Skip to main content

சந்திரசூட்டின் பதவியேற்பும்; மோடி பங்கேற்காததும் - பரபரப்பைக் கிளப்பும் சுப்பிரமணிய சுவாமி

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

நாட்டின்  உச்சபட்ச அதிகாரத்தைக் கொண்ட ஒன்று உச்சநீதிமன்றம். அந்த உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அளிக்கும் தீர்ப்புகள் சமூகத்தின் முன்னேற்றத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்லும். இந்தப் பதவியை வகித்து வந்த யு.யு லலித்தின் பதவிக்காலம் கடந்த 8 ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில்,  உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி. ஒய். சந்திரசூட் பதவியேற்றுக்கொண்டார். பல முக்கியமான வழக்குகளில் சமரசமில்லாமல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ள டி.ஒய் சந்திரசூட்டுக்கு தனது தந்தையின் தீர்ப்பில் முரண்பட்டு நீதியின் மகனாக நின்று தீர்ப்பை மாற்றி எழுதிய தனிச் சிறப்பும் உண்டு.  நீதியரசர் டி.ஒய். சந்திரசூட் உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக வருவதற்கு முன்பு இவரின் ஏனைய வழக்குகளின் தீர்ப்பும், இவர் பதவியேற்பில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வும் இந்தியாவில் பெரும் பேசு பொருளாகியுள்ளது.

 

டி.ஒய். சந்திரசூட்டின் தந்தையான ஒய்.வி. சந்திரசூட் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக 1978 ஆம் ஆண்டு முதல் 1985 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக 7 ஆண்டுகள் பதவி வகித்த இவரே, அதிக ஆண்டுக்காலம் இந்தப் பதவியிலிருந்த ஒரே நபர் என்ற சிறப்பைப் பெற்றவர். தற்போது அந்தப் பதவியில் இவரது மகன் டி .ஒய் சந்திரசூட் அமர்ந்துள்ளார். இந்தியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  இருவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் அமர்வது இதுவே முதல் முறை என்ற வரலாறும்  உருவாகியுள்ளது. 

 

யார் இந்த டி.ஒய். சந்திரசூட் ?

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

மும்பையில் கடந்த 1959 ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி பிறந்த டி.ஒய். சந்திரசூட், டெல்லி ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பொருளியலில் (ஹானர்ஸ்) இளநிலைப் பட்டம் பெற்றார். அதன்பிறகு டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர்,  அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை சட்டப் படிப்பை முடித்தார். 

 

அதன்பிறகு உச்சநீதிமன்றத்திலும், மும்பை உயர்நீதிமன்றத்திலும் வழக்கறிஞராகப் பணியாற்றிய டி.ஒய்.சந்திரசூட் ,1998-ம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதே ஆண்டு இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாகவும் பணியாற்றியிருக்கிறார்.  2000 ஆம் ஆண்டு  மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி, 2013 ல் அலகாபாத் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, 2016 ல்  உச்சநீதிமன்ற நீதிபதியாக அடுத்தடுத்து பதவிகளை வகித்து வந்த டி.ஒய். சந்திரசூட் தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்று இருக்கிறார்.

 

முக்கிய வழக்குகளும்; முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளும் 

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

சபரிமலைக்கு அனைத்து வயதுடைய பெண்களும் செல்லலாம்; தன் பாலின சேர்க்கை குற்றமல்ல; பாலியல் தொழில், பெண்கள் கருக்கலைப்பு உரிமை, ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் அமைத்தல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில்  தீர்ப்பு வழங்கிய அமர்வில் டி.ஒய் சந்திரசூட் இடம் பெற்றிருக்கிறார். அதுமட்டுமில்லாமல்  அரசியலமைப்பு படி ஆதார் எண் செல்லுபடியாகும் என உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றிருந்த பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பளித்தபோது, அதை அந்த அமர்வில் இடம்பெற்றிருந்த டி.ஒய் சந்திரசூட் மட்டும் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது ஆதார் எனக் காட்டமாகத் தெரிவித்திருந்தார். 

 

தந்தையின் தீர்ப்பில் முரண்; மாற்றி எழுதிய டி.ஒய் சந்திரசூட்

 

chief justice dy chandrachud oath ceremony controversy
ஒய்.வி. சந்திரசூட் - டி.ஒய் சந்திரசூட்

 

இந்தியாவில் 1975ல் இருந்து 77 வரை அவசரக் காலம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதில், அரசை எதிர்த்துக் கேள்வி கேட்டவர்கள் உட்படத் தவறாகவும், சட்ட விரோதமாகவும் பலர் சிறை வைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் 76ம் ஆண்டு விசாரணையிலிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அப்போது தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ‘அவசரக் காலத்தில் யாராவது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டால் அது தவறானதாகவோ, சட்ட விரோதமாகவோ இருந்தாலும் கூட அதை எதிர்த்து எந்த உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர முடியாது’ எனத் தீர்ப்பு அளித்தது. இந்த அரசியல் சாசன அமர்வில் டி.ஒய். சந்திரசூட்டின் தந்தை ஒய்.வி. சந்திரசூட்டும் ஒருவர். 

 

இந்தத் தீர்ப்பு கடந்த 2017 ஆம் ஆண்டு தனிமனித உரிமைகள் தொடர்பான ஒரு வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு ரத்து செய்தது. அந்த அமர்வில் ஒய்.வி சந்திரசூட்டின் மகன்  டி.ஒய். சந்திரசூட் இடம் பெற்றிருந்தார். 

 

திருமணமான பெண்ணுடன் தகாத உறவுகொள்ளும் ஆண்களைக் குற்றவாளியாக அறிவித்து 5 ஆண்டு வரை சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 497-வது பிரிவு செல்லுபடியாகும் என 1985 ஆம் ஆண்டு  நீதிபதி ஒய்.வி. சந்திரசூட் தீர்ப்பளிக்க, ‘இன்றைய காலத்திற்கு ஏற்றவாறு நம்முடைய தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டும். அந்தச் சட்டம் பெண்களின் ஆணாதிக்கக் குறியீடு’ எனக் கூறி அதனை  ஒய்.வி. சந்திரசூட்டின் மகன் டி.ஒய். சந்திரசூட் ரத்து செய்தார்.

 

டி.ஒய் சந்திரசூட்டின் பதவியேற்பும்; மோடி பங்கேற்காததும் 

 

chief justice dy chandrachud oath ceremony controversy

 

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதி சந்திரசூட்டிற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் இந்த நிகழ்வில் நாட்டின் பிரதமர் மோடி கலந்துகொள்ளவில்லை. இது பெரும் விமர்சனத்தைக் கிளப்பியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ் தாக்கூர் முதல் யு.யு லலித் வரை தலைமை நீதிபதிகளின் பதவியேற்பு விழாக்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் டி.ஒய் சந்திரசூட்டின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது இந்திய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.

 

பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி, "எனக்குக் கிடைத்த தகவலின்படி இன்று (9ம் தேதி) ராஷ்டிரபதி பவனில் நடந்த தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்காதது இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும் பாரதிய சன்மார்க்கத்துக்கும் எதிரான அவமானம் என்று முடிவு செய்கிறேன். இதற்காக மோடி விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காத வரை அவரது இந்தச் செயல் வருந்தத்தக்கது" என ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார். 

 

நாடு சுதந்திரம் அடைந்து 75வது ஆண்டை மத்திய பாஜக அரசு விமரிசையாகக் கொண்டாடி வரும் வேளையில், நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்ட அனைத்துத் தரப்பு மக்களாலும் நம்பிக்கை பெற்றுள்ள உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியின் பதவியேற்பு விழாவில் பிரதமர் கலந்துகொள்ளாததும் பாஜக மூத்த தலைவர் ஒருவரே அதனைக் கடுமையாக விமர்சனம் செய்து பிரதமர் மன்னிப்பு கோர வேண்டும் என்று பதிவிட்டிருப்பதும் அரசியலிலும், சமூகத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

Next Story

மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Collectors appeared in the office of the ed

தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்வதாகவும், மணல் ஒப்பந்த குவாரிகள் மூலம் வரும் வருமானத்தை சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மணல் குவாரிகளுக்கு வழங்கப்பட்ட உரிமங்கள் தொடர்பான ஆவணங்களுடன் நேரில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பிலும், மாவட்ட ஆட்சியர்கள் சார்பிலும் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், “நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடவடிக்கை பாதிக்கும் என்பதால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக கால அவகாசம் வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், “அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தால் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். மணல் கொள்ளை வழக்கில் அமலாக்கத்துறை முன்பு மாவட்ட ஆட்சியர்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக வழங்கப்பட்ட சம்மனுக்கு தடை எதுவும் வழங்க முடியாது” எனத் தெரிவித்திருந்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை மே 6 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் மணல் முறைகேடு வழக்கு தொடர்பாக திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர் மற்றும் வேலூர் ஆகிய 5 மாவட்ட ஆட்சியர்களும் இன்று (25.04.2024) அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக உள்ளனர். முன்னதாக மணல் குவாரி ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி இருந்ததும், இந்த முறைகேட்டில் மாவட்ட ஆட்சியர்களுக்கும் தொடர்பு உள்ளது என அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. 

Next Story

விவிபேட் வழக்கு; உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காட்டும் ஒப்புகைச் சீட்டையும் (V.V.P.A.T. - Voter-verified paper audit trail) 100 சதவீதம் எண்ண வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தைப் பற்றி பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பி இருந்தனர்.

அதாவது இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று (24.04.2024) தேர்தல் ஆணையத்திற்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, “தேர்தல் நடக்கும் முறை குறித்து எந்தவொரு சந்தேகமும் அச்சமும் இருக்க கூடாது. ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த தகவல்களில் ஏன் முரண்பாடுகள் உள்ளன. கண்ட்ரோலிங் யூனிட்டில் மைக்ரோ கண்ட்ரோலர் நிறுவப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் உள்ளதா? மைக்ரோ கண்ட்ரோலர் கருவி ஒருமுறை மட்டுமே மென்பொருளை பதிவேற்றம் செய்யக் கூடியதா?. கண்ட்ரோல் யூனிட் மட்டும் சீல் வைக்கப்படுமா? விவிபேட் இயந்திரம் தனியாக வைத்திருக்கப்படுமா? மைக்ரோ கண்ட்ரோலர் என்பது ஒருமுறை மட்டும் புரோகிராம் செய்யக்கூடியதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். 

The case of Vivipad; Explanation of Election Commission officials in the Supreme Court

மேலும், ‘ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் சில சந்தேகங்கள் உள்ளன’ என நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்திருந்தார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய அதிகாரி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது விவிபேட் இயந்திரம் தொடர்பாக தங்களுக்கு எழுந்துள்ள தொழில்நுட்ப சந்தேகங்கள் குறித்து ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கையில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், விவிபேட், கட்டுப்பாட்டுக் கருவிகளில் தனித்தனி மைக்ரோ கண்ட்ரோலர்கள் உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர்களில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு இந்த மூன்று கருவிகளும் சீல் வைக்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் செய்யப்பட்டுள்ள புரோகிராம்களை மாற்ற முடியாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்துவதற்காக 4 ஆயிரத்து 800 கருவிகள் உள்ளன. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் உள்ள தகவல்கள் 45 நாட்கள் பாதுகாத்து வைக்கப்படும். 46ஆவது நாளில் உயர்நீதிமன்றத்தை தொடர்புகொண்டு வழக்குகள் ஏதும் தொடரப்பட்டுள்ளதா என கேட்டறியப்படும். அப்போது தேர்தல் தொடர்பான வழக்குகள் தொடரப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும்.” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.