நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜா ஊடகங்கள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்து இருந்தார். இதற்குப் பத்திரிக்கையாளர் சங்கமும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக திமுக செய்தி தொடர்பாளர் மனுஷ்ய புத்திரனிடம் பேசியபோது ஹெச்.ராஜாவுக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
அவர் பேசியதாவது, " ஹெச்.ராஜா என்பவர் தமிழகத்தின் முக்கியமான அரசியல் தலைவரா? அல்லது பாஜகவில் தான் ஏதாவது முக்கிய பொறுப்பில் இருக்கிறாரா? அவர் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என்றால் அவர் முன் ஏன் 50 மைக்குகளை கொண்டு வந்து வைக்கிறீர்கள்? இங்கே இருக்கிற ஊடகங்களுக்கு அவர் ஏதாவது சர்ச்சையாகக் கூறினார் என்றால் அதைவைத்து வைரலாக்கலாம் என்ற நோக்கத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட அவரிடம் ஏன் இப்படி அவதூறாகப் பேசுகிறீர்கள் என ஏன் கேட்கவில்லை. தற்போது பத்திரிகையாளர் சங்கம் கண்டனம் தெரிவிக்கிறதே, ஆனால் அங்கே நின்று கொண்டிருந்த ஒருவருக்குக் கூடவா அவரிடம் எதிர்க் கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை.
சுப.வீ உள்ளிட்டவர்கள் மீது கடுமையான அவதூறைக் கூறியிருக்கிறார். நாங்கள் எல்லாம் திமுக சார்பாக இருக்கிறோம் என்ற ஒற்றைக் காரணத்திற்காக எங்களை உடலளவிலும், தனிப்பட்ட ரீதியிலும் கடுமையான தாக்குதலை அவர் ஏற்கனவே செய்திருக்கிறார். என் மீது பலமுறை தனிப்பட்ட தாக்குதலைச் செய்திருக்கிறார். இதற்காக நான், சுப.வீ உள்ளிட்டவர்கள் பல அவமானங்களைச் சந்தித்துள்ளோம். அது இன்று மட்டும் நடப்பது அல்ல, நீண்ட காலமாக இத்தகைய தாக்குதலை எங்கள் மீது தொடுத்து வருகிறார்கள். உச்சமாகக் கொலை மிரட்டல் விடுத்து மிரட்டிப் பார்த்துள்ளார்கள்.
என்னை இன்றைக்குக் கூட அறிவாலய பிச்சைக்காரன் என்று எழுதி இருக்கிறார்கள். சில பேர் அந்த அவமானங்களை எதிர்கொள்வதற்கும் கட்சியிலிருந்துதான் ஆக வேண்டும். இவ்வளவு அருவருப்பாக ஒரு அரசியல் கட்சித் தலைவரை, ஆளுமைகளை அவர் சொல்கிற போது அங்கிருந்த ஒரு பத்திரிக்கையாளர் கூட எதிர்க்கேள்வி கேட்கவில்லை என்கிற போது அவர் எப்படித் திருந்துவார். அவர் பேசுகிற இடங்களைப் பத்திரிகையாளர்கள் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் மூன்றே மாதத்தில் அவர் இருக்குமிடத்திலிருந்து காணாமல் போவார். அதைப் பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டும்.