ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீண்ட வருடங்களாக விசாரணை நடத்தி வந்த ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையைக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதல்வரிடம் முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி வழங்கியிருந்தார். கிட்டத்தட்ட சில நாட்களாகவே பரபரப்பைக் கிளப்பி வந்த அந்த அறிக்கை கடந்த வாரம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் அவையில் வைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் ஜெயலலிதாவுக்கு உரிய சிகிச்சை தரப்பட்டிருந்தால் அவர் பிழைத்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவர் இறப்புக்கு சசிகலாவைக் குற்றம் சாட்டுவதைத் தவிர ஆணையத்துக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும் தெரிவித்திருந்த நிலையில், இது தொடர்பாகத் திராவிட இயக்க ஆதரவாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்த இந்த ஆணையம் சசிகலா, டாக்டர் சிவகுமார், விஜய பாஸ்கர், முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதுதொடர்பாக உங்களின் கருத்து என்ன?
சுகாதாரத்துறை செயலாளருக்கும் இந்த சம்பவத்துக்கும் என்ன தொடர்பு, அப்போலோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை இவர் என்ன செய்துவிட்டார். அந்த துறைக்குச் செயலாளராக இருந்தாலே அவர்தான் காரணம் என்று சொல்லிவிடலாமா? இப்படி ஒரு நீதியை உலகத்தில் எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை இந்தியாவிலேயே மிகச் சிறந்த மருத்துவமனை. டெல்லியிலிருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை சரியான முறையில் நடைபெற்று வருகிறது என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். லண்டனில் இருந்த பீலே சரியான முறையில் சிகிச்சை தருகிறார்கள் என்று தெரிவித்துவிட்டுச் சென்றார்.
பீலேவை கூப்பிட்டு விசாரிச்சியா? டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களைக் கூப்பிட்டு விசாரிச்சியா? ராதா கிருஷ்ணனைக் கூப்பிட்டு விசாரிச்சியா? விசாரிச்சன்னா என்ன விசாரிச்ச, அவருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கும் என்ன சம்பந்தம். மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லை என்று அனுமதிக்கப்பட்டால் மருத்துவரும், மருத்துவமனையும்தான் பொறுப்பு, அதைவிட்டு விட்டு ஊரில் உள்ளவன் எல்லாம் பொறுப்பா? இப்படி ஒரு அறிக்கையை எவனாவது கொடுப்பானா? விசாரணைக்கு வந்தவர்கள் கொடுத்ததை எழுதி வைத்துக்கொண்டு படிக்காதவன் பரீச்சை எழுதுவதைப் போல ஒரு அறிக்கையைத் தந்துவிட்டு போயிட்டியே.
படிக்காதவன் பரீச்சை எழுதுவதும், உங்கள் அறிக்கைக்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கா? இரண்டும் ஒன்றாக இருப்பதாகத்தான் தோன்றுகிறது. சசிகலா என்ன முடிவெடுக்கவில்லை என்று இவர் கூறுகிறார். முடிவெடுக்க வேண்டியது மருத்துவமனையும், நோயாளியும். அப்போது ஆளுநர் என்று ஒருவர் இருந்தாரே, அவரை ஆறுமுகசாமி கூப்பிட்டு விசாரணை செய்தாரா? ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்ததாக வித்யாசாகர் ராவ் கூறினாரே, அவருக்கு இதுவரை சம்மன் அனுப்பப்பட்டதா? அனுப்பவில்லை என்றால் ஏன் அனுப்பவில்லை. இவர்களால் காரணம் கூற முடியுமா? இந்த அறிக்கை எதற்காகவாவது உதவுமா என்றால் வெற்றுக் காகிதத்தைப் போல் பயன்படுத்த வேண்டியதுதான்.