இந்த காலகட்டத்தில்தான் துவங்கியது என்று தகவல் தொடர்பை குறிப்பிட்டு சொல்லமுடியவில்லை. ஆனால், மனிதன் பேசுவதற்கும், எழுதுவதற்கும் முன்பே தகவல் தொடர்பு துவங்கியிருக்கிறது. கற்கால மனிதர்களின் குகை ஓவியங்களே முதல் தகவல் தொடர்பாக இருக்கிறது. தான் சொல்ல நினைத்ததை தொலைவில் இருப்போருக்கும், பின்னால் வரப்போகும் சந்ததிக்கும் தெரிவிக்கும் விதமாகத்தான் குகை ஓவியங்கள் எழுதப்பட்டுள்ளன.
நெருப்பை பற்றவைத்து எரியும் தீ, தூர இருப்பவர்களுக்கு ஒரு தகவலை சொல்லும், புகை ஒரு தகவலைச்சொல்லும் இப்படி ஒரு தகவல் தொடர்பும் இருந்துவந்தது. குறிப்பிட்ட தூரத்திற்கு ஒருவரை நிற்கவைத்து, ஒருவர் ஓடிச்சென்று இன்னொருவரிடம் தகவலைச்சொல்லும் முறையும் இருந்தது. புறாக்களின் காலில் கடிதத்தை கட்டி அனுப்பும் முறை இருந்தது. சொல்லும் இடத்திற்கு சென்று தகவலை தந்துவிட்டு, திரும்பவும் அனுப்பிய இடத்திற்கு திரும்பி வந்துவிடும் அளவிற்கு புறாக்களை பழக்கப்படுத்தியதும், அதற்கு புறாக்கள் பழக்கமானதும் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான ஒன்றுதான்.
பல மைல் தூரத்திற்கு ஒரு குதிரை நிறுத்திவைக்கப்பட்டு, ஒவ்வொரு குதிரையும் பல மைல் ஓடி தகவல் பைகளை கொடுத்தும், பெற்றும் வந்தன. ஆட்கள் இல்லாமலும் குதிரைகள் ஓடி வந்துள்ளன. நாளடைவில் தகவல் தொடர்பில் முன்னேற்றங்கள் இருந்துகொண்டே இருந்தது. அஞ்சல் துறை என்ற ஒன்று வந்துது. அதன் துவக்கமும் கடினமாகத்தான் இருந்தது.
’சார்,போஸ்ட்…’ என்று சைக்கிளில் வந்து அஞ்சல் கொடுத்து வந்த போஸ்ட்மேன்கள்கள் இப்போது பைக்கிலும் வந்து அஞ்சல் கொடுத்து வருகிறார்கள். துவக்க காலங்களில் ஓடி ஓடித்தான் அஞ்சலை டெலிவரி செய்து வந்தார்கள். அப்போது இவர்கள், ‘மெயில்ரன்னர்கள்’ என்று அழைக்கப்பட்டனர். போக்குவரத்தும், சாலைவசதிகளும் இல்லாத அக்காலத்தில் ஈட்டி, லாந்தர் விளக்கை எடுத்துக்கொண்டு, தோள்பையுடன் 8 கிலோ மீட்டர் தூரம் ஓட்டமும் நடையுமாக சென்று அங்கே காத்திருப்பவரிடம் தகவல் பையினை பெற்று வரவேண்டும்.
மெயில்ரன்னர்கள் அங்கங்கே இளைப்பாறுவதற்கு என்று இடங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காட்டுவழி பயணங்களில் விலங்குகளிடம் இருந்து தப்பித்துச்செல்லவும், திருடர்களிடம் இருந்து சமாளித்து செல்லவும், புயல்,மழையில் சமாளித்து செல்லவும் உடல்வலிமையும், மனவலிமையும் உள்ளவர்களே மெயில்ரன்னர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படி இருந்தும், காட்டு விலங்களால் தாக்கப்பட்டும், இயற்கைசீற்றங்களாலும் பலர் உயிரிழந்துள்ளனர். இதற்காகத்தான் மெயில்ரன்னருக்கு துணையாக ஒருவரும் செல்லுமாறு நியமிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து வசதிகள் வந்தபோது அஞ்சல்துறையின் முகமும் மாறியது.
ஓட்டம் என்று இருந்த நிலை மாறி, குதிரை வண்டி, புகைவண்டி, பேருந்து, கப்பல், விமானம் மூலம் அதன் பயணம் வளர்ந்தது. அஞ்சலின் அடுத்தகட்டமாக மின்னஞ்சலும் வந்துவிட்டாலும், அஞ்சலின் அவசியம் இப்போதும் இருக்கிறது.
ஸ்காட்லாந்தில் 1712ம் ஆண்டில் துவங்கப்பட்ட அஞ்சல் நிலையம்தான் உலகின் முதல் தபால் நிலையம். இன்றைக்கு உலகில் 8 இலட்சத்துக்கும் அதிகமான தபால் நிலையங்கள் உள்ளன. இந்தியாவில் அஞ்சல் துறை 1764ல் துவங்கப்பட்டது. உலகிலேயே அதிக அஞ்சல் நிலையங்களை கொண்ட நாடாக இந்தியாவுள்ளது. கிட்டத்தட்ட ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட அஞ்சல் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியாவை அடுத்து இரண்டாவது இடத்தில் சீனா உள்ளது.
உலகின் முதல் தபால் நிலையம்
எல்லா நாட்டினரும் அஞ்சல் துறையை கொண்டு வந்தபோது, அஞ்சல் கட்டணம் நிர்ணயம் செய்வதில் ஒரு சிக்கல் வந்தது. இதை முடிவு செய்ய ஒரு தலைமை வேண்டும் என்ற நிலை இருந்தது. இதனால், ஸ்விட்சர்லாந்து தலைநகரில் 1874ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி அன்று ‘சர்வதேச அஞ்சல் ஒன்றியம்’ (Universal Postal Union) தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 1969ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி அன்று உலக அஞ்சல் தினம் அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து இந்த ஒன்றியத்தில் அங்கம் வகித்துள்ள 150 நாடுகளும், ஆண்டுதோறும் அக்டோபர் 9 தேதியில் அஞ்சல் தினத்தை கொண்டாடி வருகின்றன.
ஒரு நொடியில் தகவலை பரிமாற்றம் செய்துகொள்ளும் காலகட்டத்திற்கு வந்துவிட்டாலும், இருபது ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலையை மூத்த தலைமுறையினரால் மறக்க முடியாது. அஞ்சலும் அஞ்சல் வழியே உறவுகளுக்குள் நிகழ்ந்த நிகழ்வுகளும் இன்னும் பசுமைநினைவுகளாகவே வந்து வந்து போகும்.
வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் இருந்த எவரும், தகவல் தொடர்பு கொள்ள அஞ்சலை மட்டுமே நம்பியிருந்தனர். இப்போது, தூரதேசத்தில் இருந்தாலும் முகம்பார்த்து பேசும் வசதிகள் இருந்தாலும், அஞ்சலும் அதில் உள்ள எழுத்துக்களும் தந்த உணர்வுகளை தரமுடியாது.
மனதில் இருப்பதை அஞ்சல் மூலம் சொல்லிவிட்டு, பதிலுக்காக காத்திருக்கும் அந்த அனுபவம் அலாதியானது. அஞ்சலை ஒரு தூதாகவே நம்பிக்கிடந்தனர் காதலர்கள். அஞ்சலை கொண்டுவரும் அஞ்சல்காரனை கடவுளாக பாவித்த காதலர்கள் அதிகம்.
அஞ்சலை ஊக்குவிப்பதற்காகவே அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனாலும், அஞ்சல் என்ற ஒன்றை, உணர்வுப்பூர்வமான ஒன்றை இந்த தலைமுறை உதறித்தள்ளுவது வருத்தமாக இருக்கிறது.