வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. பார்வையாளர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்று ஒரு வாரம் கடந்து திரையில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் இதுவரை ரூ300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் மறைந்த விஜயகாந்தின் உருவத் தோற்றத்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி நடிக்கவைத்துள்ளனர் படக்குழு. இந்நிலையில் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் தேனியிலுள்ள திரையரங்கம் ஒன்றில் ‘தி கோட்’ படத்தை பார்த்துள்ளனர். இவர்களுடன் இணைந்து சரத் குமார் மற்றும் இயக்குநர் பொன்ராம் ஆகியோரும் படம் பார்த்துள்ளனர். அதன் பிறகு விஜய பிரபாகரன் பத்திரிக்கையாளர்களை சந்தித்துள்ளார்.
அப்போது விஜய பிரபாகரன் பேசுகையில், “நானும் என்னுடைய தம்பியும் ‘தி கோட்’ படம் பார்த்தோம். அப்பாவை பார்க்கும் போது அந்த கண், முடி, வாய் எல்லாத்தையும் திகைத்து போய் பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் அவரை பார்ப்பது உண்மையிலேயே மிகவும் சந்தோஷமாக இருந்தது. அப்பா வரும் காட்சிகளை வெங்கட் பிரபு நன்றாக இயக்கியுள்ளார். மேலும் விஜய் நன்றாக நடித்துள்ளார். யுவன் சிறந்த முறையில் இசையமைத்துள்ளார். விஜய் மற்றும் வெங்கட் பிரபு ஆகியோர் எங்க குடும்பத்தில் ஒருவர்கள். ‘நெறஞ்ச மனசு’ படத்தில் வெங்கட் பிரபுவை அப்பா நடிக்கவைத்திருப்பார். எனவே அப்பாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படத்தை எடுத்துள்ளது மிகவும் சந்தோஷமாக இருந்தது. இனிமேல் அப்பாவை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் யார் பயன்படுத்தினாலும் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
அதன் பின்பு பத்திரிக்கையாளர் ஒருவர், “கேப்டனை இப்படத்தில் சரியான முறையில் காட்சிப்படுத்தவில்லை என்பதால் சிலர் பிடிக்கவில்லை என்கிறார்கள்” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு விஜய பிரபாகரன் பதிலளிக்கையில், “அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். படமாக பார்க்கும்போது வெங்கட் பிரபு அவருக்கு ஏற்ற வகையில் காட்சிப்படுத்தியுள்ளார். இன்றைக்கு அப்பா இருந்திருந்தால் கண்டிப்பாக இப்படி நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார். ஏனென்றால் ‘செந்தூர பாண்டி’ படத்தில் நடிக்கும்போது அப்பா பெரிய நடிகராக இருந்தார். அந்த படத்தில் விஜய்யை சண்டை காட்சிகளில் நடிக்கும்போது, எஸ்.ஏ.சந்திரசேகர் அப்பாவை உட்கார சொன்னபோதும்கூட அவர் உட்கார்ந்துதான் இருந்தார். அதனால் கதைக்கு ஏற்ற வகையில்தான் ‘தி கோட்’ படத்தில் அப்பாவை பயன்படுத்தியுள்ளனர். அதனால் இதை பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.
பின்பு விஜய பிரபாகரனிடம் “விஜய் மாநாட்டில் தே.மு.தி.க பங்கேற்குமா” என்ற கேள்வி கேட்டதற்கு அவர், “முதலில் அவர்களுக்கே நிறைய பிரச்சனை உள்ளது. இது அவர்கள் கட்சி மாநாடு. த.வெ.க. கட்சி தே.மு.தி.க. உடன் கூட்டணி வைப்பதற்காக கட்சி ஆரம்பித்துள்ளதுபோல் பேசாதீர்கள் நான் இப்போது படம் பார்க்கத்தான் வந்துள்ளேன்” என்று பதிலளித்தார். சண்முக பாண்டியனும் சரத் குமாரும் பொன்ராம் இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.