Skip to main content

"எனக்கு அறிவித்த விருதை அவர்களுக்கே திருப்பி அளிக்கிறேன்" - கவிப்பேரரசு வைரமுத்து அதிரடி!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

jgjgjg

 

இந்தியாவில் இலக்கியத்திற்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருதுபெற்ற கேரளாவின் பிரபல இலக்கியவாதியும், தேசிய விருதுபெற்ற பாடலாசிரியருமான ஓ.என்.வி பெயரில் கடந்த 2017ஆம் ஆண்டுமுதல் இலக்கியத்திற்காக சிறந்த பங்களிப்பைச் செய்பவர்களுக்கு ஓ.என்.வி விருது வழங்கப்பட்டுவருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஓ.என்.வி விருதுக்கு கவிஞர் வைரமுத்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவ்விருதை மலையாளி அல்லாத கவிஞர் ஒருவர் பெறுவது இதுவே முதல்முறை. விருதுபெறும் வைரமுத்துவுக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில், இதற்கு மலையாள சினிமா உலகில் எதிர்ப்புகள் அதிகரித்தன. இதனால், “ஓ.என்.வி இலக்கிய விருது குறித்து மறுபரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம்” என ஓ.என்.வி கலாச்சார அகாடமி அறிக்கை வெளியிட்டது. இதற்குத் தமிழ்த் திரையுலகில் கண்டனங்கள் எழுந்த நிலையில், இந்த விருதைத் திருப்பித் தருவதாக கவிப்பேரரசு வைரமுத்து வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளார். அதில்...

 

"அனைவரையும் வணங்குகிறேன். கேரள மாநிலத்தின் பெருமைமிக்க ஓ.என்.வி இலக்கிய விருது இந்த ஆண்டு எனக்கு வழங்கப்படுவதாக ஓ.என்.வி கல்சுரல் அகாடமி அறிவித்தது. நானும் நன்றி பாராட்டி வரவேற்றேன். ஆனால், காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலபேரின் குறுக்கீட்டினால் அந்த விருது மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாய் அறிகிறேன். இது என்னையும் கவிஞர் ஓ.என்.வி குரூப்பையும் சிறுமைப்படுத்துவதாகுமோ என்று சிந்தையழிகிறேன். அறிவார்ந்த நடுவர் குழுவும் இக்கட்டான சூழலுக்குத் தள்ளப்பட்டுவிடக்கூடாதே என்றும் தவிக்கிறேன். அதனால் சர்ச்சைகளுக்கிடையே இந்த விருதைப் பெறுவதை நான் தவிர்க்கவே விரும்புகிறேன். ஒன்றுமட்டும் உறுதியாகச் சொல்கிறேன். நான் மிக மிக உண்மையாய் இருக்கிறேன். என் உண்மையை யாரும் உரசிப் பார்க்கத் தேவையில்லை. அதனால் திட்டவட்டமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன். அதை மிகுந்த தெளிவோடும் அன்போடும் அறிவிக்கிறேன். 

 

ஓ.என்.வி இலக்கிய விருது அறிவிப்பை நான் ஓ.என்.வி கல்சுரல் அகாடமிக்கே திருப்பி அளிக்கிறேன். எனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகை ரூபாய் 3 லட்சத்தைக் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதியில் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். மற்றும் மலையாள மண்மீதும் மக்கள்மீதும் நான் கொண்டிருக்கும் அன்பின் அடையாளமாக என்னுடைய பங்குத்தொகையாக ரூபாய் 2 லட்சத்தைக் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தனிப்பட்ட முறையில் நான் வழங்குகிறேன். தமிழுக்கும் மலையாளத்துக்குமான சகோதர உறவு தழைக்கட்டும். இந்த விருது அறிவிப்பைக் கேட்டு என்னைப் பேருள்ளத்தோடு வாழ்த்திப் பெருமைசெய்த தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும், உள்ளன்போடு வாழ்த்திய உலகத் தமிழர்களுக்கும், ஊடக உறவுகளுக்கும் என் நன்றி" என கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Peruntamil award to poet Vairamuthu

கவிஞர் வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்காகப் பெருந்தமிழ் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ‘மகா கவிதை’ நூல் வெளியீட்டு விழா கடந்த ஜனவரி 1 ஆம் தேதி (01.01.2024) நடைபெற்றது. இந்த நூலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பெற்றுக் கொண்டார். இந்த நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நூலில் பூதம், திசை, காலம், திணை, பூமி ஆகிய தலைப்புகளில் வைரமுத்து கவிதைகளைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் மகா கவிதை நூலுக்காக கவிஞர் வைரமுத்துவுக்கு ‘பெருந்தமிழ்’ விருது வழங்கப்பட்டுள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற விழாவில் மலேசிய தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து வைரமுத்துவுக்கு இந்த விருதை வழங்கியுள்ளது. இந்த விழா டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஷ்வரன் தலைமையில், டத்தோஸ்ரீ எம். சரவணன் முன்னிலையில் நடைபெற்றது. 

Next Story

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் வைரமுத்து சந்திப்பு!

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

தமிழக முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினின் 71வது பிறந்தநாள் இன்று (01.03.2024) கொண்டாடப்பட்டது. இதற்காகப் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் நலத்திட்ட உதவிகள், உணவு வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தி.மு.க. தலைமை சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கலைஞரின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.

அதே சமயம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி. வேல்முருகன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு. செல்வப்பெருந்தகை, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் என். கண்ணையா ஆகியோர் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர்.

அதேபோன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளுக்கு பல்வேறு தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்துகளை சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், கேரள முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Vairamuthu meeting with Tamil Nadu Chief Minister M.K.Stalin

மேலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மாரியென வாழ்த்துகளைப் பொழிந்த அனைவருக்கும் நன்றி. பேரன்பொழுக என்னை வாழ்த்த வந்த உடன்பிறப்புகளே... தலைமைத் தொண்டனாய் என்றும் உங்களுக்குத் தொண்டாற்றுவதே நான் செய்யும் நன்றியெனக் கடமையாற்றுவேன்” எனக் குறிப்பிட்டு காணொளி ஒன்றையும் இணைத்திருந்தார். இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலினை கவிப்பேரரசு வைரமுத்து நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.