Skip to main content

“மோடி வந்து பிரச்சாரம் செய்தும் 167 பூத்தில் சிங்கிள் டிஜிட் வாக்கு கூட வாங்காத அண்ணாமலை..” - சிவ ஜெயராஜ் விளாசல்

Published on 16/12/2022 | Edited on 16/12/2022

 

dmk advocate siva jeyaraj talks about annamalai edapadi palanisamy 
சிவ ஜெயராஜ்

 

திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 14ம் தேதி இளைஞர் நலன்  மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அமைச்சராக உதயநிதி பதவியேற்றதை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞரும் திமுக செய்தித்தொடர்பு இணைச் செயலாளருமான சிவ ஜெயராஜ் நக்கீரன் டிவி யூடியூப் சேனலுக்கு நேர்காணல் அளித்தார். அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி பதில்கள் கீழே...

 

ஆதாரத்துடன் திமுக மீது ஊழல் புகார் கொடுக்கப் போவதாக அண்ணாமலை சொல்லி வருகிறாரே?

அண்ணாமலை பாஜக தலைவராக இருந்து செய்த ஆக்கப்பூர்வமான விஷயம் என்னவென்று சொன்னால், கே.டி.ராகவன் வீடியோ வந்தது, டெய்சி - திருச்சி சூர்யாவின் ஆடியோ வந்தது. இது இரண்டு மட்டும்தான் அவர் ஆக்கப்பூர்வமாக செய்த விஷயம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் மாற்றுக்கருத்து உள்ள அரசியல்வாதிகள் எவ்வளவோ பேரைப் பார்த்துவிட்டோம். ஆனால், அண்ணாமலை அரசியல் அவமானம். கோவையில் கார் வெடிப்பு பிரச்சனை நடந்தபோது ஆறுதல் சொல்லாமல், முருகன் கோவிலில் படிக்க வேண்டிய கந்தசஷ்டி கவசத்தை சிவன் கோவிலில் படித்தார். எதை, எங்கே என்று, அந்த அடிப்படை அறிவு கூட அவரிடம் இல்லை.

 

கோவை சம்பவ இடத்திற்கு சென்று குண்டூசிகளும் ஆணிகளும் கீழே கிடந்ததை வைத்து இது குண்டுவெடிப்பு என்றார். உங்களிடம் ஆதாரம் கிடைத்திருந்தால், அதனைக் கொண்டுபோய் இன்வெஸ்டிகேஷன் ஆபீசரிடம் கொடுத்திருக்க வேண்டும். மேலும், அவரை சந்தித்து ஏதாவது பேசினாரா? இல்லை. பெங்களூரில் குண்டு வெடித்தபோது அதைப் பற்றி பாஜகவினர் ஏதாவது பேசினார்களா? ஐபிஎஸ் பணியில் இருக்கும்போது தன்னை பிரௌட் கன்னடியன் என்று சொல்லிக்கொண்டார். அதுதான் இன்னும் அவர் மனதில் உள்ளது. பெங்களூரில் உள்ள ஐஐடி நிறுவனங்கள் எல்லாம் கோவை நோக்கி வருகிறது. கோவை இன்னொரு ஹைடெக் சிட்டி ஆகிறது. அதை உடைக்க வேண்டும் என்று ப்ரௌட் கன்னடியன் அண்ணாமலை திட்டமிட்டுப் பரப்பிய நாடகம்தான் அது.

 

மூன்று மாதங்களுக்கு முன்பு வந்து சென்ற பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி என்று சொன்னால்... பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பு தேசியப் பாதுகாப்பு அமைப்பின் கீழ் வருகிறது. அப்படியானால், அமித்ஷாவை நோக்கி சவால் விடுகிறார் என்றுதான் நான் பார்க்கிறேன். அந்த அளவுக்கு தைரியம் அண்ணாமலைக்கு வந்துவிட்டதா?

 

ஆளுநரே தேவையில்லை என்பவர்கள் அமைச்சராகப் பதவியேற்க மட்டும் ஆளுநர் தேவையா என அண்ணாமலை கேள்வி எழுப்புகிறாரே?

கவர்னர் என்று ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது அவரிடம்தான் பதவியேற்க வேண்டும். அப்படி ஒருவர் இல்லை எனும்போது, நாங்கள் தலைமை நீதிபதியிடம் போய் பதவி ஏற்றுக்கொள்வோம். கவர்னர் என்ற பொறுப்பைத்தான் பார்க்கிறோம். கவர்னருக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட வாய்க்கால் வரப்புத் தகராறு என்று எதுவும் இல்லை. சென்னா ரெட்டி கார் மீது கடப்பாரை விட்டு, ராஜ்பவன் மின்சாரத்தைக் கட் செய்த காட்டுவெறி அதிமுகவின் கூட்டணியாக உள்ள பாஜகவா எங்களைப் பார்த்து கேள்வி கேட்பது.

 

திமுகவுக்கும் பாஜகவுக்கும் தான் இனி அரசியல் களம் என்று அண்ணாமலை சொல்கிறாரே?

சிலுவம்பாளையம் பழனிசாமிதான் பதில் சொல்லவேண்டும். அவர் ஒரு எதிர்க்கட்சித் தலைவர். 65 எம்எல்ஏ வைத்துக்கொண்டு ஆளுநரைச் சந்தித்துவிட்டு நான்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று பேட்டி கொடுக்கும் நிலைக்கு ஆளாகிவிட்டார். அவர் கூட்டணியில் உள்ள கட்சித்தலைவர்களே அவரை எதிர்க்கட்சித் தலைவர் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. திமுக  கூட கூட்டணி இருந்த யாராவது வந்து நாங்கள்தான் உண்மையான எதிர்க்கட்சி என்று சொன்னார்களா. அண்ணாமலை தனது கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்க இப்படிப் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள். அண்ணாமலைக்கு மோடி வந்து இரண்டு முறை பிரச்சாரம் செய்தபோதிலும் 167 பூத்தில் சிங்கிள் டிஜிட் வாக்குகூட வாங்கவில்லை. ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போன அண்ணாமலை தனித்துப் போட்டியிடப் போகிறோம் என்கிறார். டெபாசிட் கூட வாங்காத அவர் பாஜகவுக்கும் திமுகவுக்கும் தான் நேரடிப் போட்டி என்கிறார்.

 

உங்கள் கட்சியின் மூத்தத் தலைவர் துரைமுருகனே தமிழகத்தில் பாஜக வளர்ந்து வருகிறது என்கிறாரே?

வீட்டுக்குள்ள பாம்பு வந்துரும். கம்பு எடுத்து வைனு சொல்ற மாதிரி ஒரு எச்சரிக்கைதான் இது. ஆனால், அவங்க பூத் கமிட்டி கூட அமைக்க முடியல. நாங்கள் பூத் கமிட்டி அமைத்து விட்டோம். திமுகவில் பிரச்சார வியூகம் எல்லாம் ஆரம்பித்து விட்டோம். அவங்களால என்ன பண்ண முடிந்தது. ரெண்டு பேருக்கும் உட்கட்சி பிரச்சனை இருக்கிறது. அதிலிருந்து காத்துக்கொள்ள அவர் இப்படிப் பேசுகிறார். எடப்பாடி பழனிச்சாமிக்கு நான்காக உள்ள கட்சி ஐந்தாக ஆகக்கூடாது என்ற கவலை உள்ளது.