உங்களை நீங்களே செயலற்றவராகவும், வரலாற்று அறிவற்றவராகவும் காட்டிக் கொள்ளாதீர்கள் மிஸ்டர் மோடி!