Skip to main content

ஸ்டாலின் குறித்து உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்... ஓபிஎஸ்ஸிடம் புலம்பிய ஈபிஎஸ்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


அனைத்துக் கட்சிகளும் இணைந்து பேரிடரை எதிர்கொள்வதே சரியாக இருக்கும் என்பதை வலியுறுத்தினார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாட்டை ஆளும் எடப்பாடி பழனிசாமி, கேரள முதல்வரைப்போல கிடையாது. கரோனா கால உதவிகளால் தன் ஆட்சிக்கும் தனிப்பட்ட முறையில் தனக்கும் இமேஜ் கூட வேண்டும் என்பதிலேயே கவனமாக இருந்தார். அதனால் அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்த இது அரசியல் இல்லை என மறுத்துவிட்டார்.
 


ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தோழமைக் கட்சிகள், தி.மு.க. மா.செ.க்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மக்களுக்கான உதவிகளைச் செய்துதருவது குறித்து தொடர்ந்து ஆலோசித்து வருவது ஸ்டாலினின் வழக்கமாக இருக்கிறது. அரசின் தடை முயற்சிகளையும் மீறி, தோழமைக் கட்சிகள் கூட்டத்தை வீடியோ கான்பரன்ஸில் நடத்திமுடித்தார். மேலும், தி.மு.க. மற்றும் இளைஞரணி மூலம் உதவிகள் தொடர்ந்தன. கனிமொழி எம்.பியின் தொடர்ச்சியான தொகுதி நலப் பணிகள் வரிசையில் தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்களும் களத்தில் இறங்கியுள்ளனர்.
 

 

dmk


இந்நிலையில்தான், கரோனா விவகாரத்தில் ஸ்டாலின் காட்டும் அக்கறையின் மூலம், மக்களிடம் தி.மு.க.வுக்கு செல்வாக்கு அதிகரித்து வருவதாகவும், நல்ல பெயர் கிடைப்பதாகவும் தமிழக உளவுத்துறை அண்மையில் எடப்பாடிக்கு உஷார் ரிப்போர்ட் அனுப்பியிருந்தது. மேலும், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல் தொடங்கி, கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நடக்கும் அனைத்து விதமான தவறுகளையும் சுட்டிக் காட்டி வருகிறார் ஸ்டாலின். இது எடப்பாடியை பழனிசாமியை டென்ஷனாக்கியது.
 

http://onelink.to/nknapp


இதற்கிடையே, ஊரடங்கு காலம் முடிந்த பின்னாலும், பொருளாதாரச் சிக்கல்கள் தொடரும் எனும்போது, அதில் மத்திய, மாநில அரசுகளின் பார்வை போதுமானதாக இல்லை. எனவே, இதில் முழுமையாகக் கவனம் செலுத்தி, தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகள் தற்போதைய செயல்பாடுகளை, தொடர் நிகழ்வாக மாற்ற புதிய திட்டத்தை வகுத்திருக்கிறார் ஸ்டாலின்.
 

stalin


’ஒன்றிணைவோம் வா' எனப் பெயரிடப் பட்டிருக்கும் இந்தத் திட்டத்தின் வழியாக, தி.மு.க. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்களுடன் வீடியோ கான்ஃபரன்ஸில் ஏப்ரல் 20-ம் தேதி அவர் பேசியிருக்கிறார். ’எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே' என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளைச் சொல்லி "ஒன்றிணைவோம் வா'’ திட்டத்தைத் தொடங்கி வைத்து விவரித்தார்.

"இத்திட்டத்தில், 5 தொகுப்புகள் உள்ளன. ஸ்டாலினுடன் இணைவோம், பொதுமக்களுக்கான உதவி எண், நல்லோர் கூடம், ஏழை எளியவர்களுக்கு உணவு, வர்ச்சுவல் வட்டாரக் குழுக்கள் ஆகிய தொகுப்புகள் மூலம் தினமும் 10 லட்சம் குடும்பங்களுக்குப் பக்கபலமாக இருந்து அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நம் பணிகள் இருக்கவேண்டும். தன்னார்வலர்களுக்கும் எளிதில் உதவுவோம். இதனை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குத் தடையின்றி உணவும், நிவாரணமும் போய்ச்சேர்வதை உறுதிப் படுத்துவதற்காகத்தான் இந்தப் புதிய முயற்சி'' எனப் பேசியிருக்கிறார்.

தி.மு.க. சீனியர்கள் ஏற்றுக்கொண்டுள்ள இந்தத் திட்டத்தை தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் நிறுவனம் வடிவமைத்துக் கொடுத்திருக்கிறது.

இந்த முயற்சியின் மூலம், ஒவ்வொரு வார்டிலும் பொதுமக்கள் பத்து அல்லது இருபது பேருக்கு ஒரு தி.மு.க. பொறுப்பாளர் வீதம் தொடர்ந்து இணைப்பில் இருப்பதை உறுதிசெய்து, நான்கு கோடி மக்களோடு தொடர்பில் இருக்கமுடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது தி.மு.க. தரப்பு. கரோனா சமயத்தில் தி.மு.க.வின் செயல்பாடுகள் குறித்து உளவுத்துறை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமிக்குக் கொடுக்கும் ரிப்போர்ட்டுகள் வெறுப்பேற்றி வரும் நிலையில், 'ஒன்றிணைவோம் வா' பற்றிய புதிய ரிப்போர்ட் அவரைக் கலங்க வைத்திருக்கிறது.

இதுகுறித்து ஓ.பி.எஸ்.சிடம் பேசிய எடப்பாடி, "நிவாரண உதவிகளில் தேனியில் உங்கள் மகன் ரவீந்திரநாத், தர்மபுரியில் கே.பி. முனுசாமி, நாமக்கல்லில் தங்கமணி, கோவையில் வேலுமணி, கரூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மதுரையில் உதயக்குமார், வட சென்னையில் ஜெயக்குமார் ஆகியோர் மட்டுமே சீரியஸ்னஸ் காட்டி மக்களுக்கு உதவுகிறார்கள். மற்ற மாவட்டங்களில் இருக்கும் அமைச்சர்களோ, கட்சி நிர்வாகிகளோ நிவாரணப் பணிகளில் ஈடுபாடு காட்டவில்லை எனும் உளவுத்துறை ரிப்போர்ட் எனக்கு மிகுந்த மன வருத்தத்தைத் தருகிறது.


அரசு அதிகாரத்தைக் கொண்டு, எல்லா வித நன்மைகளையும் நிர்வாகிகள் அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் என்ன குறை வைத்தோம். ஒரு நெருக்கடியான நேரத்தில் மக்களுக்கு நம்மீது நல்ல அபிப்ராயம் வரும்படி அரசியல் செய்யவில்லை என்றால் எப்படி? சேலம் மாவட்டத்திலேயே நிர்வாகிகள் சுணங்கிப் போயிருப்பதை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இதனைப் பயன்படுத்தி ஸ்டாலின் கோல் அடித்து வருவது எனக்கு மேலும் மன உளைச்சலைத் தருகிறது'' என ஏகத்துக்கும் ஓ.பி.எஸ்.சிடம் புலம்பித் தள்ளியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால், அ.தி.மு..கவில் புதிய வேகத்திற்கான வியூகங்களை வகுக்க ஒரு ஆலோசனை டீம் உருவாக்கியுள்ளது.