தமிழ்நாட்டு பெண்கள் கடல் கடந்தும் சாதனை படைத்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த சாருலதா என்கிற மோனிகா தேவேந்திரன் பல் மருத்துவம் படித்த கையோடு ஒரு அமைப்பை உருவாக்கி பல்வேறு சமுதாயப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இங்கிலாந்தில் மேயராகவும் இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் ஒரு சிறப்பு நேர்காணல்..
இங்கிலாந்தில் துணை மேயராக இருந்த நான் இப்போது மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். துணை மேயராக இருந்தபோது மக்களுக்கான பணிகளைத் தொடர்ந்து செய்தேன். மக்களுக்கான பிரச்சனைகளைக் கண்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்கினேன். தலைவர்களுடன் மக்களுக்கு தொடர்பை ஏற்படுத்தினேன். அதிகாரிகளுடன் பேசி மக்களின் பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தேன். அதனால் மக்கள் என்னை மேயராக இப்போது தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். கடவுளின் அருளும் இதற்கு ஒரு காரணம்.
மார்கரெட் தாட்சர் அவர்களுடைய புத்தகங்களை சிறு வயதிலிருந்து படிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. என்னுடைய கணவர் ஒரு விஞ்ஞானி. தொழிலதிபராக ஒரு நிறுவனத்தை இங்கு உருவாக்கினேன். மக்கள் சேவையையும் தொடர்ந்து வந்தேன். கன்சர்வேடிவ் கட்சியிலிருந்து என்னை அழைத்து எனக்கு சிட்டிங் எம்.எல்.ஏ சீட் வழங்கினர். நானும் வெற்றி பெற்றேன். என்னுடைய தந்தையும் ஒரு தொழிலதிபர் தான். அரசியலுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் சம்பந்தமே இல்லை. என்னுடைய உழைப்பு தான் என்னை அரசியலுக்கு அழைத்து வந்தது.
நாம் முன்னேறும்போது நமக்கு நெருக்கடிகள் வருவது இயல்பு. அவற்றை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். கடவுளின் அருளால் ஒருநாள் இங்கிலாந்து பிரதமராக வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அந்தந்த பணிகளுக்கு அந்தந்த நேரங்களை நான் ஒதுக்கீடு செய்கிறேன். எவ்வளவு பணிகள் இருந்தாலும் என்னுடைய குழந்தைகளுக்காகவும் நான் நேரம் ஒதுக்குகிறேன். வெளிநாட்டில் இருந்தாலும் குழந்தைகளை இந்திய கலாச்சாரத்தின்படியே வளர்க்கிறோம். என்னுடைய முன்னேற்றத்திற்கு என்னுடைய கணவர் மிகுந்த உறுதுணையாக இருக்கிறார்.
இளைஞர்கள் தங்களுக்கென்று ஒரு வட்டத்தை உருவாக்கி அதற்குள் முடங்கிவிடக்கூடாது. நம்முடைய கனவுகளை தொலைநோக்குப் பார்வையுடன் விரிவாக்க வேண்டும். அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும். இப்போது இங்குள்ளவர்களும் எனக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கிறார்கள்.