மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அசோக் நகரில் பாரதிதாசன் காலனி உள் பகுதிகளில், குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே விஷ்ணு விஷால், தன்னுடைய வீட்டில் தண்ணீர் புகுந்து விட்டதாகவும் உதவியை எதிர்பார்ப்பதாகவும் பதிவிட்டிருந்தார். பின்பு தீயணைப்பு வீரர்கள் அவரையும் அதே பகுதியில் தனது தாயின் மருத்துவ சிகிச்சைக்காக தங்கியிருந்த பாலிவுட் நடிகர் அமீர் கானையும் மீட்டு வந்தனர். மேலும் அப்பகுதியில் இருக்கும் மக்களை பாதுப்பான இடத்திற்கு அழைத்து சென்றனர்.
இதையடுத்து அஜித் தங்களுக்கு உதவியுள்ளதாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார். மேலும் அஜித் மற்றும் அமீர் கானுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஒரு பொதுவான நண்பரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் மனப்பான்மை கொண்ட அஜித் சார் எங்களைப் பார்க்க வந்தார். எங்களுக்கும், எங்கள் அடுக்குமாடி குடியிருப்பு நண்பர்களுக்கும் போக்குவரத்து உதவிகளை செய்துகொடுத்தார்” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து தங்களுக்கு உதவியவர்களுக்கு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்தார். இதற்கு அமைச்சர் டி.ஆர்.பி ராஜா உதவியவர்களை பாராட்ட, பின்பு அவருக்கும் விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்தார்.