அந்தக் கால கதாநாயகி எஸ்.பி.எல்.தனலட்சுமி 1930-40 காலகட்டத்தில் ‘கிருஷ்ணபக்தி’, ‘காளமேகம்’ உட்பட சில படங்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். பிரபல இயக்குநர் கே.சுப்பிரமணியம் தனது ‘கச்சதேவயானி’ படத்திற்கு தனலட்சுமியை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய அவரின் வீட்டுக்குச் சென்றார்.
தனலட்சுமி தனது வீட்டுப் பணிப்பெண்ணாக தன் அக்காள் மகள் ராஜாயி என்கிற இளம்பெண்ணை நியமித்திருந்தார். ராஜாயி காபி எடுத்துக்கொண்டு வந்து டைரக்டரிடம் கொடுத்துவிட்டுப் போனார். அந்தப் பணிப்பெண்ணையே வைத்த கண் வாங்காமல் பார்த்த டைரக்டர், தனலட்சுமியிடம் அந்த பணிப்பெண்ணைப் பற்றி விசாரித்துவிட்டுக் கிளம்பினார். தன் எண்ணத்தில் உருவான கச்சதேவயானி கேரக்டரை அப்படியே பிரதி எடுத்தாற்போல் இருப்பதாக உணர்ந்த டைரக்டர், அந்தப் பெண்ணையே கதாநாயகியாக தேர்வு செய்தார்.
'கறுப்பா இருக்கிற இந்தப் பெண்ணா கதாநாயகி?' என பலரும் அதிர்ச்சியும், வியப்பும் அடைந்தனர். ராஜாயிக்கு ஒப்பனை செய்ய மறுத்தார் மேக்-அப் மேன். ஆனால், பலத்த எதிர்ப்புகளையும் மீறி ராஜாயியை நாயகியாக்கினார் கே.சுப்பிரமணியம். படம் வெளியானது. தமிழ் சினிமாவில் ராஜாயியின் ராஜ்ஜியம் தொடங்கியது. மூன்று தீபாவளிக்கு தொடர்ந்து ஓடிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் ’ஹரிதாஸ்’ படத்தில் ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ?’ என பாகவதர் பாட, அந்தப் பாட்டுக்கு விழியால் வலைவீசி, நளினமான இடைநெளிப்போடு ராஜாயி ஆடிய நடனத்தை எப்போதும் மறக்கவே முடியாது.
இப்போது கேரள சினிமாவில் பிரியா பிரகாஷ் வாரியர் செய்த துப்பாக்கி முத்தம் பரபரப்பானதுபோல் அந்தக் காலத்திலேயே ‘மன்மதலீலையை’ பாட்டில் உதட்டைச் சுழித்து ஒரு பறக்கும் முத்தம் ஏவுவார் பாகவதருக்கு. அந்தத் தாக்குதலில் தான் இன்ப அதிர்ச்சி ஆனதுபோல் பாகவதர் நெஞ்சில் கைவைப்பார். அந்தக் காட்சியில் பாகவதர் மட்டுமா இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்? படம் பார்த்த எல்லோரும்தான்.
கறுப்பாக இருந்தாலும், துறுதுறு கண்கள், சிலைபோல செதுக்கிய உடல்வாகு கொண்ட அவர் தமிழ் சினிமாவின் முதல் கனவுக்கன்னியாக பெயர் பெற்றார். அழகாலும், நடிப்பாலும், கொஞ்சும் பேச்சாலும் ரசிகர்களுக்கு மோகப்பித்து பிடிக்கவைத்த அந்த அழகு ராஜாயி... சினிமா ரசிகர்களை ஆண்ட அழகு ராசாத்தி... டி.ஆர்.ராஜகுமாரி.
குடும்ப கஷ்டம் காரணமாக பிழைப்புத் தேடி சென்னை வந்த விஜயலட்சுமி, தன் உறவினர் வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார். கறுப்பாக இருந்தாலும் பார்க்கிறவர்களை கிறங்கி, கீழே விழவைக்கிற போதை விழிகள் விஜயலட்சுமிக்கு. தான் எழுதிய கதைக்கு சாராயம் விற்கிற ஒரு தெனாவெட்டான அழகு கொண்ட கேரக்டரில் நடிக்க, ஏதேச்சையாக தான் சந்தித்த விஜயலட்சுமி பொருத்தமாக இருக்கவே, அவரை நடிகையாக அறிமுகப்படுத்த சிபாரிசு செய்தார் நடிகரும், கதாசிரியருமான வி்னுசக்கரவர்த்தி.
‘வண்டிச்சக்கரம்' படம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே, விஜயலட்சுமியின் போதையூட்டும் விழிகள் கேரளாவையும் கவர ‘இணையே தேடி’ படத்தில் நடிக்கவைத்தார்கள். முதலில் வெளியானது மலையாளப் படம். என்றாலும் ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் ஸ்மிதாவாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு ‘சிலுக்கு’ என்கிற கேரக்டரில் அவரை திரையில் பார்த்த ரசிகர்கள் மது குடிக்காமலேயே போதைக்கு ஆளானார்கள். சிலுக்கு... ‘நேத்து ராத்திரி’ வரை அவர்தானே சினிமா ரசிகர்களை தன் கவர்ச்சியால் ஆண்டார்.