கோவை வெள்ளியங்கிரி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில் நேற்று 25-வது மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. நேற்று மாலை 6 மணிக்கு இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த விழா இன்று காலை 6 மணிக்கு முடிவுற்றது. இதில் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல்வாதிகள் வரை கலந்துகொண்டனர்.
நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய இந்த சிவராத்திரி கொண்டாட்டத்தில் நடிகைகள் தமனா, காஜல் அகர்வால், நிஷா அகர்வால், சுஹாசினி மற்றும் அதித்தி ராய் ஆகியோர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் பாகுபலி நடிகர் ராணாவும் இருந்தார். மேலும் பாடகர்கள் கார்த்திக், ஹரிஹரன் மற்றும் அமித் திரிவேதி ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.
இதில் பக்தி பாடல்கள், சொற்பொழிவுகள் ஆகியவையும் நடந்தது. ஒரு கட்டத்தில் பாடகர் கார்த்திக் எம்.ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ‘அதோ அந்த பறவை போல் வாழ வேண்டும்’ எனும் பாடலை பாடினார். இதற்கு காஜல், நிஷா காஜல், தமனா ஆகியோர்கள் நடனமாடினர்.
அரசியல் தலைவர்களில் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்த விழாவை தொடக்கிவைத்தார். இவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இருந்தார். மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி துறை அமைச்சர் பியூஷ் கோயல் இருந்தார். தமிழ்நாடு அரசியல் தலைவர்களில் அ.தி.மு.க.வின் எஸ்.பி.வேலுமணி மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கிட்டத்தட்ட 12 மணிநேரமாக நடந்த இந்த விழாவில், நள்ளிரவு 12 மணி அளவில் ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதி யோகி சிலை திடீரென டிஜிட்டல் மயமாக மாறியது. நள்ளிரவு 12 மணி அளவில் அங்கு இருந்த விளக்குகள் எல்லாம் அணைக்கப்பட்டது. அதன் பின் ஆதி யோகி சிலையில் டிஜிட்டல் விளக்குகளால் பல்வேறு வண்ணங்களில் ஜொலித்தது. முதலில் ஆதியோகியின் தலைமேல் இருக்கும் பிறை தோன்றியது, அதன்பின் அந்த சிலையின் தொண்டைப் பகுதி நீல நிறத்தில் மாறியது. அதன் பின் இறுதியாக அந்த சிலையினுள் சிவன் தாண்டவம் ஆடியதுபோல் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
காடுகளின் வழிகாட்டி எனப்படும் யானைகளின் பாதையை மறித்து, ஆக்கிரமித்து ஈஷா யோக மையம் கட்டப்பட்டு இருக்கிறது என தொடர்ந்து புகார்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் பக்தி, பாடல், ஆட்டம் என ஆயிரக்கணக்கான மக்களைக் கூட்டி கொண்டாட்டங்கள் நடக்கின்றது. ஈஷா மையத்தில் நடக்கும் சிவராத்திரி விழாவில் வன உயிரினங்களால் பொதுமக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் வனத்துறை பொறுப்பில்லை உள்பட பல கண்டிப்பான நிபந்தனைகள் கொண்ட கடிதத்தை ஈஷா யோக மையத்திற்கு நேற்று வனத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விழாவில் இருக்கும்போது வனத்துறையின் கடிதத்தைப் பற்றி யாருக்குக் கவலை?