Skip to main content

விஜயகாந்த்துக்குப் பிறகு விஷாலால்தான் இதெல்லாம் முடியும்! ஆக்‌ஷன் - திரைவிமர்சனம்

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

"நீ கொண்டு வர போறது இப்ராஹிம் மாலிக்கை இல்ல... இந்தியாவோட மானத்தை" - இது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டு கொஞ்ச நாளச்சுல்ல? ஆம்... கேப்டன் கலக்கிக்கொண்டிருந்த பாகிஸ்தான் பார்டர், தீவிரவாத ஏரியாவில் இப்போது சார்ஜ் எடுத்திருப்பவர் விஷால். "அவன் இறங்கிட்டா ஆப்ஷனே இல்ல, ஆக்‌ஷன் தான்" என்று தமன்னா பில்டு-அப் கொடுக்க மேலிருந்து வில்லன் மேல் குதித்துப் புரட்டி எடுக்கத் தொடங்கும் விஷால், படம் முழுவதும் ஃபுல் ஆக்‌ஷன் மோடிலேயே இருக்கும் படம் சுந்தர்.சியின் 'ஆக்‌ஷன்'.

 

vishal



தமிழகத்தின் நேர்மையான முதல்வரான பழ.கருப்பையா, தனது மகனான ராம்கியை அடுத்த முதல்வர் வேட்பாளராக அறிவிக்கிறார். நாட்டின் பிரதமர் வேட்பாளர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் குண்டு வெடிக்க, அதனை தொடர்ந்து இன்னும் சில இழப்புகளை சந்திக்கிறது முதல்வர் குடும்பம். அந்தக் குடும்பத்தின் கடைக்குட்டி விஷால் ஒரு ராணுவ அதிகாரி. வில்லன்களை பழிவாங்க சென்னையிலிருந்து கிளம்பி லண்டன், துருக்கி, பாகிஸ்தான் என சுற்றியடித்து வருகிறார், இறுதியில் வெல்கிறார்.

முதல் காட்சியே, இதுவரை நாம் அதிகம் பார்த்திராத இஸ்தான்புல் நகரத்தில் நடக்கும் அதிரடி சண்டைக் காட்சியாக அமைந்து ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. இயக்குனர் சுந்தர்.சி, ஒரு முழு ஆக்ஷன் படம் எடுக்கவேண்டும் என்ற உறுதியுடன் தனது ட்ரேட் மார்க் அம்சங்களான குடும்ப செண்டிமெண்ட், காமெடி போன்ற அனைத்தையும் சுறுக்கிவைத்து சண்டைக்காட்சிகளுக்கும் சேசிங் காட்சிகளுக்கும் பெரும்பான்மையான இடத்தை கொடுத்துள்ளார். இருந்தாலும் 'வெகுஜனங்களுக்காக' என்ற வழக்கமான, நம்பப்படும் காரணத்துடன் முதல் பாதியில் குடும்பம், காதல், காமெடி மூன்றையும் முடிந்த அளவு அழுத்தி பேக் செய்திருக்கிறார். பிறகு தொடங்கும் ஆக்‌ஷன், இறுதிவரை தொடர்கிறது.

 

vishal tamanna



விஷாலின் விறு விறு துரு துரு உழைப்பும் நடிப்பும் படத்தின் பலம். சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ், இடைவேளைக்கு முந்தைய சண்டைக்காட்சியில் தாங்கள் கற்ற வித்தையை கொஞ்சம் இறக்கி வைத்திருக்கிறார்கள். சிறப்பான சண்டைக்காட்சி அது. ஒளிப்பதிவாளர் டட்லி படம் நிகழும் நாடுகளின் பிரம்மாண்ட அழகை இயன்றவரை பதிவு செய்துள்ளார். ஆக்‌ஷன் காட்சிகளில் கேமராவும் சேஸிங்கில் பங்கேற்கிறது. ஆனால், வெவ்வேறு நிலப்பரப்புக்கான நுணுக்கங்கள் ஏதும் காட்டப்படாதது குறையே. 'யோகி'பாபு, தான் வரும் காட்சிகளில் சிரிப்பு அல்லது சிறிய புன்னகை, ஏதேனும் ஒன்றை ஏற்படுத்திச் செல்கிறார். இன்னொரு நகைச்சுவை முயற்சியான சாரா பெரும்பாலும் ஒர்க்-அவுட் ஆகவில்லை. சுந்தர்.சி, தனது நகைச்சுவை இலக்கணம், வியூகங்களை சற்று புதுப்பிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதோ என்ற கேள்வியை உண்டாக்குகின்றன அந்த நகைச்சுவை காட்சிகள். ஆள் மாறாட்டக் காமெடி, 'கண்ணை மூடி யாரிடமோ பேசிக்கொண்டிருக்க, கண்ணைத் திறந்து பார்த்தால் வேறு ஒருவர் இருப்பார்' ரக காமெடிகள் அயர்ச்சியை கொடுக்கின்றன.

முழு நீள ஆக்‌ஷன் படமென்பது நல்ல முயற்சிதான். ஆனால், அந்த சண்டை வரும் காரணம், சண்டை நடக்கும் இடம், சண்டை போடுபவர்களின் திறன், என பல காரணிகளால்தான் நல்ல முழுநீள ஆக்‌ஷன் படங்கள் உருவாகியிருக்கின்றன. அவையெதுவுமில்லாமல் நடந்துகொண்டே இருக்கும் சண்டைகள் முழு சுவாரசியத்தை அளிப்பதில்லை. அதிலும் ஒரு வீட்டு மொட்டை மாடி, கூரை, கட்டிடங்களின் உள்பகுதி, படிக்கட்டுகள் என சாலையை தவிர எல்லா இடங்களிலும் விஷால் ஓட்டும் மோட்டார் சைக்கிள் உள்பட பல காட்சிகள் அதீதங்களின் தொகுப்பாய் இருப்பது பெரிய குறை. சுந்தர்.சி, சுபா, வெங்கட் ராகவன் ஆகியோர் இணைந்து உருவாக்கியிருக்கும் திரைக்கதையில் நல்ல முடிச்சுகளோ, சஸ்பென்ஸோ, திறமையான புலனாய்வு காட்சிகளோ இல்லாமல் நேரடி தேடல், ஓடல், துரத்தலாக இருப்பது ஏமாற்றம். 'ஹேக்கிங்' என்ற விஷயம் தமிழ் சினிமாவில் படும் பாடு கொஞ்சநஞ்சமில்லை. எதுவுமே இல்லாமல் எதை வேண்டுமானாலும் ஹேக் செய்வார்கள் போல. எதிர்காலத்தில் நம் மூளையை ஹேக் செய்து இப்படி படம் பார்க்க வைக்க முடியுமோ என்ற பயத்தை ஏற்படுத்துகிறார்கள். அதிலும் 'யோகி'பாபு ஹேக்கராக நடித்திருப்பதால் இன்னும் சுதந்திரம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு படத்தில் இவ்வளவு பலவீனமான வில்லன் பாத்திரம்! நினைத்த நாடுகளுக்கெல்லாம் நினைத்த நேரத்தில் எளிதில் செல்கிறார் விஷால். இது போன்று பல விஷயங்களில் ரசிகர்களின் புத்திசாலித்தனம் கண்டுகொள்ளப்படவில்லை.

 

 

aiswarya lakshmi



ஆங்காங்கே சமகால அரசியல், கவிதையான காதல் வசனங்கள் என பத்ரி, வசனங்களை சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார். நடிகர்களில் தமன்னா, ஆகான்க்ஷா பூரி இருவரும் அதிரடியாகக் கவர, அமைதியாக கவனிக்க வைக்கிறார் ஐஸ்வர்யா லக்ஷ்மி. ராம்கி, சாயா சிங், ஷாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலரும் அளவாக வந்து தங்கள் வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழாவின் பாடல்களும் பின்னணி இசையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் படத்துடன் சேர்ந்து கடந்து செல்கின்றன. பரபரவென படத்தை தொகுத்திருக்கிறார் ஸ்ரீகாந்த்.

வெளிநாடுகள், கவர்ச்சியுடை நாயகிகள், இவையெல்லாம் பிரம்மாண்டமாகத் தெரிந்த காலம் 'பில்லா 2007' காலம் (அந்தப் படத்தில் வேறு நேர்மறைகளும் இருந்தன). ஆனால், நெட்ஃப்ளிக்ஸ் காலத்தில் அது போதாது அல்லவா? எல்லா காலத்துக்கும் நல்ல, விறுவிறுப்பான திரைக்கதை வேண்டும். படத்தின் தொடக்கத்தில், 'பல்வேறு நாடுகளில் வரும் பாத்திரங்களும் தமிழில் பேசுவது படம் பார்க்கும் ரசிகர்களின் வசதிக்காகவே' என்ற கருத்தை விஜய் சேதுபதி மூலம் சொல்லியிருந்தார்கள். இந்த புத்திசாலித்தனம், புதிய சிந்தனை படம் முழுவதும் இருந்திருக்கலாம். இடைவேளை சண்டைக்காட்சி போல இன்னும் இரண்டு சண்டைக் காட்சிகள் இருந்திருக்கலாம். இன்னும் சில 'கலாம்'களுடன் பெரிய முயற்சி, ஆனால் திருப்தியான விளைவு இல்லை என்ற விவேகம், காப்பான், படங்களின் வரிசையில் இணைகிறது 'ஆக்‌ஷன்'.                    
                   

 

 

சார்ந்த செய்திகள்