மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தமிழர்களை என்ன நினைத்திருக்கிறது என்பது தெரியவில்லை. ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அலைக்கழித்தது முதல் முக்கியமான பிரச்சனைகள் அனைத்திலும் தமிழ் மக்களின் விருப்பங்களுக்கு மாறாக செயல்படுவதையே நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறது.
ஒருவகையில் தமிழக இளைஞர்களிடம் பாஜக தனது முகமூடியை இழக்கிறது என்றாலும், ஆட்சி நிர்வாகத்தில் ஆர்எஸ்எஸ்சின் மதவாத நோக்கம் கொண்ட ஆட்களை திணிப்பதிலும், ஆர்எஸ்எஸ்சின் மறைமுக செயல்திட்டங்களை தமிழகத்தில் நிறைவேற்றுவதிலும் குறியாக இருக்கிறது.
குறிப்பாக நீதித்துறையை தனது விருப்பப்படி ஆட்டுவிப்பதில் அது வெற்றிபெற்றிருக்கிறது. வருங்காலத் தலைமுறையினரின் மூளையைச் சலவைசெய்யும் கல்வித்துறையில் மெல்லக் கொல்லும் காவி விஷத்தை புகுத்துவதில் அது வெற்றிபெற்றிருக்கிறது.
பாண்டிச்சேரியில் தனக்கு ஒத்துழைக்காத காங்கிரஸ் அரசின் விருப்பத்துக்கு மாறாக நியமிக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் விரைவாக தீர்ப்பு வருகிறது. அதேசமயம், தனது பினாமி அரசாங்கத்து ஆபத்தான 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் தொடர்பான வழக்கிலும், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கக்கோரும் வழக்கிலும் விசாரணை முடிந்தும் தீர்ப்பை வெளியிடாமல் தாமதப்படுத்துகிறது.
ஜெயலலிதா இறந்ததும் தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதனை நியமித்து, தமிழக அரசை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது மோடி அரசு. ஜெயலலிதா இருக்கும்போதே சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை தள்ளிப்போடப்பட்டது. அதற்கு காரணம் இப்போதுதான் தெளிவாகியிருக்கிறது. பாஜக தனக்கு வேண்டப்பட்ட ஒரு ஆர்எஸ்எஸ் ஆளை அந்தப் பொறுப்பில் நியமித்திருக்கிறது. அதிலும் காவிரி விவகாரம் தீப்பற்றி எரிகிற நேரத்தில், கர்நாடகாவிலிருந்து ஒரு காவியை பிடித்துவந்து கவுரவமிக்க சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்திருக்கிறது மோடி அரசு.
ஏற்கெனவே, தமிழ்நாடு இசைப் பல்கலைக் கழத்திற்கு கேரளாவைச் சேர்ந்த பிரமிளா குருமூர்த்தியை நியமித்தார் ஆளுநர். அதன்பிறகு, அம்பேத்கர் சட்டப்பல்கலைக் கழகத்திற்கு, மகாராஸ்டிரா மாநிலத்தின் புனே நகரில் உள்ள சாவித்திரிபாய் பூலே சட்டப்பல்கலைக்கழக துணைவேந்தரான தம்ம சூரியநாராயண சாஸ்திரியை நியமித்தார்.
தகுதிவாய்ந்த தமிழர்கள் இல்லாததுபோல இப்படி வேற்று மாநில ஆட்களை தமிழகத்தின் சிறப்புமிக்க பல்கலைக்கழகங்களுக்கு நியமிப்பதை மோடி அரசு ஊக்குவிப்பதை தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டிக்கின்றன. ஆனால், ஆளும் அதிமுக அரசு, இந்த நியமனங்கள் தொடர்பாக மாநில உரிமை பறிபோவதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் எருமை மீது மழைவிழுந்த கதையாக மழுப்பித் திரிகிறது.
அதேசமயம், மாநில பாஜக தலைவர் இந்த நியமனங்களை நியாயப்படுத்தி இருக்கிறார். இஸ்ரோவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த சிவனை தலைவராக நியமிக்கவில்லையா என்று புத்திசாலித்தனமாக கேட்டிருக்கிறார். இது எவ்வளவுபெரிய அறிவிலித்தனமான சமாளிப்பு என்பதை அவர் உணர்ந்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.
இஸ்ரோ என்பது ஏதேனும் மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிறதா? அது ஒரு மத்திய அமைப்பு. அறிவியல் அமைப்பு. அங்கு அறிவும் சீனியாரிட்டியும்தான் பொறுப்புக்கு வர தகுதி...
அந்த அமைப்புக்கு சிவனை தலைவராக்கியதையும்... அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கன்னடர் ஒருவரை நியமி்தததையும்... இணைத்துப் பேசும் தமிழிசையின் மேதைமையை எப்படி மெச்சுவது என்றே தெரியவில்லை.
தமிழக பாஜக தலைவர்கள் தமிழகத்துக்கு எதிரான எல்லாவற்றையும் ஆதரித்து பேசுவது ஒருபக்கம் நல்லதுதான் என்றாலும், இதற்கு விரைவில் முடிவுகட்ட வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.