திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள. புகழேந்தியை நாம் பேட்டி கண்டபோது, இந்திய மற்றும் தமிழக அரசியல் குறித்து விரிவாகப் பகிர்ந்துகொண்டார். அதில் சிறு பகுதியை மட்டும் இங்கு தொகுத்துள்ளோம்...
எடப்பாடி பழனிசாமியின் கட்சியிலேயே அவருக்கு எதிராக ஒரு குரூப் இருக்கிறது. இந்த மதுரை மாநாடு ஒரு படுதோல்வி என அவரோடு இருந்த ஓபிஎஸ் சொல்கிறார். நீட் தேர்வை எதிர்த்து அதிமுக மாநாட்டில் ஏதாவது தீர்மானம் போட்டார்களா? தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு, அதை நான் டிவியில் பார்த்து தான் தெரிந்துகொண்டேன் என்று சொன்ன கொடூர மனம் படைத்தவர் எடப்பாடி பழனிசாமி. தாக்கப்பட வேண்டிய ஒன்றிய அரசை விட்டுவிட்டு திமுக அரசையே தொடர்ந்து அவர் தாக்குகிறார். அதிமுகவின் மாநாட்டுக்கு வந்தவர்கள் கூலிக்காக அழைத்து வரப்பட்டவர்கள். காசு கொடுத்து இவர்கள் ஆட்களை அழைத்து வந்தது பற்றி ஓபிஎஸ் பேசியிருக்கிறார்.
குஜராத் உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் இதற்கு முன்பும் பலமுறை கண்டித்துள்ளது. குஜராத்தில் உள்ள நீதித்துறையே வேறு மாதிரி இருக்கிறது, அங்கிருந்து வரும் தீர்ப்புகள் வித்தியாசமாக இருக்கின்றன என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. சில நீதிபதிகள் காவி அடையாளத்துக்குள் சென்றுவிட்டனர் என்று அனைவருமே இன்று கூறுகின்றனர். ஊழல் செய்து மக்கள் பணத்தை ஏமாற்றுபவர்களிடம் தான் பாஜக தொடர்பு வைத்துள்ளது.
எங்களுடைய மேய்ச்சல் நிலங்களை எல்லாம் சீனர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று ராகுல் காந்தியிடம் லடாக் மக்கள் தெரிவித்தனர். அதை அவர் வெளிப்படுத்தினார். உடனே அவர் மீது பாஜகவினர் அவதூறு பரப்புகின்றனர். சீனாக்காரர்களோடு சேர்ந்து ஆட்டம் போடுவது பாஜக தான். சுப்பிரமணியன் சாமி கூட சீனர்கள் இந்தியாவை எந்த அளவுக்கு ஆக்கிரமித்துள்ளனர் என்பது பற்றி தெரிவித்துள்ளார். அவர் சொன்னது தவறு என்று பாஜகவில் யாராவது மறுத்தார்களா? ஏன் அப்போது அமைதியாக இருந்தீர்கள்? அவர் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? ஆனால் மக்களுடைய வேதனையை ராகுல் காந்தி பகிர்ந்தால் அவர் மீது வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள். சீனாக்காரனை உள்ளே விட்டது மோடி. அவர்களோடு தொழில்கள் செய்து வருவது மோடி. குஜராத்தில் மோசடி செய்த அவர்களைத் தப்பிக்க வைத்தது மோடி. இந்த பாசிஸ்டுகளின் நிலைப்பாடு மிகவும் கொடூரமானது. அதை மறைப்பதற்காகத் தான் இவர்கள் ராகுல் காந்தி மீது குறை சொல்கிறார்கள்.