மக்களவைப் பொதுத்தேர்தலோடு காலியாக இருக்கிற 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு எடப்பாடி தொடங்கி அ.தி.மு.க.வின் அனைத்து மட்டத்திலும் தெரிகிறது. துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.ஸின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் கதிர்காமு தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் இங்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
இந்நிலையில் இந்தத் தொகுதியில் போட்டியிட தி.மு.க., அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளில் இருந்து பலரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.
ஓ.பி.எஸ். ஆதரவாளராக இருந்து தினகரன் ஆதரவாளராக மாறிய கதிர்காமு, அ.ம.மு.க. சார்பில் மீண்டும் போட்டியிட தயாராக இருக்கிறார். தலித் வாக்குகளுக்கு அடுத்தபடியாக முக்குலத்தோர், நாயக்கர், செட்டியார், நாடார், கவுண்டர், பிள்ளைமார் ஆகிய சாதிகளுடன் கிறிஸ்தவ, முஸ்லிம்களும் கலந்திருக்கிறார்கள்.
கதிர்காமுவை ஓரங்கட்ட ஓ.பி.எஸ். தீவிரம் காட்டுகிறார். தனது மகன் ரவீந்திரநாத்தின் நண்பரான வக்கீல் தவமணியை கதிர்காமுவை எதிர்த்து நிறுத்த முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அவரோடு பாப்பா இளமுருகன், கள்ளுப்பட்டி சிவக்குமார், வீரமணி, பாண்டிய ராஜன் உள்ளிட்டோரும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர். தவமணி, இளமுருகன் ஆகியோருக்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.
தி.மு.க. சார்பில் கடந்தமுறை போட்டியிட்டு வாய்ப்பை இழந்த அன்பழகன் மீண்டும் சீட் கேட்டிருக்கிறார். இவர் தி.மு.க. முன்னாள் மாவட்டச் செயலாளர் மூக்கையாவின் ஆதரவாளர் என்கிறார்கள். இந்த முறை மாவட்டப் பொறுப்பாளராக கம்பம் ராமகிருஷ்ணன் இருப்பதால், தேனி ஜீவா என்பவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்கிறார்கள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் 10 ஆண்டுகள் மாவட்டச் செயலாளராக இருந்து தி.மு.க.வில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இணைந்தவர் ஜீவா. தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமியின் பரிந்துரை இவருக்கு இருக்கிறது என்றும், தொண்டர்களிடமும், மக்கள் மத்தியிலும் இவருக்கு நல்லபெயர் இருப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்களைத் தவிர, பெரியகுளம் ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் காமராசர், சண்முகசுந்தரம், வீனஸ் கண்ணன், முனியாண்டி, நாகராஜ் உள்ளிட்ட 50க்கு மேற்பட்டோர் சீட் கேட்டு விருப்பமனு கொடுத்திருப்பதாக தெரிகிறது.
ஓ.பி.எஸ்.ஸுக்கும் தினகரனுக்கும் இந்தத் தொகுதி கவுரவப் பிரச்சனை ஆகும். அதேசமயம் அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியை இருவரும் எந்த அளவுக்கு பிரிக்கப் போகிறார்கள் என்று தி.மு.க. அணி எதிர்பார்க்கிறது. தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் கிடைத்தால் அந்த அணிக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்கள்.