Skip to main content

படத்துக்கு எப்படி இவ்ளோ மோசமா பேர் வைக்குறீங்க?" - செய்தியாளர் சந்திப்பில் சலசலப்பு!

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

தமிழ் யூ-ட்யூப் சேனல்களில் பிரபலமான ஒரு சேனல் 'டெம்பிள் மங்கீஸ்'. இந்த சேனலின் மூலம் பிரபலமடைந்து, சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் ஷாரா. இவரது நண்பரும் விஜய் டிவியின் புகழ்பெற்ற 'கனா காணும் காலங்கள்' தொடரில் நடித்தவருமான விஜய் வரதராஜ், 'டெம்பிள் மங்கீஸ்' சேனலை ஷாராவுடன் இணைந்து ஆரம்பித்தவர். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம்தான் 'பல்லு படாம பாத்துக்க'.
 

vijay varatharaj

 

 

இது ஒரு அடல்ட் காமெடி ஜாம்பி படம் என்று படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே தெரிவிக்கப்பட்டது. 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமான தினேஷ் ஹீரோவாக நடிக்க, சஞ்சிதா ஷெட்டி ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் படத்தின் இயக்குனர் விஜய் வரதராஜ், விஜய் டிவி ஜெகன், ஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் இது.

அண்மையில் இப்படத்தின் மோஷன் போஸ்டரும், அதன்பின் படத்தின் டீஸரும் வெளியாகின. இப்படத்தின் டைட்டிலில் தொடங்கி, டீசரும் பலத்த விமர்சனங்களையும் கவனத்தையும் பெற்று வருகின்றன. சமீபத்தில் இப்படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது செய்தியாளர்களில் ஒருவர்,  “எப்படி இவ்வளவு மோசமா ஒரு படத்திற்கு தலைப்பு வைத்திருக்கிறீர்கள்?” என்று இயக்குனர் விஜய்யிடம் கேட்க, அதற்கு அவர் "இல்லை, இது இந்தப் படத்திற்கு தேவைப்பட்டது. அதனால் வைத்திருக்கிறோம்" என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளாக அடுக்கிக்கொண்டுபோக, படத்தின் ஹீரோ உள்ளே வந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கத் தொடங்கினார். அப்போது, "முதலில் நான் படத்தின் தலைப்பை கேட்டவுடன் படம் பண்ண மாட்டேன் என்று சொல்லி அனுப்பிவிட்டேன். அதன்பின் வேறு ஒருவர் படம் பண்ணுவதாக சொல்லப்பட்டு, மீண்டும் எனக்கே அந்த வாய்ப்பு வந்தது. படத்தில் பேசப்பட்டிருக்கும் விஷயங்கள் மிகவும் முக்கியமானவை. அதனால்தான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். படத்தின் தலைப்பை வைத்துதான் படம் நகரும் என்பதால் மட்டுமே இந்த தலைப்பை வைத்திருக்கிறோம்” என்றார். இறுதியாக, “ படத்தின் தலைப்பு பலரை காயப்படுத்திருக்கிறது. அதற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கடுமையான கேள்விகள் கேட்கப்பட, அதற்கு பதிலளிக்க வந்த இயக்குனர் முதலில் சற்று திணறி, பின்னர் தினேஷுடன் இணைந்து பதிலளித்தார். இந்த நிகழ்வு சற்று சலசலப்புடனேயே நடந்து முடிந்தது.

 

 

சார்ந்த செய்திகள்