கடந்த பல வருடங்களாக ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருந்தவர்கள் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் அவர்களின் விடுதலையைக் கொண்டாடி வருகின்றன. காலம் தாழ்த்தி இந்த தீர்ப்பு கிடைத்திருந்தாலும் வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தாலும் அதிமுக இந்த விவகாரத்தில் திமுகவை விமர்சனம் செய்து வருகிறது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுகவைக் கடுமையான வார்த்தைகள் கொண்டு விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மூத்த பத்திரிகையாளர் கோவி.லெனின் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
ஏழு பேர் விடுதலை தொடர்பாகக் கருத்து தெரிவித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திமுகவை விமர்சனம் செய்துள்ளார். ஊர்ல கல்யாணம் என்றால் மார்பில் சந்தனம் தடவிக்கிறதுதான் திமுக வேலை என்று விமர்சனம் செய்துள்ளார். நாங்கள்தான் அவர்கள் விடுதலைக்காக முதலில் முயற்சி எடுத்தோம். ஆனால் திமுக அதற்கு உரிமை கொண்டாடுகிறது என்று கூறியுள்ளார். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
முதல்வர் எந்த இடத்திலேயும் அவர்கள் விடுதலைக்கு நாங்கள் மட்டுமே காரணம் என்று கூறவில்லை. காமாலை கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப் போல் அவரின் பேச்சு இருக்கிறது. அதற்கு ஜெயக்குமாருக்கு ஒரு காரணம் இருக்கிறது. அதைச் சொல்கிறேன். இவர்கள் சொல்வதைப் போல் ஜெயலலிதா எப்போது இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் போட்டார்கள். கடந்த 2014ம் ஆண்டு அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து, இவர்களின் விடுதலையை அப்ராபிரியட்(appropriate) அரசு மேற்கொள்ளலாம் என்று தனது தீர்ப்பில் தெளிவாகக் கூறினார்.
இந்தத் தீர்ப்பு வந்த உடனேயே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தைப் போட்டார்கள். அதாவது 2014ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, அதன் பிறகு 2016ம் ஆண்டு வரை அவர் உயிரோடு இருந்தார். இத்தனை ஆண்டு இடைவெளியில் என்ன காரணத்திற்காக அவர்கள் விடுதலை செய்யப்படவில்லை. அவர்கள் தற்போது அனுப்பப்பட்டதை போல 161வது சட்டப்பிரிவைக் கூட அவர்கள் பயன்படுத்தவில்லை. நாங்கள் அவர்களை விடுதலை செய்கிறோம், மூன்று நாட்களுக்குள் உங்கள் முடிவைக் கூறுங்கள் என்று மத்திய அரசுக்கு ஜெயலலிதா கடிதம் அனுப்புகிறார்.
இதற்குப் பதிலளித்த மத்திய அரசு உங்களுக்கு அவர்களை விடுதலை செய்ய அதிகாரம் இல்லை. இந்த வழக்கு சிபிஐ விசாரித்த வழக்கு, எனவே எங்களுக்குத்தான் இந்த வழக்கில் அதிகாரம் உள்ளதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. நீங்கள் இந்த வழக்கிலேயே வரக்கூடாது என்பது மாதிரி தன்னுடைய பதிலைத் தெரிவித்தது. ஜெயலலிதா விடுதலை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் அவர்கள் அப்போதே செய்திருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை. கலைஞர் கூட அப்போதே அதைக் கூறினார். ஏனென்றால் 1970களில் தோழர் தியாகு போன்றவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை 161வது பரிவைப் பயன்படுத்தி விடுதலை செய்திருந்தார் கலைஞர். அதனால்தான், ஏன் 161ஐ பயன்படுத்தாமல் கடிதம் அனுப்புகிறீர்கள் என்று அவர் கேள்வி எழுப்பினார். இன்றைக்கு மீண்டும் திமுக ஆட்சியில் அதைச் செய்து முடித்திருக்கிறார்கள்.