சில தினங்களுக்கு முன்பு அரக்கோணத்தில் நடைபெற்ற மோதலில் இரண்டு இளைஞர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக நடைபெற்ற கண்டன கூட்டத்தில் திருமாவளவன் உரையாற்றினார். அதில் அவர் பேசியதாவது, " அரக்கோணம் கொலை எதற்காக நடந்தது என்று நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஊடகங்கள் அந்த விவகாரத்தை வேறு கோணத்தில் பார்க்கிறது. தலித் இயக்கங்களைச் சேர்ந்த சிலர் அதனை திசை திருப்பப் பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் அடிப்படை பிரச்சினை என்ன என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். இந்த சமூகத்தில் சாதிவெறி ஏற்கனவே இருக்கிறது. ஆனால் திடீரென ஒரு மோதல் நடக்கின்றபோது அதற்கு காரணம் எதுவாகவும் இருக்கலாம். தலித் சைடில் கூட முதலில் பிரச்சினையைத் தூண்டியிருக்கலாம், வம்பிழுத்திருக்கலாம். ஆனால் அதுதான் அந்தக் குற்றச்செயலுக்கு காரணம் என்று பார்க்க முடியாது. அடிப்படை பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்க வேண்டும். ஏற்கனவே இங்கே சாதி முரண்பாடுகள் இருக்கிறது, சாதி வெறுப்பு இருக்கிறது. தலித் என்ற வெறுப்பு அரசியல் இந்த மண்ணில் விதைக்கப்பட்டுள்ளது. அதனால்தான் இரண்டு தரப்புகளுக்கும் இடையே நடக்கிற வாக்குவாதம் கூட கொலையிலே போய் முடிகிறது. குடிகாரர்கள் மோதிக்கொண்டார்கள் என்கிறார்கள். ஆனால் அங்கே நடந்த மோதலில் அவர்களுக்குள்ளாக வெட்டிக்கொண்டார்களா? அவர்கள் போதையில் இருந்தாலும் ஒரே சாதியில் தங்களுக்குத் தாங்களே ஏன் வெட்டிக்கொள்ளவில்லை. தலித் என்பவரை அடையாளம் கண்டுதானே போதையில் இருந்தவர் குத்துகிறார்.
இந்த சம்பவத்தைக் கேள்விபட்டவுடன் மதுரையில் இருந்த நான் உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று, பாதிக்கப்பட்ட அர்ஜூன் குடும்பத்தினரையும், சூர்யா குடும்பத்தினரையும் சந்தித்து சம்பவம் தொடர்பாக கேட்டறிந்தேன். கிராமத்தில் உள்ளவர்கள் அனைவரிடத்திலும் இதுதொடர்பாக பேசினேன். அப்பு என்கிற ஒரு தம்பி பொருள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். அங்கு அந்த தம்பியிடம், ‘நீ என்ன சாதி, எந்த ஊர்’ என்று ஒரு கும்பல் வம்பிழுத்திருக்கிறது. அவர் ஊரையும், சாதியையும் கூறியதை அடுத்து அந்த தம்பியைத் தாக்கியிருக்கிறார்கள். அந்த ஊர், சாதி இரண்டும் அந்த தம்பியைத் தாக்க எதிர்தரப்புக்கு காரணமாக போயிருக்கிறது. தலித் குடியிருப்பில் இருந்து அவன் வருகிறான் என்று தெரிந்ததும் அவன் தாக்கப்பட்டிருக்கிறான். அவன் தன் அண்ணன் சூரியாவுக்கு தொலைப்பேசியில் தகவல் கொடுக்கிறான். அந்தப் பையன்கூட இவனோடு உடன்பிறந்தவர் அல்ல, உறவினர் மட்டுமே. இந்தப் பையன் தகவல் தெரிந்து அங்கே போனதும், அந்தக் கும்பல் சூரியாவை சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அந்த தகவல் கேட்டவுடன் அர்ஜூன் அந்த இடத்திற்கு ஓடுகிறான். இவன் சூரியாவின் உறவினர். இவர்கள் இருவரும் பக்கத்து பக்கத்து கிராமம். இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் வசித்து வந்தார்கள்.
இவர்கள் இருவரும் உறவுக்காரராக இருப்பதால் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்வார்கள். எனவே அர்ஜூன் அந்த இடத்திற்கு விரைந்து செல்கிறார். இவரை கண்ட அந்தக் கும்பல் இருவரையுமே சரமாரியாக அடிக்கிறார்கள். இருட்டான இடத்திற்கு தூக்கிச்சென்று இந்த தாக்குதலை அந்தக் கும்பல் செய்திருக்கிறது. வாக்குவாதத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றது என்றால், ஒரு தரப்பு மற்றொரு தரப்பை அடித்திருப்பார்கள். அதில் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு சம்பவம் கூட நடைபெறலாம். ஆனால் இந்தச் சம்பவம் எதிர்பாராத ஒன்று அல்ல. மிகச் சரியாக திட்டமிட்டு இந்தக் கொலையை அவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். சூர்யா இந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிந்து, அந்தக் கும்பல் ஆட்களைத் திரட்டி வந்து இந்தக் கொலையைச் செய்திருக்கிறார்கள். இந்தக் கொடூரத்தை எதிர்த்து நாம் பேசினால் அரசியல் செய்கிறோம் என்றும் நம்மை ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறார்கள். பாதிக்கப்படுபவர்கள் எங்கே இருந்தாலும் இந்த திருமாவளவன் குரல் கொடுப்பான். எனவே என்னை தடுக்கலாம், அடக்கலாம் என்று யாரும் எண்ண வேண்டும். இந்த சம்பவத்தில் நீதி கிடைக்கும் வரையில் போராடுவேன்" என்றார்.