சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி குழந்தை வன்கொடுமைக்கு ஆளானதைத் தொடர்ந்து பலரும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர். அந்த குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கறிஞர்கள் சங்கத்தில், அவர்களுக்கு ஆதரவாக யாரும் வாதாடக்கூடாது என முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் எடிட்டர் ஆண்டனி அந்தக் குழந்தை என் அப்பார்ட்மெண்டில்தான் உள்ளது, அந்தக்கொடுமை என் அப்பார்ட்மெண்ட்டில்தான் நடந்தது என வேதனையுடனும், கோபத்துடனும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து நக்கீரன் அவரைத் தொடர்புகொண்டது. அப்போது அவர் அளித்த பேட்டி.
ஒரே இரவில் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்துகிறார்கள். பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. போன்ற சட்டங்களை அதிரடியாகக் கொண்டுவருகிறார்கள். இதேபோல் இந்த கொடுமைக்கும் ஒரு சட்டத்தைக் கொண்டுவரலாமே. ஒரு கடுமையான சட்டத்தைக் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும். குறைந்தபட்சம் அவர்களுக்கு சார்பாக யாரும் வாதாடக்கூடாது என்ற சட்டத்தையாவது கொண்டுவரலாமே. குற்றவாளிகளுக்கு அன்றைக்கே தண்டனை கொடுக்க முடியவில்லையென்றாலும், அதிகபட்சம் ஒரு வாரத்திற்குள்ளாவது அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படவேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டுவரவேண்டும். பாலியல் குற்றங்களை பற்றி நினைத்தாலே அவனுக்கு பயம் வரவேண்டும். அந்தளவிற்கு கடுமையான ஒரு சட்டத்தைக் கொண்டுவரவேண்டும். சிலர் கூறுவார்கள் மனித உரிமைகள் ஆணையம் அதை அனுமதிக்காது என்றும், இதனாலேயே அவன், அந்தப் பெண்ணை கொன்றுவிடுவான் என்றும். அவன் இப்போதே அந்தப் பெண்ணை முக்கால்வாசி கொன்றுவிட்டான். பாலியல் குற்றங்களுக்கு ஆளாக்கப்படும் பெண் அப்போதே முக்கால்வாசி இறந்துவிடுகிறாள். நான் ஃபேஸ்புக்ல போட்டதுமாதிரிதான் அவன அந்த இடத்துலையே வெட்டணும் அப்பதான் மத்தவனுக்கு பயம்வரும், இனிமேல் இப்படி செய்யக்கூடாதுனு. எனக்கும் ஒரு பொண்ணு இருக்கு. நல்லவேளை நான் அங்கு தங்கவில்லை, நினைத்தாலே பயமா இருக்கு.
நாம ஒண்ணும் பெரிய ஞானி கிடையாது. நாம பண்றது எல்லாம் சரியும் கிடையாது. ஆனால் இதெல்லாம் மிகப்பெரிய தவறு. இதைத் தடுப்பதற்கு ஒரு கடுமையான சட்டம் கொண்டுவரவேண்டும். மேலிடத்துல மட்டும் ஒரே இரவில் சட்டம் கொண்டுவராங்கள்ல. அதேமாதிரி இதற்கும் சட்டம் கொண்டுவரவேண்டும் அதுவும் உடனடியாக.13 வயதிற்கு கீழ் இருந்தால்தான் மரணதண்டனை என்ற சட்டம் உள்ளது. அதென்ன 13 வயது, இது ஒரு கேவலமான சட்டம். 13 வயதிற்குமேல் என்றால் கிடையாதா. 13 வயதென்றாலும், 60 வயதென்றாலும் வலி ஒன்றுதானே, உணர்ச்சி ஒன்றுதானே. அந்த குற்றத்தில் ஈடுபடுபவனுக்கு வயது ஒன்றுதானே. கடுமையான தண்டனைகளை உடனடியாக கொண்டுவரவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பயம் வரும்.