முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்று சொல்வதை விட தேர்தல் சீர்திருத்தவாதி என்று அழைக்கப்படும் டி.என். சேஷன் நேற்று மாரடைப்பினால் காலமானார். கேரளா மாநிலம் பாலக்காட்டில் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் 1932 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி பிறந்த டி.என். சேஷன் கடந்த 1990 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையராக பதவி ஏற்று கொண்டார். நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் என்ற பெருமைக்கு உரியவர் அவர். தேர்தல் பாதுகாப்புக்காக மத்திய மத்திய போலீஸ் படையை அனுப்பும் முறையை கொண்டுவந்து ஒழுங்கீனங்களை கட்டுக்குள் கொண்டுவந்தா். தேர்தலில் மதம் சார்ந்த பிரசாரத்திற்கும் தடை விதித்தவர். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பதவி வகித்தபோது முதல் முறையாக வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. அதேபோல், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த வரைமுறைகளை உருவாக்கினார்.
வாக்குகளை விலைக்கு வாங்குவது தடுக்கப்படும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். தேர்தல் செவினங்கள் பற்றிய முழு கணக்குகளை வேட்பாளர்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையையும் அமல்படுத்தினார். தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்தி அரசியல் கட்சிகளுக்கு கட்டுப்பாட்டினை கொண்டு வந்தவர். இவரது காலத்தில் கள்ள ஓட்டுப்பதிவு பெருமளவில் தவிர்க்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இந்த சீர்திருத்த நடைமுறைகள் இவர் பதவியேற்பதற்கு முன்பு வரை அமலில் இல்லை. மேலும் இவருக்கும் அதிமுக அப்போதைய அதிமுக அரசுக்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இவரை மிக கடுமையான முறையில் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
![fg](http://image.nakkheeran.in/cdn/farfuture/vTVZHT0PknfBOy9cdtPNejqZRaP9Xluj6HDe2QdkP4I/1573448176/sites/default/files/inline-images/as_6.jpg)
இவர் அரசு பணியில் சிறப்புடன் பணியாற்றியதற்காக கடந்த 1996ம் ஆண்டு மகசேசே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டார். ஓய்வுக்குப் பின்னர் கடந்த 1997ஆம் ஆண்டில் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் கே.ஆர்.நாராயணனுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியுற்றார். இவருக்கு அப்போது ஆதரவளித்த ஒரே கட்சி இன்றைய பாஜகவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் சிவசேனா மட்டும்தான். கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரான எல்.கே.அத்வானிக்கு எதிராக குஜராத்தின் காந்திநகரில் போட்டியிட்டார். எனினும் அந்தத் தேர்தலில் சேஷன் தோற்றுப் போனார். இவ்வாறு தேர்தல் ஆணைய விதிகளை பாமர மக்களும் அறிந்துகொள்ள அவர் காட்டிய அக்கறை என்பது வரலாறாய் எப்போதும் பேசப்படும் என்பது மட்டும் காலத்தால் அழியாத உண்மை!