நாடாளுமன்றத் தேர்தல், ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அந்த வகையில், தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகிறது. அதில், திமுக கூட்டணியில் இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சு.வெங்கடேசனை எதிர்த்து மதுரை மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க கட்சி சார்பில் மருத்துவர் சரவணன் போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளர் சரவணனின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, நமது நக்கீரனுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பல்வேறு தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
மதுரை மக்களவைத் தொகுதியில், உங்களை கட்சித் தலைமை எப்படி தேர்வு செய்தது என்று நினைக்கிறீர்கள்?
“மதுரை என்பது வரலாற்று சிறப்புமிக்க ஒரு நகரம். குறிப்பாக, அரசியலாக இருக்கட்டும், சினிமாவாக இருக்கட்டும், எதையும் மதுரையில் இருந்து தான் தொடங்குவார்கள். ஏனென்றால், அது வெற்றிக்கான முதல் தளமாக அமையும் என்ற ஒரு நம்பிக்கை. அதிமுக சார்பில், மதுரை தொகுதியை கேட்டு 72 பேர் மனு செய்திருந்தோம். அனைவர் மாதிரியும், நானும் நேர்காணலுக்கு சென்றிருந்தேன். அடிப்படையில், நான் ஒரு மருத்துவர். இம்மாவட்டத்தில், கடந்த 25 வருடங்களாக மருத்துவராக இருக்கிறேன். குறைந்த செலவில் மருத்துவம் பார்ப்பதால், மக்கள் இங்கு அதிகமாக வருவார்கள். அது மட்டும் இல்லாமல் ஒரு தொண்டு நிறுவனம் வைத்திருக்கிறேன். அதன் மூலமாக மக்களுக்கு நிறைய தேவை செய்து வருகிறேன்.
மேலும், என்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றேன். அ.தி.மு.க.வில் என்னை இணைத்துக் கொண்ட கடந்த ஒன்றரை வருடமாக தீவிரமாக கட்சி பணி செய்து வருகிறேன். இந்த மதுரை தென் பகுதியில் அதிகம் அறியப்பட்ட ஒரு மருத்துவராகவும், சமூக சேவகாரமும் இருக்கிறேன். இதை வைத்து, பொதுச்செயலாளர் என்னை தேர்வு செய்வதற்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்று நினைக்கிறேன்".
கட்சியில் சேர்ந்த ஒரு வருடத்திற்குளே மக்களவைத் தொகுதி சீட் கிடைத்திருக்கிறது என்ற விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
“இந்த விமர்சனம் எல்லாம் தியாகராஜா காலத்து அதர பழசான ஒரு அரசியல். என்னைப் பொறுத்தவரை மக்களுக்கு சேவை செய்வதற்கான பிளாட்பார்ம் அரசியல். அப்படிப் பார்க்கையில், கடந்த 15 வருடமாக நான் அரசியலில் இருக்கிறேன். இந்த வருடத்தில், நான் அதிமுகவில் இணைத்துக் கொண்டாலும் என்னுடைய கொள்கையான மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படை பொதுச் செயலாளருக்கு பிடித்திருக்கலாம். மாவட்ட செயலாளர்கள் பரிந்துரையின் பேரில் இந்த தொகுதி எனக்கு கிடைத்திருக்கலாம்.
உடனடியாக ஒரு நபரை தேர்வு செய்ய மாட்டார்கள். அதற்கு ஒரு சர்வே எடுப்பார்கள். அந்த சர்வேயில், நான் நல்ல வேட்பாளராக இருப்பேன் என்று நினைத்திருக்கலாம். மேலும், இது சமூகநீதிக்கான இயக்கம் தான் அதிமுக. சாமானிய மக்களுக்கான இயக்கமும் கூட. இப்போது அறிவித்திருக்கக்கூடிய 40 வேட்பாளர்களின் பட்டியலில் ஐந்து வேட்பாளர்கள் மருத்துவர்கள் தான். இரண்டு பிஎச்டி மருத்துவர்களும் இருக்கிறார்கள். இந்த மாதிரி கலந்து செய்யபட்ட விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன்"
அரசியல் ஆசை எப்போது வந்தது?
“அரசியலே ஒரு நீட்டிக்கப்பட்ட சர்வீஸ் தானே. ஒரு மருத்துவராக ஓரளவுக்கு மக்களுக்கு மருத்துவ சேவை செய்ய முடிகிறது. ஒரு கட்டத்திற்கு பிறகு இன்னும் அதிகமான பேருக்கு சேவை சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தொண்டர் நிறுவனம் ஆரம்பித்து கடந்த 20 வருடமாக அதன் மூலம் தொண்டு செய்து வருகிறேன். மருத்துவ உதவியை தாண்டி நிறைய பேர் உதவி கேட்டு வருவார்கள். ஆனால் அவர்களுக்கு என்னால் முடிந்த சிறிய உதவியை தான் செய்து முடிகிறது. இன்னும் நாம் அதிகாரமான பதவிக்கு வந்தால் இன்னும் அதிகமான பேருக்கு சேவை செய்யக்கூடிய ஒரு வாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையில் அரசியலுக்கு வந்தேன். நான் இரண்டு வருடமாக சட்டமன்ற உறுப்பினராக திருப்பரங்குன்றத்தில் பணியாற்றிருக்கிறேன். அந்த தொகுதி மக்களிடம் கேட்டால் நான் எந்த அளவுக்கு சேவை செய்தேன் என்று அம்மக்களே கூறுவார்கள். சமூக சேவையில் எனக்கு ஒரு நாட்டம் உண்டு. அதனால் இது இன்னும் பரவலான மக்களுக்கு என்னுடைய சேவை சென்றடைய வேண்டும் என்ற ஒரு வாய்ப்பு அமைந்திருக்கிறது" என்று பேசினார்.
பேட்டி தொடரும்...