தயாள் பத்மநாபன் இயக்கத்தில் நடிகர்கள் சந்தோஷ் பிரதாப், வரலக்ஷ்மி சரத்குமார், சார்லி, சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'கொன்றால் பாவம்'. இப்படம் வருகிற 10ம் தேதி வெளியாகவுள்ளதால் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினரோடு சரத்குமார் கலந்துகொண்டார்.
அப்போது சரத்குமார் பேசியதாவது, "வரலட்சுமி படித்து முடித்துவிட்டு நடிக்க வேண்டுமா என்று யோசித்தேன். ஒரு படம் நடிக்கிறேன் என்று கேட்டார். அதற்குப் பிறகு அவர் இந்த அளவுக்கு வளர்ந்து நிற்பது எல்லாமே அவருடைய சொந்த முயற்சியில் தான். நிறைய மொழிகள் கற்று வைத்துள்ளார். விரைவிலே ஆங்கிலம் பிரெஞ்சு படங்களில் நடித்தால் கூட ஆச்சரியம் இல்லை. இந்த படத்தில் சார்லியின் நடிப்பை பார்க்கும் பொழுது ஒரு ஈர்ப்பு இருக்கிறது" என்றார்.
நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் பேசியதாவது, "நீண்ட நாட்கள் கழித்து ஒரு கதாநாயகிக்கு முழு நீளமாக நடிக்க வாய்ப்புள்ள ஒரு படம் என்று சொல்வேன். நாம் நிறைய படங்களில் நடிப்போம். ஆனால் திருப்தி என்பது சில படங்களில் தான் கிடைக்கும். அப்படியான ஒரு நிறைவு இந்த படத்தில் எனக்கு கிடைத்தது. இந்த 14 நாட்களும் நாங்கள் எல்லாருமே ஒன்றாகவே இருந்து குடும்பம் போலவே ஆனோம். மூன்று நான்கு டேக் என்று போகாமல் அந்த காட்சிக்கு என்ன தேவையோ அதை மட்டும் மிகச் சரியாக எடுப்பார். தமிழ் சினிமாவுக்கு ஒரு நல்ல இயக்குநர் கிடைத்துள்ளார். சின்ன படம் பெரிய படம் என்பதை எல்லாம் தாண்டி கதைக்காக இந்த படம் வெற்றியடைய வேண்டும் என விரும்புகிறேன். அப்பாவுக்கும் நன்றி. நான் சினிமாவில் வந்த போது அவர் எனக்கு பின்புலமாக இருந்தார். ஆனால் உண்மையிலேயே எந்த பின்புலமும் இல்லாமல் அவர் இந்த உயரத்தை அடைந்திருப்பது என்பது எனக்கு பெருமையான விஷயம்" என்றார்.