தரமணி, ராக்கி, அஸ்வின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் வசந்த் ரவி. இதையடுத்து வெப்பன் படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே கண்ட நாள் முதல், கண்ணாமூச்சி ஏனடா உள்ளிட்ட படங்களை இயக்கிய ப்ரியா இயக்கத்தில் பொன் ஒன்று கண்டேன் என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதில் அசோக் செல்வன், மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளதாகவும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்பாராத விதமாக ஒரு தனியார் தொலைக்காட்சி பட ப்ரோமோவை வெளியிட்டது. அதில் திரையரங்கிற்கு முன் சின்னத்திரையில் விரைவில் வெளியாகவுள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வசந்த் ரவி, எங்களிடம் தொடர்பு கொள்ளாமல் சின்னத்திரையில் வெளியாவது குறித்து தனியார் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டூடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு. அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, ப்ரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் பொன் ஒன்று கண்டேன் பட ப்ரோமோவையும் சின்னத்திரையில் வெளியாகவுள்ள அறிவிப்பையும், பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. இந்தப் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை.
நடிகர்களுக்கு தயாரிப்பாளரின் வணிக ரீதியாக எடுக்கும் முடிவுகளில் கருத்து சொல்ல உரிமை இல்லை. ஆனால், அவர்களுக்கு இது போன்ற அறிவிப்புகளை குறைந்தபட்ச மரியாதையாக தெரியப்படுத்துங்கள். இது போல் சமூக வலைத்தளங்கள் மூலமாக அல்ல” என குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து சில மணி நேரங்களில் பட ப்ரோமோவை அந்த தனியார் தொலைகாட்சி நீக்கியுள்ளது.
Shocking !! Is this even True ?? Especially from a reputated and leading production house like @jiostudios.
Extremely painful and disheartening to see the promo of #PonOndruKanden and announcement of World Satellite Premiere without any communication to @AshokSelvan,… https://t.co/Q4HT74G0HZ— Vasanth Ravi (@iamvasanthravi) March 14, 2024