Skip to main content

ஆக்‌ஷன் கதைக்களம் வெற்றி கிட்டியதா? - மிஷன் சேப்டர் - 1 விமர்சனம்!

Published on 14/01/2024 | Edited on 14/01/2024
mission chapter 1 movie review

அதிக எதிர்பார்ப்பு இல்லாமல் பொங்கல் ரேஸில் சைலன்டாக கலந்து கொண்டிருக்கும் திரைப்படம் மிஷன் சேப்டர் - 1. அவ்வப்போது சறுக்கல்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இயக்குநர் ஏ.எல். விஜய் அதிலிருந்து மீண்டு மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பும் நோக்கில் அருண் விஜய்யோடு கைகோர்த்து இப்படத்துடன் கோதாவில் குதித்திருக்கிறார். இதில் அவருக்கு வெற்றி கிட்டியதா இல்லையா? என்பதை பார்ப்போம்.

மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கும் தன் மகளுக்கு உடனடியாக தலையில் ஆபரேஷன் செய்ய லண்டனுக்கு விரைகிறார் போலீஸ் ஆபிஸர் அருண் விஜய். போன இடத்தில் மகளின் ஆபரேஷனுக்காக பணம் குறைவாக இருப்பதால் ஹவாலா மூலம் பணம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார் அருண் விஜய். அந்த சமயம் சில கொள்ளைக்காரர்கள் அவரிடம் இருக்கும் அடையாள ரூபாய் நோட்டை திருடப் பார்க்கிறார்கள். இதனால் அருண் விஜய்க்கும் அவர்களுக்கும் ஒரு பப்ளிக் பஸ்ஸில் மோதல் ஏற்படுகிறது. அந்த சண்டையில் அருண் விஜய் போலீஸிடம் சிக்கி லண்டன் ஜெயிலுக்கு செல்ல நேர்கிறது. குறித்த நேரத்தில் பணம் கட்டவில்லை என்றால் தன் மகளைக் காப்பாற்ற இயலாத ஒரு சூழ்நிலை அருண் விஜய்க்கு ஏற்படுகிறது. எப்படியாவது ஜெயிலில் இருந்து வெளியேறும் நோக்கில் இருக்கும் அருண் விஜய் எடுக்கும் முயற்சிகளில் தோல்வியே கிடைக்கிறது. இதனால் மிகுந்த ஏமாற்றத்தோடு சோர்ந்த நிலையில் இருக்கும் அருண் விஜய் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் தோல்வியடைந்து விடுகிறது. அந்த நேரம் பார்த்து அதே சிறையில் இருக்கும் தீவிரவாதிகள் சிலர் வெளியே இருக்கும் வேறொரு தீவிரவாதிகளின் உதவியோடு சிறையில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கின்றனர். அந்த முயற்சியை அருண் விஜய் சோலோவாக முறியடிக்கிறார். இதனால் அந்த தீவிரவாதிகளின் பார்வை அருண் விஜய் பக்கம் திரும்புகிறது. இதையடுத்து அருண் விஜய் எப்படி தீவிரவாதிகளை சிறையில் இருந்து தப்பிக்க விடாமல் தடுக்கிறார்? தன் குழந்தையின் ஆபரேஷன் என்னவானது? அக்குழந்தை உயிர் பிழைத்தாரா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு ஆக்சன் படத்தோடு பொங்கல் ரேசில் களம் இறங்கி இருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். அவருக்கு இந்த மிஷின் படம் வெற்றிக்கனியை பறித்துக் கொடுத்ததா என்றால்? ஆம்!! என்று சொல்ல வைத்திருக்கிறது. ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க படத்தை சிறையிலேயே எடுத்து அதையும் சுவாரஸ்யமான திரைக்கதையோடு கொடுத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். கதை புதியதாக இருந்தாலும் அவர் எடுத்துக்கொண்ட திரைக்கதையும் காட்சி அமைப்புகளும் சற்று யூகிக்கும்படி அமைந்திருந்தாலும் படம் ஆரம்பித்தது முதல் இறுதி வரை எந்த ஒரு இடத்திலும் பெரிதாக சோர்வை ஏற்படுத்தாமல் இருப்பது படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. இந்த படம் மூலம் ஏ.எல். விஜய் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். இந்த படம் கிட்டத்தட்ட ஒரே ஒரு சிறைச் சாலையை மட்டுமே மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்தாலும் அவை விறுவிறுப்பாகவும் ரசிக்கும்படி அமைந்திருப்பது பொங்கல் ரேசில் மெதுவாக கலந்து வேகமாக வெற்றிக்கனியை பறித்திருக்கிறது. 

நாயகன் அருண் விஜய் தன் உடல் பொருள் ஆவி என அனைத்தையும் இப்படத்திற்காக கொடுத்து மீண்டும் ஒருமுறை பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். இவரது அர்ப்பணிப்பான நடிப்பும் உடல் மொழியும் படத்திற்கு பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. போலீஸுக்கான அத்தனை விஷயங்களும் இவருக்கு அழகாக அமைந்திருக்கிறது. அந்த அளவு மிடுக்கான தோற்றத்திற்காக தன் உடலை நன்றாக வருத்தி பாடி பில்டிங் செய்திருக்கிறார். இவருடன் இணைந்த நாயகி எமி ஜாக்சன் இந்த முறை ரொமான்ஸ் செய்யாமல் ஆக்‌ஷனிலும் கலக்கியிருக்கிறார். லண்டன் சிறைச்சாலையின் ஜெயிலராக வரும் இவர் ஆரம்பம் முதல் இறுதி வரை பரபரப்பாகவே காணப்படுகிறார். தனக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்தி தமிழ் சினிமாவில் மீண்டும் கம்பேக் கொடுத்திருக்கிறார். சிறையில் அருண் விஜய்யின் நண்பராக வரும் அபி ஹாசன் மனதில் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றிருக்கிறார். அவருக்கு இது ஒரு நல்ல கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. படத்தில் இன்னொரு நாயகியாக வரும் நிமிஷா சஜயன் தன் பங்குக்கு மனதில் பதியும்படியான நடிப்பை வெளிப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். படத்தின் மெயின் நாயகியாக வரும் அருண் விஜய்யின் மகள் சிறுமி பேபி இயல் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். இந்த சிறுமியின் எதார்த்த நடிப்பு படத்திற்கு உயிரூட்டி இருக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறது. நிமிஷா சஜயன் தம்பியாக நடித்திருக்கும் நடிகர், நன்றாக நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். இவர்களுடன் இணைந்து நடித்த மற்ற ஹாலிவுட் நடிகர்களும் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளனர்.

பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசையை சிறப்பாக மீண்டும் ஒருமுறை கையாண்டு படத்திற்கு பக்கபலமாய் அமைத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ். பொதுவாக ஏ.எல். விஜய் கூட்டணியில் இவர் இணையும் படங்களில் பாடல்கள் எல்லாம் மிகச் சிறப்பாக அமையும். ஆனால் கடைசியாக இவர்கள் இணைந்த சில படங்களில் பாடல்கள் சுமார் ரகமாகவே இருக்கின்றன. அது இந்தப் படத்திலும் அப்படியே இருப்பது சற்று மைனஸ் ஆக பார்க்கப்பட்டாலும் பின்னணி இசையில் மாஸ் காட்டி அதை சரி செய்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ். இருந்தும் ரசிகர்கள் மிஸ் செய்யும் விஜய் - ஜிவி பிரகாஷ் காம்போ மீண்டும் ஒரு ஆல்பம் ஹிட் தர இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே தற்போது நிலவுகிறது. இந்தப் படத்தில் இன்னொரு நாயகனாக பார்க்கப்படுவது சந்தீப் கே விஜய்யின் நேர்த்தியான ஒளிப்பதிவு. பொதுவாக ஏ.எல். விஜய் படங்கள் என்றாலே ஒவ்வொரு ஃப்ரேமும் மிக அழகாகத் தென்படும். அனுபவம் வாய்ந்த ஒளிப்பதிவாளர்களை வைத்துக்கொண்டு அவர் செய்யும் மேஜிக்கை இந்த படத்தில் அறிமுக ஒளிப்பதிவாளர் சந்தீப் கே விஜய்யை வைத்துக்கொண்டே அதே மேஜிக்கை நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர் விஜய். படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சந்தீப். அவருடைய உழைப்பு நன்றாக தென்படுகிறது. குறிப்பாக சிறைச்சாலை சம்பந்தப்பட்ட ஆக்‌ஷன் காட்சிகளை மிக சிறப்பாக காட்சிப்படுத்தி படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். அது படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்திருக்கிறது.

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு அதுவும் ஒரே ஒரு சிறைச்சாலைக்குள் நடக்கும் கதையை ஒரு முழு நீளப் படமாகக் கொடுத்து, அதை விறுவிறுப்பாகவும், நேர்த்தியாகவும் திரைக்கதை அமைத்து ரசிக்கும்படி கொடுத்து பொங்கல் ரேஸில் சைலண்டாக ஃப்ரண்ட் ரன்னர் லிஸ்டில் இணைந்திருக்கிறது இந்த மிஷன் சேப்டர் - 1 திரைப்படம்.

மிஷன் சேப்டர் - 1 - இட்ஸ் ஏ.எல். விஜய் கம்பேக்!

சார்ந்த செய்திகள்