Skip to main content

சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலை திரைப்படமாக்கும் வெற்றிமாறன்?

Published on 08/12/2022 | Edited on 08/12/2022

 

Vetrimaaran to direct Sahitya Akademi winning novel Sellatha Panam

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் விபத்தில் இறந்தது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.

 

ad

 

இந்நிலையில், நாவல்களைத் தழுவி திரைப்படமாக எடுத்து விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் வெற்றிமாறன், தற்போது மற்றொரு நாவலைத் திரைப்படமாக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் இமையம் எழுதி சாகித்ய அகாடமி விருது வென்ற 'செல்லாத பணம்' நாவலைத் தழுவி வெற்றிமாறன் படமாக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

 

'செல்லாத பணம்' நாவலில் ஒரு திருமணமான பெண்ணின் வாழ்க்கையில் அவரது குடும்பம், சமூகம் போன்றவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பது விரிவாகப் பேசப்பட்டிருக்கும். இதுவரை நாவல்களைத் தழுவி வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை', 'அசுரன்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இயக்கி வரும் 'விடுதலை' படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வருவதும், அடுத்ததாக சூர்யா நடிக்கும் வாடிவாசலும் கூட நாவலைத் தழுவிய கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. 

 


 

சார்ந்த செய்திகள்