மணிப்பூர் கலவரம் தொடங்கி ஒன்றரை மாதமாகி விட்டது. கிட்டத்தட்ட 250 கிறிஸ்தவ தேவாலயங்கள், 17 இந்துக் கோவில்கள், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதத்துக்கு உள்ளாகியிருக்கின்றன. 200 கிராமங்கள் தீவைத்துக் கொளுத்தப் பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொதுச்சொத்துக்கள் அழிக்கப் பட்டிருக்கின்றன. இறந்தவர்களின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகம்.
இந்திய பிரதமரும், உள்துறை அமைச்சரும் கர்நாடகத் தேர்தலில் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டபோது தொடங்கிய கலவரம். இத்தனை நடந்த பின்னும் இந்த விவகாரத்தில் பிரதமர் ஒரேயொரு வார்த்தைகூட பேசவில்லை. பிரதமரும் உள்துறை அமைச்சரும் உடனுக்குடன் இந்த விவகாரத்தில் அக்கறை காட்டியிருந்தால் இந்தக் கலவரம் அன்றே முடிந்திருக்கும் என்று சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
இன்றைக்கு முகாம்களில் இருப்பவர்கள் மற்றும் மணிப்பூரை விட்டு வெளியேறியவர்களின் எண்ணிக்கை ஐம்பதாயிரத்துக்கும் அதிகமாகிவிட்டது. மெய்ட்டி, குக்கி இனத்தவர்கள், இரு தரப்பும் மாறி மாறி கலவரத்தில் ஈடுபட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பொது ஜனங்களைத் தாண்டி, எம்.எல்.ஏ. பிஸ்வஜித் வீட்டையும், பா.ஜ.க. தலைவரான சாரதாதேவி வீட்டையும் சிலர் எரிக்க முயல, ஆரம்பத்திலேயே அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது. மாறாக, மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங்கின் வீட்டை கலவரக்காரர்கள் எரித்து அழித்திருக்கின்றனர்.
2001-ல் இத்தகைய நீண்ட வன்முறைச் சம்பவம் மணிப்பூரை நிலைகுலையச் செய்தபோது, அப்போதைய பா.ஜ.க. பிரதமர் வாஜ்பேயி அனைத்துக் கட்சிக் கூட்டங்களை இருமுறை கூட்டி ஆலோசித்தார். மணிப்பூர் மக்களை அமைதி காக்குமாறு பிரதமரே இறங்கிவந்து கேட்டுக்கொண்டார். மெல்ல மெல்ல மக்கள் அமைதிக்குத் திரும்பினர்.
இந்த ஒன்றரை மாதங்களுக்குப் பின்பு, இப்போதாவது பிரதமர் மணிப்பூர் விஷயம் குறித்து வாய்திறந்து பேசவேண்டும். அமைதி திரும்புவதற்கான நடவடிக்கைகளில் மோடி அக்கறை காட்டவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
"இன்றைக்கு மணிப்பூர் பற்றி எரிவதற்கு ஆர்.எஸ்.எஸ்.ஸின் கருத்தியலும், பா.ஜ.க.வின் அரசியலுமே காரணம். மற்ற காரணங்கள் எல்லாம் அடிப்படைக் காரணத்திலிருந்து திசைதிருப்பும் முயற்சிகள் மட்டுமே. மணிப்பூரில் அமைதி திரும்புவது தொடர்பாக பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேச, 10 எதிர்க்கட்சிகள் ஜூன் 10 முதலே காத்திருக்கின்றன. மோடியோ வெறுமனே மௌனம் காக்கிறார்'' என காங்கிரஸ் தலைவரான ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
கலவரத்துக்கு என்ன காரணம்?
கலவரத்தின் தொடக்கத்தில் மணிப்பூரில் வளர்ந்து வரும் இந்து அமைப்புகள், தேவாலயங்களைக் குறிவைத்து தாக்கின. அஸ்ஸாம் ரைபிள்ஸ் யூனிட் பாதுகாப்புப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதிலிருந்து சில தினங்கள் தாமதப்படுத்தப்பட்டது. அப்போதுதான் தேவாலயங்கள் அழிக்கப்பட்டன. உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.
கலவரத்தில் மெய்ட்டி, குக்கி என இரு தரப்பும் வன்முறைக்கு ஆளாகி இடம்பெயர்ந்திருந்தாலும், பழங்குடியினர் அத்தோடு கிறித்தவர்கள் என்பதால் குக்கி மக்களே பெருமளவு வன்முறைக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதுவரை 70-க்கும் அதிகமான கிறித்தவர்கள் கொல்லப்பட்டதாகவும் கிறித்தவர்களின் வீடுகள், சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கிறித்தவ அமைப்புகளிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன. தவிரவும் இது வெறும் கலவரமல்ல, திட்டமிட்ட இன அழிப்பு என மணிப்பூரைச் சேர்ந்த கிறித்துவ அமைப்புகள் புகார் சொல்கின்றன.
இன்றைக்கு மாநில போலீஸ் படையினரைத் தவிர்த்து 30,000 ஆயுதப் படையினரும் நிறுத்தப் பட்டிருக்கின்றனர். இதையெல்லாம் தாண்டித்தான் மணிப்பூர் முழுவதும் கலவரங்கள் நடக்கின்றன.
வெறுமனே மெய்ட்டி சமூகத்துக்கு பழங்குடி அந்தஸ்து வழங்கியது மட்டுமே கலவரத்துக்குக் காரணமல்ல. சமீபத்தில் மணிப்பூர் முதல்வர் பீரேன்சிங், “குக்கிகள், பாதுகாக்கப்பட்ட காடுகளையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு மலையெங்கும் பாப்பிச் செடிகளை வளர்த்து வருவதாக” விமர்சித்திருந்தார்.
அது முழுக்க உண்மையும் அல்ல; முழுப் பொய்யும் அல்ல. மலைப்பகுதியில் குக்கி இனத்தைச் சேர்ந்த போராளிகள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை வாங்கவும், அமைப்புகளை நடத்தவும் பணம் தேவை. அதற்கான வழியாக போதைப்பொருட்கள் இருக்கின்றன. இதனால் மலைப்பகுதிகளில் பெருமளவில் பாப்பிச் செடி பயிரிடப்பட்டுள்ளது. இவ்வருடத்தின் ஜனவரியில் வெளியான ஐ.நா.வின் அறிக்கையும், மணிப்பூரில் மிகவும் அடர்த்தியாக பாப்பி பயிரிடப்பட்டிருப்பதாகச் சொன்னதை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.
ஆனால் குக்கி இன மக்கள் தங்களை மலைப் பகுதிகளிலிருந்து அகற்றுவதற்கான சாக்குப்போக்காக இந்த விமர்சனத்தைப் புரிந்துகொண்டனர். தங்களை தம் பாரம்பரிய மலைநிலப் பகுதிகளிலிருந்து அகற்ற அரசு நினைப்பதாகப் புரிந்துகொண்டதும் இப்போதைய நீடித்த கலவரத்துக்கு ஒரு காரணம் என்கின்றனர் ஒரு தரப்பினர்.
மணிப்பூரின் பழங்குடி மக்கள் முன்னணியின் ஆலோசகராக இருக்கும் ஜகத் தௌதம் என்பவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரத்துக்கு அஸ்ஸாம் ரைபிள்ஸ் படையே காரணம் எனக் குற்றம்சாட்டியதே அதற்குக் காரணம். 3000 எஃப்.ஐ.ஆர்.கள் பதியப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாவது மதரீதியாக பேசிய, ஆயுதங்களுடன் காட்சியளித்த அரம்பை தெங்கோல் உறுப்பினர்கள்மீது பதியப்படாதது ஏன் எனப் பழங்குடித் தலைவர்கள் கேள்வியெழுப்புகிறார்கள்.
ஒன்றரை மாதக் கலவரத்தில் 200க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், இன்று (24ம் தேதி) மாலை 3 மணிக்கு அமித்ஷா தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலவரத்தைத் தடுப்பது குறித்து மத்திய அரசு அனைத்து கட்சிகளிடம் இருந்து கருத்து கேட்க உள்ளது.