மன்மத வித்தை காட்டி வந்த மதன் விவகாரம் இப்போது விசுவரூபம் எடுத்துவருகிறது. யார் அந்த மதன்? விரிவாகவே பார்ப்போம். வெளிநாடு வாழ் இந்தியரான அவர், ஆடம்பரமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் அலப்பறை பேர்வழி. இவரது அம்மா விஜயா, பா.ஜ.க.வில் பொறுப்பில் இருப்பவர். அதனால் இவரும் பா.ஜ.க. பிரமுகராகத் தன்னைக் காட்டிக்கொள்பவர்.
இந்த மதன் வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் இளம் பெண்களையும், திரைத்துறை மீது ஆசை கொண்ட யுவதிகளையும், இள வயது பெண் தொழில் முனைவோர்களையும், தான் பெரிய வி.ஐ.பி.யாகக் காட்டிக்கொண்டு, தன் ஆசை வார்த்தைகளால் வலையில் விழ வைப்பாராம். பிறகு அவர்களை ஆபாசமாகப் படம் எடுத்து, அவர்களிடம் பணம் பறிப்பாராம். அவர்களில் சிலரை தன் அம்மா மூலம் பாலியல் தொழிலிலும் சிக்க வைத்துவிடுவாராம்.
அந்த மதனின் மன்மத லீலைகள் குறித்து, அவரை அறிந்த சிலர் நம்மிடம் சொன்னது இதைத்தான், “பா.ஜ.க.வில் ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாட்டுப் பிரிவு மாவட்டச் செயலாளராக இருப்பவர் விஜயா மாமி. இவருடைய மகன்தான் மதன். திருநெல்வேலிதான் இவரின் பூர்வீகம். ஆரம்பத்தில் நெல்லை தெற்கு ரத வீதியில் தாயுடன் சேர்ந்து ஒயின்ஷாப் வைத்து நடத்திவந்தவன், 2007ஆம் ஆண்டு, லண்டனில் பணிபுரிந்த மதுரையைச் சேர்ந்த பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். இதைத் தொடர்ந்து லண்டனுக்குச் சென்ற மதன், அங்கே ராயல்மெய்ல் நிறுவனத்தில் அடிமட்ட ஊழியராகப் பணிபுரிந்தான்.
பிறகு, 2011 ஆம் ஆண்டு அங்கே வேல்ஸ் தமிழ்ச்சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, அந்த நிகழ்ச்சிகளுக்கு சில வி.ஐ.பி.க்களை அழைத்து, அவர்களோடு புகைப்படங்களை எடுத்துக்கொண்டு, தன்னைப் பெரிய ஆள் போல் காட்டிக்கொண்டான். அந்த தமிழ்ச்சங்கம் மூலம் தீபாவளி, பொங்கல் போன்ற விழாக்களை நடத்தும் சாக்கில் பெரும் வசூலையும் அடிக்கடி நடத்தினான். இந்தத் தொடர்பிலும் பெண்களை வசப்படுத்தினான். ஏமாற்றப்பட்ட பெண்கள் பிரச்சனை செய்ய, இந்த விவகாரம் அவன் மனைவிக்குத் தெரியவந்தது. இதனால் அவர் மதனை விட்டுப் பிரிந்துசென்று விட்டார். இந்த நிலையில் லண்டனுக்குப் படிக்க வந்த பிரபல நடிகர் ஒருவரின் பேத்தியை, சினிமா எடுப்பதாகக் கூறிக்கொண்டு தன் வலையில் வீழ்த்தினான். அதேபோல் மெடிக்கல் படிக்கவந்த ஒரு மாணவியையும் அவன் ஏமாற்றினான். இப்படி பல பெண்களை ஏமாற்றியிருக்கிறான் மதன். அவனது லீலைகளுக்கு அவன் அம்மா விஜயா மாமியும் உடந்தையாக இருந்தார். அந்தப் பெண்களிடம் அவரும் பேசி, அவர்களுக்கு நம்பிக்கையூட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்தப் பெண்களிடம் "நீதான் எங்க வீட்டு மருமகள். நீ என்ன குலம்? உன் கோத்திரம் என்ன?” என்று விசாரித்துவிட்டு, "நீ எந்த குலம் கோத்திரமாக இருந்தாலும் நீதான் என் மருமகள்” என்று அவரும் தன் பங்கிற்கு அந்தப் பெண்களுக்கு மகனுக்காக மூளைச் சலவை செய்திருக்கிறார். தன் வலையில் விழுந்த 10-க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி மதன் பணத்தைப் பறித்திருக்கிறான்.
அவன் வேலைபார்த்த நிறுவனத்தினர், "ஒழுங்கா வேலை பார்க்கமாட்டாயா?” என்று திட்டியதையும் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு, நிற ரீதியாக அவர்கள் தன்னைக் கொடுமைப்படுத்தியதாக, அவர்கள் மீதே லண்டனில் வழக்கு போட்டான். இதுதவிர பல வங்கிகளில் அங்கே அவன் ஏகத்துக்கும் கடன் வாங்கியிருக்கிறான். விவாகரத்து கேட்ட மனைவியிடமும் 25 லட்சத்தைக் கறந்திருக்கிறான். இந்த நிலையில் தமிழகத்துக்கு வந்த மதன், இங்கே வந்தும் திருந்தாமல், தன் மன்மத வேலைகளைக் காட்டிக்கொண்டேயிருக்கிறான்” என்றார்கள் ஆதங்கமாய்.
இங்குவந்த பிறகு மதன் என்னென்ன லீலைகளில் ஈடுபட்டார் என நாம் விசாரித்த போது, "இங்கே கோல்டுமெடல் வாங்கிய, தாயில்லாப் பெண் ஒருவரை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதோடு, அவரது நகைகளையும் பறித்திருக்கிறான். சென்னையில் இருக்கும் பிரபல கிளப்புகளுக்குச் சென்று அங்குவரும் வி.ஐ.பி.க்களின் மனைவிகளுக்கும் வலை வீசியிருக்கிறான். அவனிடம் ஏமாந்த ஒரு பெண், ஒரு முறை அவனது லேப்டாப் போல்டரைத் திறந்து பார்த்து அதிர்ந்து போயிருக்கிறார்.
காரணம், 2013 முதல் அவன் எந்தெந்தப் பெண்களை படுக்கையில் வீழ்த்தினானோ, அத்தனை பேரின் ஆபாசப்படங்களும், கிளுகிளு உரையாடல்களும் அதில் இருந்திருக்கிறது. இதுகுறித்து அந்தப் பெண் பிரச்சினை எழுப்ப, மீண்டும் லண்டனுக்கு ஓடியிருக்கிறான். அந்தப் பெண்மணி மதனின் அம்மா விஜயாவிடம் அவனைப் பற்றி புகார் சொன்னபோது, அந்த விஜயா, "ஆம்பளைங்கன்னா அப்படிதான் இருப்பாங்க... அதை விட்டுத்தள்ளு. நான் சொல்லும்படி நீ நடந்தால் ராணி போல் வாழலாம். கை நிறையவும் சம்பாதிக்கலாம்” என்று பாலியல் தொழிலுக்கு அழைத்தாராம். அதனால் அந்தப் பெண், அவரைக் காரித் துப்பிவிட்டு வந்துவிட்டாராம். இந்த நிலையில், தான் வேலை பார்த்த லண்டன் நிறுவனத்தின் மீதான வழக்கை முடித்துக்கொடுத்துவிட்டு அதற்கு ஈடாக 2 கோடியை வாங்கிக்கொண்டு தமிழகம் திரும்பியிருக்கிறான் மதன். தற்போது, தன் கவிதை நூல்களுக்கு டிசைன் செய்ய ஆள் தேவை என்று முகநூலில் விளம்பரம் செய்து, தேவிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை வசியம் செய்து, அவரையும் திருமணம் செய்துகொண்டிருக்கிறான்.
இதேபோல் பிரபல பெரிய தல நிகழ்ச்சியை நடத்தும் ஒரு தொலைக்காட்சியில் பணியாற்றும் ஒரு பெண்ணையும் வளைத்திருக்கிறானாம் இந்த மதன். இவனால் ஏமாற்றப்பட்டவர்கள் எதிர்த்து நின்றால், "உங்களால் என்னை ஒன்றும் செய்யமுடியாது. நாங்கள் அரசியல் பலம் உள்ளவர்கள். போலீஸ் எங்களுக்கு எதிராக எதையும் செய்யாது” என்று மதன் மிரட்டுவானாம். அதேபோல் அவன் மீது சில பெண்கள் சென்னை கிண்டி, அண்ணா நகர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தும் காவல்துறையினர் அதைப் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லையாம். அண்ணாநகரில் இருந்த பெண் இன்ஸ்பெக்டரிடம் புகார் கொடுக்கவந்த பெண்களையே அதட்டி அனுப்ப, இதனால் அதிர்ச்சியான அவர்களில் சிலர், இப்போது மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். ஜெயமான பெண் எஸ்.பி. ஒருவரும் அந்த மதனுக்கு ஆதரவாக இருக்கிறாராம் என்று மதனின் லீலைகளை அறிந்தவர்கள் ஆதங்கமும் எரிச்சலுமாய் சொன்னார்கள்.
இந்த விவகாரம் குறித்து நாம் மகளிர் ஆணையத் தலைவர் குமாரியிடம் கேட்டபோது “புகார் வந்தது உண்மைதான். விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. பெண்களை ஏமாற்றியவர்கள் தப்பிக்க முடியாது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று முடித்துக்கொண்டார்.
பெண் வேட்டை, பணப் பறிப்பு என ஆட்டம் போட்டுவரும் மன்மதராஜா மதன் மீதும், அவருக்கு உடந்தையாக இருக்கும் அவர் தாயார் பா.ஜ.க. விஜயா மீதும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?