Skip to main content

"டீசல் போட காசு இல்லையாம் ஆனா 5 லட்சத்துல வாட்ச் வாங்க காசு இருக்குமாம்..." - குடியாத்தம் குமரன்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

பரக


உதயநிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற சம்பவம் சில நாட்களாக விவாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட நகர்வாக அண்ணாமலை பயன்படுத்தி வந்த வாட்ச் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஃபேல் போர் விமானத்தைத் தயாரித்த நிறுவனம் உருவாக்கியதாக அண்ணாமலையால் கூறப்பட்ட அந்த வாட்ச் உலகத்திலேயே மொத்தம் 500 மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். இந்த வாட்ச் விலை 5 லட்சத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்ற நிலையில், இந்த வாட்ச் வாங்கியதற்கான பில்லை வெளியிடும்படி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இந்நிலையில், தமிழக அரசை அண்ணாமலை தொடர்ந்து விமர்சனம் செய்து வருவது பற்றி திமுக பேச்சாளர் குடியாத்தம் குமரனிடம் கேட்டபோது, " தமிழக அரசையோ அல்லது அமைச்சர்களையோ விமர்சனம் செய்யக்கூடாது, எங்களைப் பற்றி வாயே திறக்கக்கூடாது என்றெல்லாம் நாங்கள் எப்போதும் கூறமாட்டோம். 

 

இது ஜனநாயக நாடு யாரும் யாரையும் விமர்சிக்க எல்லா வித தகுதியும் இருக்கிறது. எழுத்துரிமை, கருத்துரிமை என எல்லாம் இருக்கிறது. அதற்காகப் பொய் சொன்னால், அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அண்ணன் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுக்களை வைக்கிறார். லஞ்சம் வாங்கிட்டார்னு சொல்ற, கமிஷன் வாங்கிட்டாருன்னு சொல்ற ஆனா ஒரே ஒரு ஆதாரத்தைக் கூடக் காட்டமாட்டேங்கிற, வழிப்போக்கன் மாதிரி வாயில் வந்ததை எல்லாம் மெண்டல் மாதிரி பேசிக்கிட்டே போறதை எப்படி எங்களால் ஏற்றுக்கொள்ள முடியும். நேற்று எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜி இந்த வாட்ச் பற்றிய விலையை எப்படி படம் போட்டு காண்பித்தார். 

 

அவரைத் தொடர்ந்து குறை சொல்லும் நீங்கள் இதேபோல் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஒரே ஒரு ஆதாரத்தைத் தர முடியுமா? இந்த மாதிரி அடுத்தவர்களைக் கட்சியில் காலி செய்துவிட்டு வரலாம் என்று பார்ப்பதால்தான் உன் கூட இருக்கிறவனே வாட்ச் டீடெயிலை வெளியே விட்டு இன்றைக்கு நீங்கள் மாட்டிக்கொள்ளக் காரணமாக அமைந்திருக்கிறது. இன்றைக்கு அண்ணாமலை எனக்கு எதுவுமே இல்லை; பரம ஏழை, காருக்கு டீசல் போட வழியில்லை என்று என்னென்ன கதைகளை அவிழ்த்துவிட்டு வருகிறார். அதை எல்லாம் இட்டுக்கட்டிய பொய் என்று இன்றைக்குத் தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கரப்ட்டடு அரசியல்வாதி ஒருவர் இருக்கிறார் என்றால் அது அண்ணாமலை ஒருவர்தான்" என்றார்.