Skip to main content

2000 ஆண்டு பழமையான ‘தமிழி’ எழுத்து பொறித்த பானை ஓடு கண்டெடுப்பு

Published on 01/11/2022 | Edited on 01/11/2022

 

2000 year old pot with Tamil script found  Pandyan Fort

 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் 2000 ஆண்டு பழமையான தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு  சிவகங்கை தொல்நடைக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

 

இது குறித்து சிவகங்கை தொல்நடைக் குழுவின் நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, சிவகங்கை  தொல்நடைக் குழு நிறுவனர் புலவர் கா.காளிராசா, தலைவர் நா.சுந்தரராஜன், கள ஆய்வாளர் கா.சரவணன் பாண்டியன் ஆகியோர் கோட்டைப் பகுதியில் அவ்வப்போது மேற்பரப்பு கள ஆய்வு செய்து வந்தோம். கடந்த ஞாயிற்றுக் கிழமை  சரவணன் ஒரு பானை ஓட்டில் கீறல் தெரிவதாக எனக்குத் தகவல் தெரிவித்தார். கள மேற்பரப்பில் கிடந்த ஓட்டை எடுத்து சுத்தம் செய்து பார்த்ததில் அது தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு என்பது உறுதி செய்யப்பட்டது.

 

கானப்பேரெயில்

 

காளையார்கோவில் கானப் பேர் என்றும், கானப்பேரெயில் என்றும் இலக்கியங்களில் வழங்கப்படுகிறது. ஐயூர் மூலங்கிழார் எழுதிய புறநானூற்றுப் பாடல் 21, கானப் பேரெயில் கோட்டை ஆழமான அகழியும், வானளாவிய மதிலும், வானத்தில் மீன் பூத்தது போலப் பதுங்கி இருந்து பகைவரைத் தாக்கும் எயில்களையும், சுற்றிலும் வெயில் நுழைய முடியாத இருண்ட காப்புக்காடுகளையும் உடையது என்கிறது.

 

2000 year old pot with Tamil script found  Pandyan Fort

 

எச்சமாய் நிற்கும் பாண்டியன் கோட்டை

 

தற்போதும் பாண்டியன் கோட்டை கோட்டைகளுக்கான இலக்கணத்தோடு எச்சமாய் மண் மேடாய் காட்சி தருகிறது. வட்ட வடிவிலான இக்கோட்டையில் ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது. கோட்டையின் நடுவில் நீராவி குளமும் காணப்படுகிறது. 37 ஏக்கரில் இக்கோட்டை  மேட்டுப் பகுதியாகக் காணப்படுவதோடு இதன் அருகே உள்ள  ஊரும் மேட்டுப்பட்டி என்று அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்விடம் முத்து வடுகநாதர் மற்றும் மருது பாண்டியர் காலத்தில் நாணயச் சாலையாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறுவர். நான்கு பக்கங்களிலும் வாயிலைக் கொண்ட கட்டிடம் ஒன்று சிதைந்த நிலையில் இன்றும் உள்ளது. அதன் கிழக்கு வாயில் தரைதளத்தில் கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது.

 

கோட்டைக் காவல் தெய்வங்கள்

 

கோட்டை அமைக்கப்பட்டுள்ள இடங்களில் காவல் தெய்வங்களை வைத்து வணங்குவது மன்னர்கள் மற்றும் மக்களின் இயல்பாக இருந்துள்ளது. அதன் நீட்சியே இன்றும் கிழக்குப் பகுதியில் கோட்டை முனீஸ்வரர் கோவிலும் தெற்குப் பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவிலும் வழிபாட்டில் உள்ளது.

 

வாள்மேல் நடந்த அம்மன் கோவில்

 

பாண்டியன் கோட்டையின் தெற்குப் பகுதியில் வாள்மேல் நடந்த அம்மன் கோவில் உள்ளது. கோவிலில் நடைபெறுகிற திருவிழாவில் ஏழாம் திருநாள், காளையார்கோவிலில் புகழ் பெற்ற காளீஸ்வரர் கோவிலுக்கும் இக்கோவிலுக்கும் தொடர்புடையதாக இருப்பது மட்டுமல்லாமல் பாண்டிய மன்னனுக்கு பொய்ப்பிள்ளைக்காக மெய்ப்பிள்ளை தந்த கதை, விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

 

சொக்கர் மீனாட்சி கருவறைக் கோவில்

 

காளையார் கோவிலில் மூன்று சிவன் கருவறைகளும் அம்மன் கருவறைகளும் தனித்தனியாக உள்ளன. இதில் சொக்கர் மீனாட்சி கருவறைக் கோவில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வரகுண பாண்டியன் என்கிற மன்னன் கட்டுவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இக்கோவில் பாடல் பெற்ற பாண்டிய நாட்டு திருத்தலங்கள் 14ல் ஒன்றாக உள்ளது. மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டோடு பிற கல்வெட்டுகளும் இக்கோவிலில் காணக் கிடைக்கின்றன.

 

பாண்டியர்களோடு தொடர்புடைய கானப் பேரெயில்

 

புறநானூறு குறிப்பிடுகிற  வேங்கை மார்பனை வென்று கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெரு வழுதி தொடங்கி, காளையார்கோவில் சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் 13ம் நூற்றாண்டில் பணியாற்றிய பாண்டிய அரசு அலுவலர்களின் பெயர்கள் 18 பெயர் குறிப்பிடப்படுவதால் இவ்வூர் பாண்டியர்களோடு நீண்ட காலம் தொடர்பில் இருந்ததை அறிய முடிகிறது.

 

சங்க காலத்தோடு தொடர்புடைய பொருள்கள்

 

பாண்டியன் கோட்டையில் மிகவும் பழமையான சங்ககால செங்கல் எச்சங்கள், கீழடியில் கிடைத்தது போன்ற கையால் செய்யப்பட்ட மேற் கூரை ஓட்டு எச்சங்கள் மேலும் சிறுவர்கள் விளையாடும் வட்டச் சில்லுகள், விலங்கு விரட்டவோ கவண் எறியவோ பயன்பட்ட சிறிய அளவிலான உருண்டைக்கல், பந்து போன்ற மண் உருண்டைகள் போன்றவை மேற்பரப்பு கள ஆய்வில் கிடைக்கப்பெற்றுள்ளன.

 

நீராவி குளத்திலிருந்து தோண்டப்பட்டுள்ள வாய்க்கால்

 

கோட்டையைச் சுற்றி ஆழமான அகழி இன்றும் காணப்படுகிறது. மேலும் கோட்டையின் நடுவே காணப்படும் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறுவதற்கு வழி இல்லாமல் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இதைச் சுற்றியுள்ள குடியிருப்புகள்  நீர் வடியாமல் மிகவும் சிரமத்திற்கு உள்ளானதால் கோட்டையின் நடுவில் உள்ள நீராவி குளத்திலிருந்து வாய்க்கால் வெட்டப்பட்டு பின்னர் அகழியிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 

 

கீழடி போன்று காணப்படும் மண் சுவர்கள்

 

நீர் வடிவதற்காக வெட்டப்பட்ட இந்த வாய்க்கால்கள்   4 அடி  ஆழமுடையனவாக உள்ளன. கீழடியில் வெட்டப்பட்டுள்ள அகழாய்வு குழிகளைப் போல இதன் இரண்டு புறங்களிலும் மண் அடுக்குகளும் பானை ஓட்டு எச்சங்களும் உடைந்த நிலையில் அரைகுறையான பானைகளும் காணப்படுகின்றன. இவை பார்ப்பதற்கு அகழாய்வுக் குழிகள் போலவே தென்படுகின்றன. இந்த வாய்க்காலில் தான் தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு கிடைக்கப்பெற்றுள்ளது.

 

2000 year old pot with Tamil script found  Pandyan Fort

 

தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு

 

கருப்பு சிவப்பு நிற பானை ஓட்டில் கருப்பிலும் சிவப்பிலும் எழுத்துப்பொறிப்பு காணப்படுகிறது,பானை ஓட்டின் உட்புறம் முழுமையாகக் கரிய நிறமாக உள்ளது.இவ்வோடு 7 செ.மீ அகலமும் 7 1/2 செ.மீ உயரமும் உடையதாக உள்ளது. ஐந்து எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. மோ, ச, ர ,ப ,ன்   ஆகிய தமிழி எழுத்துகள் வெளிப்படையாகத் தெரிகின்றன.

 

தொல்லியல் அறிஞர்கள் கருத்து  

 

எழுத்துகள் தெளிவுற வாசிப்பதற்காக தொல்லியல் அறிஞர்களின் பார்வைக்கு அனுப்பப்பட்டதில் அவர்கள் ஐந்து எழுத்துகள்  மோ, ச, ர ,ப ,ன்  போன்று வெளிப்படையாகத் தெரிந்தாலும் ர என்கிற எழுத்து த வாக இருக்கலாம் சற்று ஒரு கோடு சிதைவுற்று இருக்கலாம். *மோசதப[ன்]**மோசிதப[ன்] என்று இருந்திருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் சங்க காலத்திலே மோசிகீரன் என்ற பெயர் வழக்கில் உள்ளதால் மோசிதபன் என்று கருதவும் இடம் உண்டு.

 

முறையான அகழாய்வு

 

இவ்விடத்தில் முறையான அகழாய்வைத் தமிழக அரசு தொல்லியல் துறை மேற்கொண்டால் பழமையான கானப்பேர் என அழைக்கப்படும் காளையார்கோவிலின் தொன்மையும் பாண்டியர்களின் கோட்டைக் கட்டுமானங்களும் தமிழகத் தொன்மையும் வெளிப்படும்.

 

சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க முடிவு

 

காளையார்கோவில் பாண்டியன் கோட்டையில் கிடைக்கப் பெற்ற தமிழி எழுத்துப் பொறித்த பானை ஓட்டை அதன் தொன்மையும் பெருமையும் பாதுகாப்பும் கருதி சிவகங்கை அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்க சிவகங்கை தொல்நடைக் குழு முடிவு செய்துள்ளது. மேலும் இந்நிகழ்வில் சிவகங்கை தொல்நடைக் குழு செயலர் இரா.நரசிம்மன் உடன் இருந்தார் என்று தெரிவித்தார்.