அருள்நிதி, துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள 'கழுவேத்தி மூர்க்கன்' படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை சை.கெளதமராஜ் எழுதி இயக்கியுள்ளார். ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக படக்குழுவினரை சந்தித்தோம். படக்குழுவினர் பல்வேறு சுவாரசியமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டனர்.
துஷாரா விஜயன் பேசியதாவது, “சார்பட்டா பரம்பரை படத்தில் என்னுடைய நடிப்புக்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. அருமையான ஒரு உணர்வு அது. கழுவேத்தி மூர்க்கன் படத்தில் நான் செய்துள்ள கவிதா கேரக்டரும் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். எனக்குள் இருக்கும் கேரக்டர்களைத் தான் நான் திரையில் வெளிப்படுத்துகிறேன். அத்தனை கேரக்டர்களிலும் சவால்கள் இருக்கின்றன. இயக்குநர்கள் மனதில் நினைத்த ஒரு கேரக்டருக்கு நாம் உயிர் கொடுப்பது முக்கியமான விஷயம். நான் ஒரு கேரக்டர் செய்யும்போது இன்னொரு படத்தின் கேரக்டர் உள்ளே வராது.
ஊரில் திருவிழா நேரங்களில் மொட்டை மாடியில் உட்கார்ந்து விளையாடிய நினைவுகள் எல்லாம் அருமையானவை. அருள்நிதி என்னிடம் கோபப்பட்டதில்லை. அவர் ஜாலியான மனிதர். அவர் தேர்ந்தெடுக்கும் கதைகள் எப்போதும் சிறப்பானதாக இருக்கும். நான் சமீபத்தில் தான் மாட்டுக்கறி சாப்பிட ஆரம்பித்தேன். நான் மாட்டுக்கறி சாப்பிடுவேன் என்று தெரிவித்ததை வைரல் ஆக்கினார்கள். நான் சிக்கன் சாப்பிட்டேன் என்று சொன்னால் அது சாதாரணமாகவே எடுத்துக்கொள்ளப்படும். மாட்டுக்கறி உண்பதை மட்டும் பெரிய பிரச்சனையாக மாற்றுவது ஏன்?
நான் செய்யும் அனைத்து படங்களையும் விரும்பியே செய்கிறேன். என் சுற்றுப்புறத்தை நன்றாக கவனித்து, என்னைச் சுற்றியிருக்கும் மனிதர்களையே என்னுடைய கேரக்டர்களுக்கான இன்ஸ்பிரேஷனாக எடுத்துக் கொள்கிறேன். கழுவேத்தி மூர்க்கன் பட ஷுட்டிங் உச்சி வெயிலில் தனுஷ்கோடியில் நடந்தது. ஆனால் ரிஸ்கான வேலைகள் அனைத்தையும் செய்தால்தான் நல்ல படம் உருவாகும். சார்பட்டா 2 படம் நடப்பதே அந்தப் படத்தின் போஸ்டர் பார்த்து தான் எனக்குத் தெரியும். அந்தப் படத்தில் நான் இருக்கிறேனா என்பது தெரியவில்லை.