மகாத்மா காந்தியின் 150-ஆம் ஆண்டு விழாவை மாநில அரசுகள் நடத்துவதற்கான பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். அமித்ஷாவின் இல்லத்தில் 50 நிமிடங்கள் நீடித்துள்ள அந்த சந்திப்பில் தமிழக அரசியல் குறித்து பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
மாநில முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடியை சந்தித்து எடப்பாடி பேசுவதற்கு 10 நிமிடம் கேட்கப்பட்டிருந்தது. பிரதமர் அலுவலகமோ, தனிப்பட்ட உரையாடலுக்கு நேரம் இல்லை. தமிழக அரசியலை பேச உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க பிரதமர் சொன்னதாக டெல்லியில் உள்ள தமிழக அரசின் அதிகாரிகள் மூலம் எடப்பாடிக்கு தெரிவிக்கப்பட்டது. அதனால் அமித்ஷாவை சந்திக்க மட்டும் நேரம் ஒதுக்கப்பட்டது. டெல்லியிலிருந்து சென்னை திரும்பியதும் சந்திப்பு குறித்து தம்மிடம் விசாரித்த மூத்த அமைச்சர்களிடம் டெல்லியில் நடந்தவற்றை மனம் திறந்து பகிர்ந்துகொண்டிருக்கிறார் எடப்பாடி.
இது குறித்து அமைச்சர்கள் தரப்பில் விசாரித்த போது, "அமித்ஷாவை சந்தித்துப் பேச இ.பி.எஸ். ஸுக்கு 20 நிமிடங்கள்தான் ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால், சந்திப்பு 50 நிமிடங்களுக்கு நடந்தது. சம்பிரதாய நலம் விசாரிப்புகளுக்கு பிறகு, குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து வெற்றி பெற வைத்தமைக்கு எடப்பாடிக்கும் அ.தி.மு.க. எம்.பி.க்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் அமித்ஷா. அதற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய எடப்பாடி, குடியுரிமை சட்டத் திருத்தத்தில் தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை கொடுப்பது பற்றி இணைத்திருந்தால் தமிழகத்தில் அச்சட்டத்திற்கு எதிரான எதிர்ப்புகளை பலகீனப்படுத்தியிருக்க முடியும் என சொன்னதுடன், இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டைக் குடியுரிமை குறித்து ஜெயலலிதா ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதை நினைவுபடுத்திவிட்டு அந்த கோரிக்கையின் நகலையும் அமித்ஷாவிடம் தந்துள்ளார்.
இதனையடுத்து தமிழகத்துக்கு 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி தந்ததற்காக நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசின் நிதி நிலைமை மோசமாக இருப்பதையும் அதனால் மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து ரிலீஸ் செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்த, "தமிழகம் மட்டுமல்ல பல மாநிலங்களுக்கு நிலுவைத் தொகை இருக்கிறது. படிப்படியாக ரிலீஸ் செய்ய உத்தரவிடப்பட்டிருக்கிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு தமிழகத்துக்கு கிடைக்கும்' என்றிருக்கிறார் அமித்ஷா. தொடர்ந்து பேசிய எடப்பாடி, "ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24-ந் தேதி அவரது நினைவிடத்தை திறக்க முடிவு செய்திருக்கிறோம். பிரதமரும் நீங்களும் திறந்துவைக்க வேண்டும்' என சொல்ல, இதற்கு எவ்வித உறுதியையும் தராத அமித்ஷா, "பிரதமரிடம் கலந்து பேசிய பிறகு சொல்கிறேன்' என சாதாரணமாக அடுத்த விசயத்துக்கு கடந்து போயிருக்கிறார்.
குறிப்பாக, தமிழக அரசியல் பற்றிய விசயங்களுக்கு தாவிய அமித்ஷா, நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் குறித்து பேசாமல், சட்டமன்றத் தேர்தலைப் பற்றி விசாரித்திருக்கிறார். அதுபற்றி நடந்த விவாதத்தில், "அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி தொடர வேண்டும் என்றுதான் நான் விரும்புகிறேன்' என எடப்பாடி சொல்ல... "சட்டமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் அரசியல் சூழலே வேறு மாதிரி இருக்கும். பா.ஜ.க. இல்லாமல் எந்த வெற்றியும் உங்களுக்கு கிடைக்கப் போறதில்லை. 65 இடங்களில் பா.ஜ.க. போட்டியிட வேண்டும் என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். இதில் சமரசத்துக்கு இடமில்லை. அதற்கு ஒத்துழைத்தால் மட்டுமே கூட்டணி தொடரும்' என கூறியிருக்கிறார் அமித்ஷா. அதற்கு எவ்வித சம்மதத்தையும் கொடுக்க வில்லை; மறுத்தும் பேசவில்லை எடப்பாடி. மாறாக, "தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் கலந்து பேசுகிறேன்' என்று மட்டும் சொல்லியுள்ளார்.
இதனையடுத்து, "அரசுக்கு எதிராக ரஜினி வாய்ஸ் கொடுப்பதை தவிர்க்கச் சொல்லி நீங்கள் அவருக்கு அட்வைஸ் கொடுக்கணும்னு நாங்கள் விரும்பு கிறோம்' என எடப்பாடி சொன்னதும், "அவர் நம்முடைய எல்லையை விட்டு வெளியே இருக்கிறார். அரசியல் கட்சியை அவர் துவங்கிய பிறகு அவரை நோக்கி கவனம் செலுத்தலாம்' என்றிருக்கிறார் அமித்ஷா. இதனைத் தொடர்ந்து, தி.மு.க. கூட்டணி வலிமையாக இருப்பதையும் அதனை பலகீனப் படுத்த வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. அப்போது, "பிப்ரவரியில் பட்ஜெட் கூட்டம், கேபினெட் விரிவாக்கம், டெல்லி தேர்தல் ஆகியவை இருக்கிறது. இவையெல்லாம் முடிந்ததும் தமிழக அரசியல்தான் எங்கள் அஜெண்டா. அதில், தி.மு.க. தப்பிக்க முடியாது' என அமித்ஷா சொல்ல, எடப்பாடிக்கு ஏக மகிழ்ச்சி'' என சந்திப்பில் நடந்தவற்றைச் சுட்டிக்காட்டுகிறார்கள். "தி.மு.க.வின் மாஜி எம்.எல்.ஏ.க்கள், தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலர் மீதுள்ள பழைய வழக்குகளை தூசி தட்டி, சிறப்பு நீதிமன்றம் மூலம் செக் வைப்பது அந்த அஜெண்டா' என்கிறது டெல்லி வட்டாரம்.
மேலும், அமித்ஷாவுடனான சந்திப்பில், "அ.தி.மு.க. அரசோடு முரண்படாத ஒருவரை தமிழக பா.ஜ.க.வுக்கு தலைவராக நியமியுங்கள்' என எடப்பாடி கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. அமித்ஷாவை சந்தித்துவிட்டு அன்றைய இரவு டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய எடப்பாடியை, தொழிலதிபர்கள் சிலர் சந்தித்ததாக மத்திய உளவுத்துறையினர் மேலிடத்துக்கு ரிப்போர்ட் தந்துள்ளனர்.