அடுத்த முதல்வர் யார் என்கிற விவகாரத்தில், ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்.ஸுக்கு இடையிலான பவர் யுத்தம் உள்ளுக்குள்ளே கனன்றாலும் வெளியே புகைச்சல் தெரியக்கூடாது என கூட்டறிக்கை வெளியிட்டார்கள். அதற்கு பிறகும் அங்கங்கே போஸ்டர் யுத்தம் தொடர்கிறது. ஓ.பி.எஸ்.ஸின் மனக்குமுறல் இன்னும் முழுசா அடங்கவில்லை.
அடுத்த முதல்வர் யாருங்கிற நீயா? நானா? யுத்தத்தை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் நடத்திக்கிட்டிருந்தாலும், வெளியில் ஏற்படும் விவாதங்களைத் தவிர்ப்பதற்காக, ஆகஸ்ட் 15ல் சமாதான முடிவுக்கு வந்தாங்க, அமைச்சர்களின் தூது படலமும் நடந்தது. இதன் பிறகும் தன் ஆதங்கம் மாறாத ஓ.பி.எஸ்., தன்னைச் சந்திக்கும் அமைச்சர்களிடமும் கட்சி சீனியர்களிடமும், தன் மனக்குமுறலை பகிரங்கமாகவே கொட்டிக்கிட்டுதான் இருக்காராம் ஓ.பி.எஸ். மனுசனுக்கு பதவியைவிட, மானம்தான் முக்கியம்ன்னு அவர், கொந்தளிக்கவும் செய்யறாராம்.
கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில், விருது வாங்குவோர் பட்டியலில் ஓ.பி.எஸ்.ஸை 6 ஆவது நபராக நிற்கவைத்து, அவருக்கு எடப்பாடி விருது கொடுத்து சங்கடப்படுத்தியதை அவரால் இன்னும்கூட ஜீரணிக்க முடியலை. அம்மா ஜெ.வால் இரண்டுமுறை முதல்வராக ஆக்கப்பட்ட எனக்கு, இப்படியொரு அவமானம் தேவையான்னு பரிதாபமாக கேட்கிறாராம் ஓ.பி.எஸ். மேலும், தான் விருது வாங்கும் வரிசையில் நின்னப்ப, தன்னைப் பார்த்து ஒரு அதிகாரி, வரிசையில் வாங்கன்னு சொல்லி மேலும் இளக்காரம் செய்ததையும் அவர்களிடம் சுட்டிக்காட்டிய ஓ.பி.எஸ்., அந்த அதிகாரி என்ன? சாதி அரசியல் பண்றானா? அவனை செக்ரட்டேரியேட்ல இருந்து தூக்கனும்னும்னு ஒருமையிலே திட்டி, ஏகத்துக்கும் குமுறுகிறாராம். முதல்வரால் ஓரம்கட்டப்படறார்ன்னு தெரிஞ்சதும் ஒரு அதிகாரி அவரை அலட்சியமா டீல் செய்ய, அதுதான் அவரை ரொம்பவும் பாதிச்சிருக்கு.
இந்த நேரத்தில், மேலும் இரண்டு மந்திரிகள், முதல்வர் பதவியைக் குறிவைத்துத் தனி ஆவர்த்தனம் செய்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. இதுதான் இப்ப இ.பி.எஸ்.ஸையும் ஓ,பி.எஸ்.ஸையும் ஒரே நேரத்தில் ஹை வோல்ட் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.. அவர்களில் ஒருத்தர், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். இவர் தன் கைவசத்தில் 25 எம்.எல்.ஏ.க்களை வச்சிக்கிட்டு, அவங்களுக்கு மாதந்திரப்படியையும் கொடுத்துக்கிட்டு இருக்கார். அந்த தைரியத்தில், கரோனா விவகாரத்தில் இப்பவும் மக்கள் மத்தியில் நான்தான் ஹீரோவாக இருக்கிறேன். மக்களும் சுகாதாரத்துறையினரும் என்னைத்தான் நம்பறாங்கன்னு டெல்லியிடம் பீலாவையும் நினைவூட்டி பீலா விடறாராம். அதனால் தன்னையே முதல்வராக்கனும்னு டெல்லிக்கு அவர் தூது விட்டுக்கிட்டு இருக்கார்.
முதல்வர் கனவில் மிதக்கும் இன்னொருவர், உள்ளாட்சித்துறை அமைச்சரான வேலுமணிதான் அந்த பிரகஸ்பதி. அவர் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது பற்றியும் நாம் ஏற்கனவே பேசியிருக்கோம். பெரும்பாலான பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டுகளை, தனது மகன் மிதுன் மற்றும் தன் உதவியாளர் சேகர், ஆதரவாளர் சேலம் இளங்கோவன் ஆகியோர் மூலம், எடப்பாடி தன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கே அதிகம் ஒதுக்கி அவர்களைத் தன்பக்கம் தக்க வச்சிருப்பதுபோல், அமைச்சர் வேலுமணி, தனது உள்ளாட்சித்துறை காண்ட்ராக்ட்டுகளை, ஊராட்சி பகுதிகளில் இருக்கும் தன் ஆதரவாளர்களுக்கே ஒதுக்கி, நேரடியாவே அதற்கான பயன்களையும் அனுபவிச்சிக்கிட்டு இருக்கார்.
தமிழகம் முழுக்க நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை, தன் உள்ளாட்சித்துறை அதிகாரம் மூலம் தனக்குன்னு ஆதரவாளர்களை உருவாக்கி வச்சிருக்கார் வேலுமணி. கொங்கு மாவட்டங்களில் மட்டுமில்லாமல் தென் மாவட்டங்களிலும் அவருக்கு ஆதரவாளர்கள் இருக்காங்க. அவங்களுக்கு கட்சிப்பதவி வாங்கி கொடுத்திருக்கிறார். அதனால், தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக, ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மூலம் டெல்லியிடம் அவர் எடுத்து சொல்லியிருக்கிறாராம். தமிழகம் முழுக்க ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ்.ஸை தாண்டி தனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாக சொல்லும் அவர், இப்பவே தன்னை தமிழக முதல்வராக்கினால், வருகிற தேர்தலில், அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணியைப் பெரிய அளவிற்கு தன்னால் ஜெயிக்க வைக்க முடியும்ன்னு டெல்லிக்கு உறுதி கொடுத்திருக்காராம்.''
முதல்வர் பதவிக்கு அ.தி.மு.க.வில் திடீர்னு ஆளாளுக்கு வரிஞ்சி கட்ட ஆரம்பிச்சதை பார்த்த பா,ஜ.க. தலைமை, சசிகலா ரிலீசாக போறார்ன்னு வெளியாகும் செய்திகளால், இவர்கள் கணக்கு வழக்கை தங்களுக்கு லாபமாக்கிடும் முயற்சியில் அடிச்சிக்கிறாங்களோன்னு சந்தேகப்படுது. இருந்தாலும், அதி.மு.க.வில் அடுத்தடுத்து நிகழும் மூவ்களையும் அது கூர்ந்து கவனித்துக்கொண்டிருக்கிறது. மேலும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கிய எடப்பாடியை அது முழுமையாக நம்ப தயாராக இல்லை. அதே மாதிரி ஓ.பி.எஸ். தங்களிடம் தொடர்ந்து காட்டிவரும் விசுவாசத்தையும் பா.ஜ.க. தலைமை மறக்க விரும்பலை.