காவல்துறையினர் தங்களது வழக்கமான ஃபார்முலாவான மாவுக்கட்டை விட்டு சற்று மாறுபட்டு துப்பாக்கியை கையில் தூக்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
பிப்ரவரி 13லிருந்து 22 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் தொடர்ச்சியாக மூன்று இடங்களில் ரவுடிகளின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பிடிக்கப்பட்ட சம்பவம், ரவுடிகளின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இச்சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள் என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
10 நாட்கள் இடைவெளியில் நடந்த மூன்று சம்பவங்கள்:
கோவை;
கோவையைச் சேர்ந்த கோகுல்ராஜ் என்ற ரவுடியின் மீது கோவையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதில் ஒரு கொலை வழக்கின் வாய்தாவிற்காக தனது நண்பர் மனோஜ் என்பவருடன் பிப்ரவரி 13 ஆம் தேதி கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த ஒரு கும்பல் முன்பகை காரணமாக கோகுல்ராஜை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. தடுக்க வந்த மனோஜையும் அந்த கும்பல் தாக்கவே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பட்டப் பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொலை கும்பலைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில் கோத்தகிரியில் பதுங்கியிருந்த சம்பந்தப்பட்ட ஜோஸ்வா (23), டேனியல் (27), எஸ்.கவுதம் (24), கவுதம் (24), பரணி சவுந்தர் (20), அருண்சங்கர் (21), சூர்யா (23) உள்ளிட்ட 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து இவர்களை கோத்தகிரியில் இருந்து கோவை அழைத்து வந்த தனிப்படை போலீசாரிடம் பாதி வழியிலேயே ஜோஸ்வா, எஸ்.கவுதம் இருவரும் தங்களுக்கு வாந்தி வருவதாகவும் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் எனக் கூறவே போலீசாரும் அவர்களை காரிலிருந்து இறக்கிவிட்டுள்ளனர். இதனை பயன்படுத்திக்கொண்டு இருவரும் தப்பித்து ஓடியுள்ளனர். அதனைத் தொடர்ந்து இருவரையும் துரத்திச் சென்ற போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றனர் என்று கூறி துப்பாக்கியால் முழங்காலுக்கு கீழ் சுட்டு போலீசார் பிடித்துள்ளனர்.
திருச்சி;
இந்த சம்பவம் நடந்த ஒரு வாரத்திற்குள் மீண்டும் இதே போன்றதொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. திருச்சி வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் ஆகிய இருவரின் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. இதனால் இவர்களை போலீசார் கடந்த 2 ஆண்டுகளாக தேடி வந்த நிலையில் இருவரும் தலைமறைவாகியிருந்தனர். தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கிய போலீசார் சமீபத்தில் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் திருட்டுப் பொருட்கள் குழுமாயி அம்மன் கோவில் அருகே வைத்திருப்பதாகத் தெரிவித்ததையடுத்து போலீசார் துரை மற்றும் சோமசுந்தரம் இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த இடத்திற்கு ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது துரை மற்றும் சோமசுந்தரம் இருவரும் ஜீப்பை ஓட்டி வந்த போலீஸ் டிரைவர் அசோகனை தாக்கினர். இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகிலிருந்த பள்ளத்தில் இறங்கியது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஜீப்பில் இருந்து எடுத்துக்கொண்டு துரைசாமியும், சோமசுந்தரமும் ஓடினர். இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட போலீசார் அவர்களை விரட்டிச் சென்றபோது துரைசாமி மற்றும் சோமசுந்தரம் ஆகிய இருவரும் போலீசாரை பட்டாக் கத்தியால் தாக்கினர். இதில் இன்ஸ்பெக்டர் மோகனுக்கு இடது கையிலும், போலீஸ்காரர் சிற்றரசுக்கு வலது கையிலும், போலீஸ் ஜீப் டிரைவர் அசோகனுக்கு இடது கையிலும் காயம் ஏற்பட, இருவரையும் எச்சரிக்கை செய்வதற்காக இன்ஸ்பெக்டர் மோகன் முதலில் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். ஆனால் தொடர்ந்து இருவரும் போலீசாரை தாக்க வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் தங்களை தற்காத்துக் கொள்ள இன்ஸ்பெக்டர், குற்றவாளிகள் துரை மற்றும் சோமசுந்தரம் இருவரையும் காலுக்கு கீழ் சுட்டுப் பிடித்துள்ளனர்.
சென்னை;
கடந்த 20 ஆம் தேதி அயனாவரம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக 3 பேர் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சப் இன்ஸ்பெக்டர் சங்கர் சோதனை செய்துள்ளார். அப்போது அந்த கும்பல் சங்கரை தாக்கிவிட்டுத் தப்பித்துச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது பெண்ட் சூர்யா, கவுதம், அஜித் ஆகியோர் எனத் தெரிய வந்தது. மேலும் கிடைத்த தகவலின் அடிப்படையில் தேடுதல் வேட்டையைத் தொடங்கிய போலீசார் நேற்று காலை அயனாவரம் பெண் எஸ்.ஐ மீனா தலைமையிலான குழு கவுதம் மற்றும் அஜித் இருவரையும் கைது செய்தனர்.
ஆனால் எஸ்.ஐ சங்கரை தாக்கிய பெண்ட் சூர்யா மற்றும் தலைமறைவான நிலையில், அவர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனது அக்கா வீட்டில் பதுங்கியிருப்பதாகத் தகவல் கிடைக்கவே, எஸ்.ஐ மீனா தலைமையிலான தனிப்படை சூர்யா தங்கியிருந்த இடத்திற்கு விரைந்து, சூர்யாவை சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து பெண்ட் சூர்யாவை போலீஸ் ஜீப்பில் அயனாவரம் அழைத்து வரும்போது, நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள ஆர்டிஓ அலுவலகம் அருகே வரும்போது பெண்ட் சூர்யா, தான் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறி கேட்க ஜீப்பை ஓரமாக நிறுத்தியபோது அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார். இவரைப் பிடிக்க காவலர்கள் அமுனுதீன், திருநாவுக்கரசு, சரவணன் ஆகியோர் துரத்திச் சென்றுள்ளனர். அப்போது ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கத்தியை எடுத்து காவலர்கள் மூவரையும் தாக்கிவிட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து தங்களை தற்காத்துக்கொள்ளவும், காவலர்களைத் தாக்குதல்களில் இருந்து காப்பாற்றவும் எஸ்.ஐ மீனா தூப்பாக்கியை எடுத்து குற்றவாளியை சுட்டுப் பிடித்துள்ளார். பெண்ட் சூர்யா மீது ஏராளமான வழக்குகள் உள்ளது.
இது குறித்து மனித உரிமை ஆர்வலரான வளர்மதி நம்மிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் இது முதல்முறையல்ல. ஏறத்தாழ ஒன்றரை வருடத்திற்கு முன் ஸ்ரீபெரும்புதூரில் வடமாநிலத்தைச் சேர்ந்த குற்றவாளி ஒருவர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மூத்த வழக்கறிஞர் தலைமையிலான ஒரு உண்மை கண்டறியும் குழு விசாரித்து இது போலி என்கவுண்டர் எனத் தெரிவித்தனர். இதுமட்டுமன்றி இங்கு நடக்கும் அதிகப் படியான என்கவுண்டர்களும், இதுபோன்று போலீஸ் சுட்டுப் பிடிக்கும் சம்பவங்களும் போலியானதாகவே இருக்கின்றன.
நேற்று பாஜகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய பாஜகவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரின் கருத்துக்கும், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கும் என்ன வித்தியாசம். தொடர்ச்சியாக காவல்துறையினர் துப்பாக்கி எடுத்து சுடுவது இயல்பாக இருக்கிறது. குறிப்பாக பேசப்படாமல் இருக்கிறது. வட மாநிலங்களில் துப்பாக்கி கலாச்சாரம் இயல்பானது என பேசுகிறோம். நம் காவல்துறையின் இச்சம்பவம் குறித்து பேசுவதில்லை” என்று தெரிவித்தார்.