
சில நாட்களுக்கு முன்பு ஜெயலலிதா நினைவு நாளில் அவருக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் ஜெயலலிதா மறைந்த நன்னாளில் என்று உறுதி எடுத்துக்கொண்ட சம்பவம் தொலைக்காட்சிகளில் வைரலானது. யாருமே கவனிக்காமல் எப்படி இந்த உறுதிமொழி படிவம் தயாரிக்கப்பட்டுப் படிக்கப்பட்டது என்ற கேள்வியை அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் எம்பி. கே.சி.பழனிசாமியிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு," நிச்சயமாக எடப்பாடி பழனிசாமிக்கு அந்த நாள் நன்னாள் தானே, அவர் மறைந்த காரணத்தால் தானே இவர் நான்கு ஆண்டுகள் அவரால் முதல்வராக இருந்த முடிந்தது.
இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்து நான் கருத்து பதிவிட்டு இருந்தேன். அந்த பதிவுக்குக் கருத்து தெரிவித்த அதிமுக தொண்டர் ஒருவர், அண்ணா எடப்பாடி பழனிசாமிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் உண்மையாகவே அந்த நாள் தான் அவர்கள் வாழ்க்கையில் பெரிய நன்னாள். இல்லை என்றால் ஒருநாளும் அமைச்சர் பதவியைத் தாண்டி நினைத்துப் பார்த்திருக்க முடியாது. அந்த வகையில் எடப்பாடி தவறுதலாக இதைப் படித்ததாக நான் கருதவில்லை, அவர் மனதில் உள்ளதை அப்படியே அவர் வெளிப்படுத்தியதாகவே நான் பார்க்கிறேன் என்றார். இவர் சொன்னது கூட உண்மைதான் போல என்று அவர் பேசியதற்குப் பிறகு நானும் நினைத்தேன். அந்த அளவுக்கு இவர்கள் பதவி வெறி பிடித்து ஆட்டம் போட்டுள்ளார்கள்.
கட்சி அதலபாதாளத்தில் சென்றுகொண்டிருக்கும் இந்த நிலையில், உண்மையான அதிமுக நாங்கள் என்று இவர்கள் இருவரும் சண்டை வேறு போட்டுக்கொண்டுள்ளார்கள். இதில் எடப்பாடிக்கு டெல்லியில் நடைபெறும் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் நான்தான் உண்மையான அதிமுக, என்னைத்தான் டெல்லி அங்கீகரித்துள்ளது என்ற பெருமை வேறு, மற்றொருவருக்குத் தன்னை அழைக்கவில்லையே என்ற வருத்தம் வேறு வாட்டி வதைக்கின்றது. எப்படி இருந்த கட்சி அதிமுக., மோடியா லேடியா என்று கேட்ட அம்மா எங்கே, எனக்கு அழைப்பு வந்துள்ளது என்று சந்தோசப்படும் இவர்கள் எங்கே? இவர்கள் இருவரும் தான் அதிமுகவைக் காப்பாற்றப் போகிறவர்களா?
இவர்கள் இருவரும் கோழைகளாகத்தான் இருக்கிறார்கள். இவர்களால் தமிழக மக்களுக்கோ, கட்சிக்கோ எவ்வித நன்மையும் எப்போதும் ஏற்படப் போவதில்லை. இத்தனை ஆயிரம் தொண்டர்களை அடிமைகளாக வைத்திருக்கலாம் என்று இவர்கள் இருவரும் நினைத்துள்ளார்கள். ஆனால் ஒருபோதும் அது நடக்காது. இவர்களைத் தமிழக மக்களும், அதிமுக தொண்டர்களும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். இவர்கள் பாஜகவை அனுசரித்துப் போவதால் அவர்களுக்கு அதிகம் என்ன கிடைக்கப்போகிறது. சிறைக்குப் போவது தள்ளிப்போகும், அதிக பட்சம் ஒரு நியமன ராஜ்ய சபா எம்பி பதவி கிடைக்கும். அதைத்தாண்டி இவர்களாலும் எதுவும் செய்ய முடியாது; அவர்களும் அவர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள்.
வரலாற்று வெற்றிகளைப் பதிவு செய்த இந்த அதிமுக என்னும் இந்த பேரியக்கத்தை தற்போது சிரச்சேதம் செய்து வைத்துள்ளார்கள். இதிலிருந்து இந்த இயக்கத்தை மீட்டு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவர்கள் கட்சி தொண்டர்களிடம் உண்மையாக இல்லை என்றாலும் பரவாயில்லை, அவர்களின் மனசாட்சியிடமாவது உண்மையாக இருக்க வேண்டும். ஆனால் அதைக்கூட இவர்கள் முறையாகச் செய்வதில்லை. மாற்றி மாற்றிப் பேசி தங்களின் பதவியைக் காப்பாற்றிக்கொண்டால் போதும், கட்சி போனால் போகட்டும் என்ற மனநிலையில் இவர்கள் இருவரும் இருப்பதே அதிமுகவின் சரிவுக்குக் காரணமாக இருக்கிறது" என்றார்.