அதிமுகவில் உள்ள கழக சிறுபான்மை நலப்பிரிவின் இணை செயலாளராக இருப்பவர் முகமதுஜான் தற்போது மாநிலங்களவை வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
முகமது ஜான் வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை நகரத்தை சேர்ந்தவர். கடந்த 2011 முதல் 2016 வரையிலான காலக்கட்டத்தில் இராணிப்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். 2011ல் ஆட்சிக்கு வந்ததும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைத்த அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் முகமதுஜான். அதோடு வேலூர் மாவட்ட செயலாளராகவும் இருந்தார். அப்போது ஜெயலலிதா அமைத்த 5 பேர் கொண்ட கட்சி கமிட்டியில் ஓ.பி.எஸ். இருந்தார். அவரது கைங்கர்யத்தால் அவரது பதவி பறிக்கப்பட்டது. இதன் பின்னணியில் அமைச்சராகவுள்ள வீரமணியும் இருந்தார் என்றும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு உதவினார் எனவும் குற்றம்சாட்டப்பட்டது. எம்.எல்.ஏ.வாக இருந்தும் அடங்கியே இருந்தார். கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது சீட் கேட்டவருக்கு தரப்படவில்லை. இந்நிலையில் அதிமுகவினரே எதிர்பாராத விதமாக முகமதுஜான்க்கு ராஜ்யசபா எம்.பி பதவி வேட்பாளராக்கப்பட்டுள்ளார்.
இதுப்பற்றி ராணிப்பேட்டை அதிமுகவினரிடம் விசாரித்தபோது, மாவட்டத்தில் அமைச்சர் வீரமணியின் டாமினேட் அதிகமாகவுள்ளது. அதனால்தான் ஜெயலலிதா இறந்ததும் முன்னாள் அமைச்சர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகண்டன், அணைக்கட்டு கலையரசு, சோளிங்கர் எம்.எல்.ஏ. பார்த்திபன், ஆற்காடு முன்னாள் எம்.எல்.ஏ. சீனுவாசன் என பலரும் கட்சியை விட்டு அமமுகவுக்கும், பாஜகவுக்கும் சென்றார்கள். இதனால் வேலூர் கிழக்கு மாவட்டத்தில் கட்சி படுவீக்காக உள்ளது. தினகரனே கூட, முகமதுஜானை அமமுகவுக்கு அழைத்தார், ஆனால் அவர் செல்லவில்லை அதற்கு பரிசாகத்தான் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கப்பட்டுள்ளது என்றார்கள்.
மேல்மட்ட அதிமுகவினரோ, அமைச்சர் வீரமணி ஆரம்பம் முதலே எடப்பாடியை எதிர்த்துவருகிறார். துணை முதல்வர் ஓ.பி.எஸ். ஆதரவுதான் இதற்கெல்லாம் காரணம் என்பது முதல்வராகவுள்ள எடப்பாடிக்கு தெரியும். மேலே ஓ.பி.எஸ்.க்கும், மாவட்டத்தில் வீரமணிக்கும் செக் வைக்கவே, முகமதுஜானை எம்.பி.யாக்க முடிவு செய்தார் எடப்பாடி. அதோடு, திமுகவில் ஒரு ராஜ்யசபா சீட் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்த வழக்கறிஞர் வில்சன்க்கு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் இஸ்லாமியர்கள் நம்மீது அதிருப்தியில் உள்ளனர். அந்த அந்த கோபத்தை போக்க இஸ்லாமிய சமுதாயத்துக்கு நாம் சீட் வழங்கினால் நம்மீது அச்சமூகத்துக்கு உள்ள கோபத்தை தணிக்க முடியும் என்பதற்காக அமைச்சர் தங்கமணி சிபாரிசு மூலமாக முகமதுஜானை தேர்வு செய்தனர். பாராளமன்றத்தில் எம்.பி.யாக இருந்த அன்வர்ராஜா பாஜகவுக்கு எதிராக பேசியதால், மீண்டும் அவரை எம்.பி.யாக்கி பாஜகவின் கோபத்துக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதற்காக இவரை தேர்வு செய்தனர் என்கின்றனர்.