தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள படம் 'வீர சிம்ஹா ரெட்டி'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகியுள்ள இப்படத்திற்கு பாலகிருஷ்ணா ரசிகர்கள் வழக்கம்போல பட்டாசு, பேனர் எனக் கொண்டாடினர். அந்த வகையில் அமெரிக்காவில் வர்ஜீனியா மாகாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் 'வீர சிம்ஹா ரெட்டி' படத்தை பாலகிருஷ்ணா ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர். குறிப்பாக பாலகிருஷ்ணா திரையில் தோன்றும் போது ஆரவாரம் செய்து கூச்சலிட்டபடி பேப்பர் துண்டுகளை வீசி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குள்ள திரையரங்கில் இதுபோன்று கொண்டாடுவது முதல் முறை எனச் சொல்லப்படுகிறது. ரசிகர்கள் உற்சாக மிகுதியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால் திரையரங்கு நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு காவல்துறையினர் வந்து இந்த கொண்டாட்டம் எங்கள் நாட்டின் சட்ட திட்டத்திற்கு விரோதமானது என்று கூற உடனே ரசிகர்கள் அமைதியாக வெளியேறினார்கள். இந்த சம்பவம் அங்கு சிறிது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் சியா திரையரங்குகளில் இது போன்ற கொண்டாட்டத்தில் ரசிகர்கள் ஈடுபட்டதால் பல காட்சிகள் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு சம்பவமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அங்கு 'வீர சிம்ஹா ரெட்டி' ஓடிக்கொண்டிருந்த திரையரங்கின் திரையில் திடீரென தீப்பிடித்தது. உற்சாகத்தில் சில ரசிகர்கள் தீ வைத்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் படம் பார்த்துக்கொண்டிருந்த மற்ற ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து வெளியேறிவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.